Ad

புதன், 31 மார்ச், 2021

மதுரை:`ஒவ்வொரு வீட்டு மொய் நோட்டிலும் என் பெயர் உள்ளது’- டஃப் கொடுக்கும் சுயேச்சை கிரம்மர் சுரேஷ்!

மதுரை அ.தி.மு.க-வில் முக்கியமானவரான கிரம்மர் சுரேஷ், தன்னுடைய வித்தியாசமான போஸ்டர்கள் மூலம் மக்களை மட்டுமல்ல, ஜெயலலிதாவின் கவனத்தையும் ஈர்த்தவர். சமீபகாலம் வரை செல்லூர் ராஜூக்கு நெருக்கமானவராக வலம் வந்தவர் தற்போது சுயேச்சையாக களம் இறங்கியுள்ளதுதான் மதுரை அரசியலில் பரபரப்புப் பேச்சு.

கிரம்மர் சுரேஷ்

கட்சியில் உழைக்கும் உண்மையான தொண்டர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காமலும், தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்களை நிறுத்துவதை எதிர்க்கும் விதமாகவும் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்த கிரம்மர் சுரேஷ், தற்போது தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்த முடிவை எடுப்பதற்கு முன் கட்சியில் தான் வகித்த இளைஞர் அணி மாநில இணைச்செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்தார்.

மத்திய தொகுதியின் சிட்டிங் தி.மு.க எம்.எல்.ஏ பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் பசும்பொன் தேசிய கழகத்தைச் சேர்ந்த ஜோதி ராமலிங்கத்துக்கு அ.தி.மு.க நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுக்காத நிலையில், அந்த வேட்பாளரை இன்னும் பலவீனமாக்கும் வகையில் கிரம்மரின் பிரசாரமும் அவருக்கு கிடைக்கும் வரவேற்பும் அ.தி.மு.க தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மறைந்த சபாநாயகர் பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் மீது பெரும் மரியாதை வைத்திருப்பதால், தற்போது பி.டி.ஆர். தியாகராஜன் ரிஸ்க் இல்லாமல் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக, கிரம்மர் சுரேஷ் போட்டியிடுகிறார் என்று அ.தி.மு.க தரப்பிலும், 'இல்லை, பி.டி.ஆருக்கு விழும் சமூகம் சார்ந்த வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகளில் சேதத்தை ஏற்படுத்த, செல்லூர் ராஜூவின் ஏற்பாட்டின்படி போட்டியிடுகிறார்’ என்று தி.மு.க-வினரும் மாறிமாறி கிரம்மர் மீது குற்றம்சாட்டி வருகிறார்கள்.

கிரம்மர் சுரேஷ்

இந்த நிலையில் தொப்பி சின்னத்துக்கு வாக்கு கேட்டு தீவிர பிரசாரம் செய்து வரும் கிரம்மர் சுரேஷிடம் இது குறித்து பேசினோம். அவர், ``வாக்குகளை பிரிப்பதற்காக நான் போட்டியிடவில்லை. அதற்கான அவசியமும் எனக்கில்லை. காலம் முழுவதும் கொடி பிடித்தும், வழக்குகளை சந்தித்தும் ரத்தம் சிந்தி உழைக்கும் கட்சிக்காரர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் யாருக்கோ வழங்குவது ஏன் என்பதை தலைமைக்கு உணர்த்துவதற்காகத்தான் மக்கள் சார்பில் நான் போட்டியிடுகிறேன். நான் நிற்பதால் அ.தி.மு.க, தி.மு.க-வுக்கு விழும் வாக்குகள் பிரிந்துவிடும் என்று சிலர் சொல்வதை கண்டுகொள்ளவில்லை. இப்பகுதி மக்கள் என்னை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் போட்டியிடுகிறேன்.

இன்னொரு விஷயம், தேர்தலில் சீட் கிடைக்கவில்லை என்பதற்காக போட்டியிடுவதாக பலர் நினைக்கிறார்கள். அது தவறு; விருப்ப மனுவே கொடுக்காமல்தான் இருந்தேன். அமைச்சர் செல்லூர் ராஜூதான் வற்புறுத்தி விருப்ப மனு அளிக்கச் சொன்னார். அதனால் மனு அளித்தேன். ஆனால், ஏற்கனவே வேட்பாளர் பட்டியலை தயார் செய்து வைத்துவிட்டு கண்துடைப்புக்காக நேர்காணல் நடத்தினார்கள். இதுமாதிரி ஒரு நேர்காணல் வேறு எங்கும் நடந்திருக்காது. விருப்ப மனு அளித்தவர்களை கும்பல் கும்பலாக உள்ளே வரச்சொன்னார்கள். பந்திக்கு முண்டியடித்து செல்வதுபோல் சென்ற பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி நொந்து நூலானார்கள். இப்படித்தான் நடந்தது நேர்காணல்.

கிரம்மர் சுரேஷ்

எனக்கு சீட் கொடுக்க வலியுறுத்தவில்லை என்பதற்காக அமைச்சர் செல்லூர் ராஜூ மீது வருத்தமில்லை. ஆனால், மத்திய தொகுதியில் யாருக்கு சீட் கொடுத்தால் சரியாக இருக்கும் என்பதை தலைமை விசாரித்திருக்கலாம். எனக்கு தராவிட்டாலும் இதே தொகுதியில் கட்சிக்காக உழைத்த ஒருவருக்கு கொடுத்திருக்கலாம். அதை விட்டுவிட்டு இந்த தொகுதிக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லாத நபரைக் கூட்டணி கட்சி என்ற பெயரில் போட்டியிட சீட் வழங்கியிருக்கிறார்கள். கேட்டால், இவர் கட்சித் தலைமையில் உள்ளவரின் ஆதரவை பெற்றவர் என்கிறார்கள்.

யாராக இருந்தாலும் கட்சிக்குத்தான் ஆதரவாளராக இருக்கமுடியும். தலைமையில் உள்ளவர்களுக்கு ஆதரவாளராக எப்படி இருக்க முடியும்? அப்படி இருப்பதற்கு என்ன தகுதி வேண்டும் என்று தெரியவில்லை. எனக்கு கூழைக்கும்பிடு போடப் பிடிக்காது. காக்கா பிடிக்கத் தெரியாது. சுயமரியாதையோடு வாழ்ந்து வருபவன். கட்சியை வைத்தோ, அமைச்சரை வைத்தோ ஆதாயம் தேட விரும்புகிறவன் அல்ல. ஆளும் கட்சி நிர்வாகிகள் வருமானத்துக்காக மதுக்கடை பார் நடத்துவார்கள். நானோ, ஓடாமல் மூடிக் கிடந்த ஆவின் பார்லரை எடுத்து நடத்துகிறேன்.

தி.மு.க-வில் இருந்த நான் பெரிதும் மதிக்கும் பி.டி.ஆர் அய்யா மறைவுக்குப்பின் நடந்த தேர்தலில் அவர் குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் தராததால் ஆவேசப்பட்டு ஆளும்கட்சியான தி.மு.க-விலிருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்தேன். அந்தளவுக்கு அறச்சீற்றம் கொண்டவன்.

மக்களுக்கு சேவை செய்வதை வாழ்க்கையாக்கிக் கொண்டவன் நான். இன்றுவரை ஆதரவற்றவர்களுக்கும், எளிய மக்களுக்கும் பல வகையில் உதவி வருகிறேன். அதுபோல் கட்சியிலும் விசுவாசமாக இருந்தேன். கட்சி சொன்ன வேலைகள் அனைத்தையும் செய்தேன். என்னால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டதில்லை.

தாய் தந்தை இல்லாத பிள்ளைகள் உயர் கல்வி வரை பயிலும் செலவை ஏற்று வருகிறேன். மாற்றுத் திறனாளிகளுக்கு வாகனங்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். ஆதரவற்ற பெரியவர்கள் 150 பேருக்கு தினமும் தரமான உணவு அளித்து வருகிறேன். ஆண்டுதோறும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறேன். என்னை கவனித்துக்கொண்ட தாயாரும் இரண்டு வருடங்களுக்கு முன் மறைந்துவிட்டார். எனக்கென்று தனியாக குடும்பம் இல்லை. நான் இந்த பகுதி மக்களுக்காக சேவை செய்து இங்கேயே மரணித்து விடுவேன். இதுதான் என் வாழ்க்கை.

அ.தி.மு.க-வுக்கு வந்த பின்பு தி.மு.க ஆட்சியில் பல வழக்குகள் என் மீது போட்டார்கள். அனைத்தையும் எதிர்கொண்டேன். அதில் சில வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி என ஒவ்வொரு தேர்தலின் போதும் வாய்ப்பு கேட்டிருக்கிறேன். என்னவோ தெரியவில்லை, கடைசி நேரத்தில் என்னை மறந்து விடுவார்கள்.

இம்முறை எனக்கு சீட் கிடைக்கவில்லை என்பதற்காக வருத்தப்படவில்லை. இத்தொகுதியை சேர்ந்த கட்சியினரை தலைமை மறந்து விட்டதால், கொந்தளித்துப்போன மக்களின் பிரதிநிதியாக நான் போட்டியிடுகிறேன். கொள்கை, திட்டத்தை சொல்லி வாக்கு கேட்காமல் பணத்தை கொடுத்து வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சியினர் உள்ளனர். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேலைக்காக மட்டுமே கட்சியினரை பயன்படுத்தும் மோசமான கலாச்சாரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். தேர்தல் முடிந்தவுடன் இவர்களை மறந்து விடுவார்கள். இதையெல்லாம் மாற்ற வேண்டும்.

கிரம்மர் சுரேஷ்

மக்களிடம் சென்று வாக்கு கேட்க அனைத்து தகுதியும் எனக்கு உள்ளது. அவர்கள் குடும்பத்தில் ஒருவன். ஒவ்வொரு வீட்டு மொய் நோட்டிலும் என் பெயர் உள்ளது. இதுபோல் இத்தொகுதியில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள் பெயர் இருக்கிறதா என்று கேட்டுச் சொல்லுங்கள். நான் வெற்றி பெற்றால் தொகுதியிலுள்ள ஒவ்வொரு வார்டிலும் மூன்று மாதம் வீடெடுத்து தங்கி அங்குள்ள பிரச்சனைகளை சரி செய்துவிட்டு அடுத்த வார்டுக்கு சென்றுவிடும் திட்டம் உள்ளது. ஒப்பந்த வேலைகள் அனைத்தையும் கண்காணிக்க தொகுதி மக்களைக் கொண்ட குழுக்களை அமைப்பேன். இதுபோல பல திட்டங்கள் இருக்கிறது. என்னைக் கொண்டாடும் மக்கள், எனக்கு ஆதரவு அளிக்கிறார்களா என்பதை பார்க்க இந்தத் தேர்தல் ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறது'' என்றார்.

மதுரை மத்திய தொகுதியில் கிரம்மர், வின்னரா? ரன்னரா? ஃபன்னரா ? என்பது விரைவில் தெரிந்து விடும்.



source https://www.vikatan.com/news/politics/krammer-suresh-to-contest-independent-in-madurai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக