Ad

செவ்வாய், 30 மார்ச், 2021

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 - ஜூனியர் விகடன் மெகா சர்வே முடிவுகள் - நாளை காலை 7 மணிக்கு வெளியீடு

தமிழகம் இப்படியொரு சட்டமன்றத் தேர்தலை இதற்கு முன்னர் சந்தித்திருக்கவில்லை. ஜெயலலிதா, கருணாநிதி என்கிற இருபெரும் ஆளுமைகள் இல்லாமல் இரண்டு கழகங்களும் எதிர்கொள்ளும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது. புதிதாகக் களத்துக்கு வந்திருக்கும் அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் கட்சிகளின் தாக்கம் களத்தையே மாற்றியமைத்திருக்கிறது. மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன், கமல்ஹாசன், சீமான் என ஐந்து முதல்வர் வேட்பாளர்கள் தமிழகத்தின் குறுக்கும் நெடுக்குமாக வலம்வந்து பிரசாரம் செய்கிறார்கள்.

ஜூனியர் விகடன் சர்வே

தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள், 6.36 கோடி பேர். ஆண் வாக்காளர்கள் 3.08 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 3.18 கோடி பேரும் உள்ளனர். இவர்களில், முதன்முறையாக வாக்களிக்க இருக்கும் 8.97 லட்சம் இளைஞர்களும் அடக்கம்.

இந்த 2021 சட்டமன்றத் தேர்தல் களத்தில், மக்களின் நாடித்துடிப்பை அறிவதற்காகக் களமிறங்கியது ஜூனியர் விகடன். 468 தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், 117 நிருபர்கள் எனப் பெரும் படையே சென்று 234 தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு நடத்தியது.

விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், இல்லத்தரசிகள், வியாபாரிகள், தொழிலதிபர்கள், திருநங்கைகள் எனப் பல்வேறு தரப்பிலும் சுமார் 50,000 வாக்காளர்களிடம் இந்த மெகா கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

சர்வதேச அளவில் அறிவியல்பூர்வமாக பின்பற்றப்படும் விதிகளின் அடிப்படையில் இந்தக் கருத்துக் கணிப்புக்கு ஒவ்வொரு தொகுதியிலும் கவனமாக வாக்காளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பாலின விகிதம், வயது, வசிக்கும் பகுதி கிராமமா, நகரமா என்ற அடிப்படையில் வாக்காளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வாக்காளர்களின் மனநிலையைத் தெளிவாக அறியும் வகையில் கருத்துக்கணிப்பு படிவம், ஏழு கேள்விகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையா... யார் முதல்வராக வர வேண்டுமென விரும்புகிறீர்கள்... தமிழகத்தில் எந்தக் கட்சி/கூட்டணி வெற்றி பெறும்... எதிர்காலத்தில் யார் முக்கியத் தலைவராக இருப்பார்... யாருக்கு வாக்களிக்க விரும்புகிறீர்கள்... தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும்... உங்கள் தொகுதியில் எந்தக் கட்சி ஜெயிக்கும் ஆகியவையே அந்தக் கேள்விகள்.

பல தொகுதிகளிலும் வித்தியாசமான கணக்குகளும், விநோதமான பிரச்னைகளும் தேர்தல் முடிவுகளையே மாற்றுவதாக இருக்கும் சூழலில், இந்தக் கருத்துக்கணிப்பு சவாலானதாகவே இருந்தது. அதேசமயத்தில், சுவாரசியங்களுக்கும் பஞ்சமில்லை.

அடுத்த 5 ஆண்டுகள் தமிழகத்தை நிர்வகிக்கப் போகும் பிரதிநிதியாக யார் வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறீர்கள் தானே?! ஜூனியர் விகடன் நடத்திய இந்த மெகா சர்வே முடிவுகள் நாளை காலை வெளியாகின்றன. நாளை காலை 7 மணிக்கு Vikatan.com இணையதளம், Vikatan Tv Youtube சேனல் மற்றும் உங்கள் அருகில் இருக்கும் கடைகளில் நாளை விற்பனைக்கு வரும் ஜூனியர் விகடன் சிறப்பிதழில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/tn-election-2021-junior-vikatan-survey-results

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக