Ad

செவ்வாய், 30 மார்ச், 2021

மறைக்கப்படும் மோடி; முன்னிலைப்படுத்தப்படும் ஜெ., எம்.ஜி.ஆர் - அரவக்குறிச்சியில் பாஜக பிளான் என்ன?

அரவக்குறிச்சியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையை, எப்படியும் ஜெயிக்க வைத்தே தீருவது என்று பா.ஜ.க தலைமை தீவிரமாக இருக்கிறதாம். அதற்காக, மோடி, அமித்ஷா பெயர்களை தவிர்த்துவிட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை முன்னிலைப்படுத்தும், புது யுக்தியை பா.ஜ.க தலைமை செய்ய சொல்லியிருப்பதாக கூறுகின்றனர்.

அண்ணாமலை பிரசாரம்

கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சியில், பா.ஜ.க சார்பில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும், பா.ஜ.க மாநில துணைத் தலைவருமான அண்ணாமலை போட்டியிடுகிறார். தி.மு.க சார்பில் மொஞ்சனூர் இளங்கோ என்பவர் போட்டியிடுகிறார். அ.தி.மு.க-விடம் பேசி பா.ஜ.க வாங்கிய இடங்கிளில் மற்ற வேட்பாளர்கள் வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ, அண்ணாமலை, எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட குறிப்பிட்ட சிலரை ஜெயிக்க வைப்பது அவசியம் என்று ஸ்ட்ரிக்டாக சொல்லியிருக்கிறதாம் தலைமை. அதனால், அண்ணாமலை அனல் பறக்கும் பிரசாரத்தில் இறங்கியிருக்கிறார். பிரசாரத்தை தொடங்கியபோது, 'நான் எம்.எல்.ஏ ஆனதும், ஆறே மாதத்தில் மோடியை அழைத்து வந்து, புதிய திட்டங்களை அறிவிக்க வைப்பேன்' என்று பேசினார். அதோடு, இளைஞர்களை கவரும் வகையில் வேலை வாய்ப்பு, தொழிற்சாலை, சுயதொழில் என்று பல திட்டங்களை வாக்குறுதிகளாக முன்வைத்து, பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.

Also Read: கரூர்: `6 மாதங்களில் மோடியை அழைத்து வந்து திட்டங்களை நிறைவேற்றுவேன்’ - அண்ணாமலை அதிரடி

இந்த நிலையில், சில நாள்களாக அவரது பிரசாரத்திலும், பிரசார உத்திகளிலும் சில மாற்றங்கள் தெரிய ஆரம்பித்திருக்கிறது. பா.ஜ.க சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி, விசயங்களில், 'பாரத் மாதா கி ஜே' என்று கோஷம் எழுப்பபடும். ஆனால், அந்த கோஷத்தை இப்போது பார்க்கமுடியவில்லை. அதேபோல, சுவர் விளம்பரங்களில் `பிரதமர் மோடியின் ஆசிபெற்ற வேட்பாளர் அண்ணாமலை’ என்ற வாசகங்களில் மோடியின் பெயர் மட்டும் மறைக்கப்பட்டதாக ஒரு போட்டோ ஒன்று சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பிரசாரத்திலும், 'மோடி, அமித்ஷாவின் ஆசிபெற்ற வேட்பாளர் என்ற அறிமுகம் தரப்படவில்லை. 'எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆசிபெற்ற வேட்பாளர்' என்று மட்டும் சொல்லப்படுகிறது.

சுவர் விளம்பரம்

பா.ஜ.க-வின் பரப்புரை யுக்தி மாற்றம் குறித்து அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.

``அண்ணாமலை, தனது ஐ.பி.எஸ் பணியை விட்டுவிட்டு அரசியலுக்குள் வந்திருக்கிறார். அவருக்கு இது முதல் தேர்தல். தவிர, சொந்த தொகுதியில் நிற்கிறார். கண்டிப்பாக அவர் தனது செல்வாக்கை காட்ட, இந்த தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறார். அதேபோல், பா.ஜ.க கட்சி, குறைந்தபட்சம் 5-ல் இருந்து 8 பா.ஜ.க எம்.எல்.ஏக்களை சட்டமன்றத்துக்குள் அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறதாம். ஆனால், கள நிலவரம் அவங்களுக்கு மட்டுமல்ல, அ.தி.மு.க வேட்பாளர்களுக்கே பல இடங்களில் சாதமாக இல்லை. மோடி, அமித்ஷா பெயரை சொன்னால், பல இடங்களில் எதிர்ப்பு வருகிறது. அதனால், அவர்கள் பெயரை தவிர்த்துவிட்டு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயர்களை முன்னிலைப்படுத்த சொல்லியிருக்கிறார்களாம்.

அதேபோல், தாமரை சின்னத்தை மட்டும் தொகுதி மக்களிடம் நன்றாக ரீச் செய்யும்படி சொல்லியிருக்கிறார்களாம். அந்த வகையில் தான், அரவக்குறிச்சியில் மோடி, அமித்ஷா பெயர்களை இப்போது தவிர்க்க தொடங்கியிருக்கிறார்கள். மாறாக, வேட்பாளர் அண்ணாமலையையின் பெருமைகளை பற்றி மட்டும், அதிகம் பேசி வருகிறார்கள். கர்நாடகாவில் அவர் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தபோது, மக்களுக்கு செய்த பணிகளைப் பற்றியே அதிகம் பேசப்படுகிறது.

அண்ணாமலை பிரசாரம்

அதேபோல், அண்ணாமலையை ஜெயிக்க வைப்பதற்காக, தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டி பணிய வைக்க சிலர் முயற்சித்ததாக சொல்கிறார்கள். சமீபத்தில், கரூரில் உள்ள சில நிறுவனங்களில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தப்பட்டது. அதன் உரிமையாளர்கள் அனைவரும், செந்தில் பாலாஜிக்கு வேண்டப்பட்டவர்கள் என்றும் சொல்லப்பட்டது. இதன் பின்னணியில் இருந்தது, பா.ஜ.க தான் என்கிறார்கள்.

'அண்ணாமலை ஜெயிக்கணும். அதற்காக, தி.மு.க சார்பில் அரவக்குறிச்சியில் பெரிதாக வேலை நடக்கக் கூடாது. இல்லைன்னா, தேர்தலுக்குப் பிறகு பல்வேறு வகையில் உங்களை முடக்குவோம்-னு மிரட்டியதாகவும் சொல்கிறார்கள். இன்னொருபக்கம், அரவக்குறிச்சி, பள்ளபட்டி, சின்னதாராபுரம், ஈசநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கிறார்கள். இதில், பள்ளபட்டியில் மட்டும் 29,000 இஸ்லாமிய வாக்குகள் உள்ளன. அண்ணாமலைக்கும், பள்ளபட்டி ஜமாத்துக்கும் ஆரம்பத்திலேயே 'பஞ்சாயத்து' ஆனது. இதனால், இஸ்லாமியர்களின் வாக்குகள் மாற்றுக் கூட்டணி வேட்பாளர்களுக்கு விழும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதனை சரிகட்ட, அமித்ஷா வரும் 1 - ம் தேதி பள்ளபட்டியில் வாக்குகள் சேகரிக்க இருக்கிறார்" என்றார்கள்.

ஆனால், பா.ஜ.க தரப்பிலோ,

``அண்ணாமலையின் வெற்றி, கண்முன் நன்றாக தெரிகிறது. தி.மு.கவினர் தான் தோல்வி பயத்தில் கண்டதையும் கிளப்பிவிடுகிறார்கள். இங்குள்ள இஸ்லாமியர்களையும் தூண்டிவிட்டு, எங்களுக்கு எதிராக கலகம் செய்கிறார்கள். ஆனால், இங்குள்ள இஸ்லாமியர்கள், பிரசாரத்தின் போது, அண்ணாமலைக்கு குர்ரானை வழங்குவது, வாழ்த்துவது, திரளாக திரண்டு வந்து ஆதரவு தருவது என்று எங்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.

Also Read: கரூர்: `எட்டப்பன் வேலை பார்த்தவர் செந்தில் பாலாஜி!' - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

அதனால் பயந்துபோன தி.மு.கவினர், பா.ஜ.க, செந்தில் பாலாஜியை மிரட்டுவதாகவும், அவரோடு நெருக்கமானவர்களின் நிறுவனங்களில் ரெய்டு நடத்துவதாகவும் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். என்ன வேண்டுமானாலும் அவர்கள் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடட்டும், அண்ணாமலையின் வெற்றியை எதனாலும், யாராலும் தடுக்க முடியாது" என்றார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/aravakkurichi-election-bjp-hides-modi-name

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக