Ad

செவ்வாய், 30 மார்ச், 2021

அஷ்வின், ரஹானேவிடம் இல்லாத ஒன்று... டெல்லியின் கேப்டனாக ரிஷப் பன்ட் தேர்வுசெய்யப்பட்டது ஏன்?!

23 வயது இளம் வீரர் ரிஷப் பன்ட்டை கேப்டனாக்கியிருக்கிறது டெல்லி கேபிடல்ஸ். அணியின் பயிற்சியாளர் ரிக்கி பான்ட்டிங் அனுபவம் வாய்ந்த வீரரை கேப்டனாக்கலாம் என்கிற யோசனையை அணி உரிமையாளர்கள் மறுக்க, பன்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ரஹானே, அஷ்வின் என நான்கு முன்னாள் கேப்டன்கள் இருக்கும் ஒரு அணிக்குத் தலைமையேற்க இருக்கிறார் ரிஷப் பன்ட்.

ரிஷப் பன்ட் கேப்டன் ஆனதன் பின்னணி என்ன?!

ஷ்ரேயாஸ் காயம் காரணமாக இந்த ஐபிஎல் சீசனிலிருந்து விலகியதால், அடுத்த கேப்டனாக டெல்லி அணி யாரை நியமிக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. தலைமைப் பண்புடைய வீரரை தேர்ந்தெடுக்க டெல்லி அணி பெரிதாக சிரத்தை எடுக்க வேண்டிய தேவை இல்லாமல்தான் இருந்தது. ஏனெனில், கேப்டன் பதவியை ஏற்கும் அளவுக்கான பக்குவம் பெற்ற வீரர்கள் அங்கே அதிகம் பேர் இருந்தனர்.

ரவிச்சந்திரன் அஷ்வின், அஜிங்கியா ரஹானே, ஸ்டீவ் ஸ்மித், ஷிகர் தவான் போன்ற சீனியர் வீரர்கள் கேப்டன் பதவிக்கான ரேஸில் இருந்தனர். ஆஸ்திரேலிய வீரர் என்பதால் ரிக்கி பான்ட்டிங்கின் ஆதரவும் ஸ்டீவ் ஸ்மித்துக்கு இருந்தது. ஆனால், ஸ்மித்தின் சமீபத்திய ட்ராக் ரெக்கார்டுகள் அவருக்கு சாதகமாக இல்லை.

ரிஷப் பன்ட்

ராஜஸ்தான் அணியை கடந்த முறை மிக மோசமாக வழிநடத்தியிருந்தார் ஸ்மித். 14 போட்டிகளில் 6 போட்டிகளில் மட்டுமே வென்று ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தையே பெற்றது. ஒரு நிலையான ப்ளேயிங் லெவனை கூட ஸ்மித்தால் உருவாக்க முடியவில்லை. அதன் விளைவாக, ராஜஸ்தான் அணியே அவரை விடுவித்தது.

இப்போது டெல்லி அணி அவருக்கான இடத்தை கொடுத்திருக்கிறது. ஆனாலும் தோல்விகரமான கேப்டனாக இன்னொரு அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட வீரருக்கு கேப்டன் பதவியை தூக்கிக் கொடுப்பதற்கு டெல்லி நிர்வாகம் தயங்கியது. மேலும், 4 வெளிநாட்டு வீரர்களுக்கான ஸ்லாட்டில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு இடம் கிடைக்குமா என்பதும் சந்தேகம்தான். ப்ளேயிங் லெவனிலேயே இடமில்லாத வீரரை கேப்டனாக்கி அணியின் காம்பினேஷனை மொத்தமாக குழப்பிக் கொள்ள எந்த அணியும் தயாராக இருக்காது. அவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கும் அளவுக்கு ஸ்டீவ் ஸ்மித்தின் ரெக்கார்டுகளும் சாதகமாக இல்லை.

ஷிகர் தவானின் பெயரும் கேப்டன் பதவிக்காக பரீசிலிக்கப்பட்டது. அவர் கடந்த சீசனில் சிறப்பாக ஆடியிருந்தாலும், கேப்டன்ஸியில் அவருக்கு பெரிய அனுபவங்கள் இல்லை. இதன் காரணமாக அவர் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்.

தமிழக வீரரான அஷ்வின் கேப்டன்ஸிக்கான ரேஸில் மிக முக்கிய வீரராக இருந்தார். சீனியர் வீரராக, ஆடிய எல்லா அணிகளுக்குமே துருப்புச்சீட்டாக இருந்திருக்கிறார் அஷ்வின். கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல் சிறந்த அனலிஸ்ட்டாகவும், ஆட்டத்தின் போக்கை சரியாகக் கணிக்கக்கூடிய பலமும் அஷ்வினுக்கு உண்டு. கடந்த முறை டெல்லி அணிக்காக கூட சிறப்பாக பந்துவீசியிருந்தார்.

ஒரு கேப்டனுக்கான எல்லா ஆளுமைத்தன்மைகளும் அஷ்வினிடம் உண்டு. மேலும், ஐபிஎல் கேப்டன்சியிலும் அவருக்கு முன் அனுபவம் இருக்கிறது. பஞ்சாப் அணியை இரண்டு சீசன்களில் வழிநடத்தியிருக்கிறார். ஆனால், அந்த இரண்டு சீசன்களிலுமே பஞ்சாப் அணி பெரிதாக வெற்றிபெறவில்லை என்பது அஷ்வினுக்கான மைனஸாக இருந்தது. மேலும், அஷ்வின் அணி நிர்வாகம், பயிற்சியாளர், சீனியர்கள் சொல்வதைக் கேட்டு உடனடியாக முடிவுகளை எடுப்பாரா என்பதிலும் சந்தேகங்கள் இருந்திருக்கிறது.

இந்திய அணி வீரர்களுடன் ரிஷப் பன்ட்

அஜிங்கியா ரஹானேவை பொறுத்தவரை, கடந்த முறை அவருக்கு ப்ளேயிங் லெவனில் இடம் கிடைப்பதே பெரும்பாடாக இருந்தது. ஆனால், இந்த முறை ஷ்ரேயாஸ் காயமடைந்திருப்பதால் டாப் ஆர்டரில் ரஹானேவுக்கு ஒரு இடம் உறுதியாக இருக்கிறது. கூடவே, கேப்டன் பதவியையும் கொடுப்பார்களா என்பதே கேள்வியாக இருந்தது. கேப்டனாக ஆஸ்திரேலியாவில் ஒரு இளம் அணியை வைத்துக் கொண்டு ஆஸ்திரேலியாவையே வீழ்த்தி கெத்துக் காட்டியிருந்தார் ரஹானே. ஒரு கேப்டனாக ரஹானேவை கிரிக்கெட் உலகமே கொண்டாடியது. அதனால், டெல்லி அணி ரஹானேவின் பெயரை டிக் அடிக்கவும் வாய்ப்பிருந்தது.

ஆனால், ரஹானே கேப்டன்ஷிப் செய்தது டெஸ்ட் ஃபார்மேட்டில், இது டி20 ஃபார்மட். இங்கே அவரின் அணுகுமுறை எப்படி ஒத்துப்போகும் என்பது மிகப்பெரிய கேள்வி. இதற்கு முன்னர் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக இருந்த ரஹானேவை திருப்தியில்லாததால் 2019 சீசனின் பாதியிலேயே கேப்டன் பதவியிலிருந்து விடுவித்தது ராஜஸ்தான் நிர்வாகம். அதனால், ரஹானேவுக்கும் அவ்வளவு சுலபமாக கேப்டன் பதவியை கொடுத்துவிட முடியாத நிலை இருந்தது.

இப்படி டெல்லி அணியில் எந்த சீனியர் வீரரை எடுத்தாலும், அவருக்கென்று செம பாசிட்டிவான ஒரு விஷயம் இருந்தால் அருகிலேயே நெகட்டிவான ஒரு விஷயமும் சேர்ந்தே இருந்தது. இதுதான், டெல்லி அணியை இவர்களைத்தாண்டி ஒரு வீரரை தேர்வு செய்ய தூண்டியது. இந்த இடத்தில்தான் ரிஷப் பன்ட் முக்கியத்துவம் பெறுகிறார்.

ரிஷப் பன்ட்

சமீபமாக, கிரிக்கெட் உலகமே ஆச்சர்யத்தில் மூழ்கும் அளவுக்கு பல அதிரடியான சம்பவங்களை நிகழ்த்தி வருகிறார் பன்ட். எந்த அணியாக, எந்த வீரராக இருந்தாலும் எதிர்த்து நின்று ஒரு கை பார்த்துவிடலாம் என்கிற துணிச்சல் அவரிடம் இருக்கிறது. மேலும் அஷ்வின், ரஹானே, ஸ்மித், தவான் போன்ற சீனியர் வீரர்களிடம் இல்லாத ஒன்றான துள்ளல்மிக்க இளமை ரிஷப் பன்ட்டிடம் இருக்கிறது. டெல்லி அணியும் டேர்டெவில்ஸாக இருந்த சமயத்தில் பல சீனியர் வீரர்களை கேப்டனாக்கி தொடர்ந்து ஏமாற்றத்தையே எதிர்கொண்டு வந்தது. கேப்பிட்டல்ஸாக மாறிய பிறகுதான் எல்லா ஃபார்முலாவையும் மாற்றி இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அணியாக மாறியது. அது அந்த அணிக்கு நல்ல பலனையும் கொடுத்தது. ஷ்ரேயாஸ் தலைமையில் டெல்லி அணி கடந்த சீசனில் இறுதிப்போட்டி வரைக்கும் முன்னேறியது. மீண்டும் ஒரு சீனியர் வீரருக்கே கேப்டன்ஸியை கொடுத்து மீண்டும் பழைய ஃபார்முலாவை கையில் எடுக்க விரும்பாத டெல்லி அணியின் ஒரே ஆப்ஷனாக ரிஷப் பன்ட் மட்டுமே இருந்தார்.

ஒரு கால்பந்து அணியின் பயிற்சியாளர் போலத்தான் ரிக்கி பான்ட்டிங் பெவிலியனில் உட்காந்து கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டிருப்பார். அவருடன் முக்கியமான முடிவுகளோடு ஒத்துப்போக சீனியர் வீரர்களைவிட ரிஷப் பன்ட்தான் சரியாக இருப்பார் என்பது அணி நிர்வாகத்தின் முடிவாக இருந்திருக்கிறது. எனவே, ஒரே முடிவாக ரிஷப் பன்ட்டையே கேப்டனாகவும் அறிவித்துவிட்டது டெல்லி அணி.

ஆண்டர்சனை புது பந்தில் அடித்து வெளுத்ததை போல, கேப்டன்சியிலும் யாரும் எதிர்பார்க்காத அதிரடிகளை ரிஷப் பன்ட் நிகழ்த்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆனால், திறமையான பேட்ஸ்மேன்களை கேப்டனாக்கி அவர்கள் மேல் சுமையை ஏற்றி, கேப்டனாக மட்டுமல்லாமல் பேட்ஸ்மேனாகவும் அவர்களைத் தடுமாறவைத்த உதாரணங்கள் அதிகம் இருக்கின்றன. சச்சின் டெண்டுல்கரால் கேப்டனாக இறுதிவரை ஒரு கோப்பையைக்கூட வெல்லமுடியவில்ல. விராட் கோலி இந்தியாவின் கேப்டனாக பெரிய அனுபவம் கொண்டிருந்தாலும் பெங்களூரு அணிக்கு இதுவரை ஒரு கோப்பையைக்கூட வென்றுதரவில்லை.

மிகவும் இளம் வீரரான ரிஷப் பன்ட் சீனியர் வீரர்களை சமாளித்து, பேட்டிங் காம்பினேஷனை சரிசெய்து, பெளலிங் ரொட்டேஷனை உடனுக்குடன் மாற்றியமைத்து வின்னிங் ஃபார்முலாவை உருவாக்குவாரா என்பதைக் காண பன்ட் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்!

ரிஷப் பன்ட்டின் கேப்டன்ஸி தேர்வு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்... கமென்ட் செய்யுங்கள்!



source https://sports.vikatan.com/ipl/reasons-behind-rishabh-pant-named-as-delhi-capitals-captain

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக