Ad

செவ்வாய், 30 மார்ச், 2021

15 கோடிப்பே… பெங்களூரு அணியின் வெற்றிடத்தை நிரப்புவாரா கைல் ஜேமிசன்?! #Jamieson

எப்படியாவது கோப்பையை வென்றுவிடவேண்டும் என்ற கனவோடு 14-வது முறையாக ஐபிஎல் அரங்கில் கால் பதிக்கப்போகிறது ஆர்சிபி. மிகப்பெரிய வீரர்கள் இருந்தாலும் ஒவ்வொரு முறையும் சொதப்பிவிடுகிறது பெங்களூரு அணி. அதற்கு முக்கியக் காரணமாக பெரும்பாலும் பேசப்படுவது அவர்களின் பந்துவீச்சு. 5 பௌலர்கள் சிறப்பாகச் செயல்படும்போதுதான் ஒரு அணியால் கோப்பை வெல்ல முடியும். ஆனால், இங்கு எப்போதும் ஒன்றிரண்டு பௌலர்கள் மட்டுமே ஜொலிப்பார்கள். சமீபத்தில் சஹால் மட்டுமே அவர்களின் நம்பிக்கையாக விளங்குகிறார். இந்த சீசன், சஹாலுக்கு பக்கபலமாகவும், ஆர்சிபி-யின் பிரதான பலமாகவும் உருவெடுக்க காத்துக்கொண்டிருக்கிறார் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கைல் ஜேமிசன்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் அறிமுகம் ஆனார் ஜேமிசன். 6 அடி 8 அங்குலம் இருந்த அவர் தன் உயரத்தைப் பயன்படுத்தி பௌன்சர்களால் பேட்ஸ்மேன்களை மிரட்டினார். குறிப்பாக இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் தன் வேகத்தாலும், பௌன்சராலும் விக்கெட்டுகளை அள்ளிக்கொண்டே இருந்தார். தன் முதல் டெஸ்ட் இன்னிங்ஸிலேயே 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அதிலும் புஜாரா, கோலி ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றித்தான் தன் டெஸ்ட் கரியரையே தொடங்கினார் இவர்.

Kyle Jamieson

இரண்டாவது போட்டியில் இன்னும் ஒரு படி மேலேபோய் ஆட்டநாயகன் விருதும் வென்றார். முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் தோல்விக்கு மிகமுக்கியக் காரணமாக அமைந்தார் அவர். அதிலிருந்தே அவர் மீது வெளிச்சம் படரத் தொடங்கியது. அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 11 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகளில் 16 விக்கெட்டுகள். அதிலும், இரண்டாவது டெஸ்ட்டில் மட்டுமே 11 விக்கெட்டுகள்! உலகின் மிகச் சிறந்த டெஸ்ட் பௌலர்களுள் ஒருவராகப் பேசப்படத் தொடங்கினார் ஜேமிசன்.

ஜேமிசன் பெருமை பரவலாக கிரிக்கெட் உலகில் பரவ, ஐபிஎல் ஏலம் தொடங்குவதற்கு முன்பிருந்தே அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஏலத்தில் எப்படியும் பெரும் தொகைக்குப் போவார் என்று முன்னாள் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவருமே எதிர்பார்த்தனர். ஆனால், 15 கோடி ரூபாய்க்குப் போவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

Kyle Jamieson

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கிரிக்கெட் இயக்குநர் மைக் ஹெசன் நியூசிலாந்தைச் சேர்ந்தவர் என்பதால், ஜேமிசனை வாங்கவேண்டும் என்று முன்பே முடிவு செய்திருந்திருக்கிறார். ஜேமிசன் பெயர் ஏலத்தின்போது திரையில் தெரிந்ததும் 75 லட்ச ரூபாய்க்கு ஏலத்தைத் தொடங்கியது பெங்களூருதான். டெல்லி கேபிடல்ஸ் அவர்களோடு போட்டியிட, 9 கோடி வரை சென்றது அவர் மதிப்பு. டெல்லி ஒதுங்கியதும் பஞ்சாப் கோதாவில் குதிக்க, இறுதியாக 15 கோடி ரூபாய்க்கு இந்த 26 வயது பௌலரை வாங்கியது ஆர்சிபி.

மிட்செல் ஸ்டார்க்குக்குப் பிறகு அந்த அணிக்கு சரியான வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள் அமையவில்லை. கிறிஸ் ஜோர்டன், தைமல் மில்ஸ், ஆடம் மில்னே, டிம் சௌதி, டேல் ஸ்டெய்ன், இசுரு உடானா என அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். கோடிகள் கொட்டி எடுத்தும் ஒருவரும் அவர்களுக்கு சிறப்பான பங்களிப்பைத் தரவில்லை. ஜேமிசன் அந்தக் குறையைப் போக்குவார் என்று அணி நிர்வாகமும் ரசிகர்களும் நம்புகிறார்கள்.

Kyle Jamieson

அதேசமயம் ஜேமிசனின் டி-20 செயல்பாடு விமர்சனத்துக்குள்ளானது. டெஸ்ட் அரங்கில் மிரட்டினாலும், ஒருநாள், டி-20 போட்டிகளில் அவர் செயல்பாடு சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. இதுவரை ஆடிய 8 சர்வதேச டி-20 போட்டிகளில் மொத்தம் 4 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். குறிப்பாக சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரில், 4 போட்டிகளில் 1 விக்கெட் மட்டுமே எடுத்தார். போதாதற்கு ரன்களையும் வாரி வழங்கினார். 15 ஓவர்களில் 175 ரன்களை அள்ளிக் கொடுத்தார் அவர். எக்கானமி - 11.66!

இந்தத் தொடரில் ஜேமிசனின் செயல்பாடு குறித்துப் பேசிய மைக் ஹெசன், “ஒருசில போட்டிகளை மட்டும் வைத்து ஒரு வீரரை மதிப்பிட்டுவிட முடியாது. அவரிடம் என்ன குணாதிசியங்கள் இருக்கிறது என்பது முக்கியம். லைன் & லென்த் பிடிப்பதில் கொஞ்சம் சிரமப்பட்டிருக்கிறார். சர்வதேச அரங்கில் முதன்முறையாக் ஆடும்போது கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். ஒருவகையில் அதுவும் நல்லதுதான். போராடும் குணம் கொண்டவர் அவர். நல்ல மனிதர்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள். அவர் நிச்சயம் இதிலிருந்து மீண்டு வருவார். எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை” என்று சொல்லியிருக்கிறார்.

Kyle Jamieson

அந்தத் தொடரில் அவரது செயல்பாடு விமர்சனத்துக்குள்ளானது ஒரு பக்கம் இருக்க, ஜேமிசன் நியூசிலாந்துக்கு வெளியே இன்னும் சர்வதேசப் போட்டிகளில் ஆடவில்லை என்பதையும் நாம் கவனிக்கவேண்டியிருக்கிறது. இதுவரை 6 டெஸ்ட், 5 ஒருநாள், 8 டி-20 என 19 சர்வதேச போட்டிகளில் அவர் ஆடியிருக்கிறார். அவை அனைத்துமே நியூசிலாந்தில் நடந்தவை. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான நியூசிலாந்து ஆடுகளங்களில் சிறப்பாகச் செயல்பட்ட அவரால், இந்திய ஆடுகளங்களில் தாக்குப்பிடிக்க முடியுமா என்பது சந்தேகமே!

Also Read: இம்ரான் தாஹிர்... இந்தப் பராசக்தி எக்ஸ்பிரஸுக்கு ஓய்வே கிடையாது! #HBDImranTahir

இந்திய ஆடுகளங்களில் தன் திறமையை ஜேமிசன் காட்டிவிட்டால், இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிவிட்டால், நிச்சயம் உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக உருவெடுத்துவிடுவார்.

ஆக்லாந்தில் பிறந்தவரான ஜேமிசன், 2014 அண்டர் 19 உலகக் கோப்பையில் விளையாடியிருக்கிறார். அந்த உலகக் கோப்பையில்தான் ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ் போன்றவர்களும் விளையாடினார்கள். 2012-ம் ஆண்டு வரை அவர் பேட்டிங் ஆல்ரவுண்டராக இருந்திருக்கிறார். அதன்பிறகுதான் அவர் பயிற்சியாளர் பௌலிங்கில் இவரை கவனம் செலுத்த வைத்திருக்கிறார். நியூசிலாந்தின் டி-20 தொடரான சூப்பர் ஸ்மேஷ் லீகில், ஆக்லாந்து ஏசஸ் அணிக்கெதிராக 4 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் ஜேமிசன். நியூசிலாந்தின் மிகச் சிறந்த டி-20 ஸ்பெல் அதுதான்!



source https://sports.vikatan.com/ipl/is-kyle-jamieson-answer-to-rcbs-pace-problems

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக