Ad

புதன், 31 மார்ச், 2021

``எங்களைக் கண்காணிக்கிறார்கள் என்பது அச்சுறுத்தலாக உள்ளது!" - பொள்ளாச்சி தேர்தல் களத்தில் சபரிமாலா

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்த சபரிமாலா நீட் தேர்வுக்கு எதிராகத் தனது ஆசிரியர் பணியைத் துறந்தார். பெண்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சபரிமாலா, `பெண் விடுதலை' என்ற பெயரில் கட்சியையும் தொடங்கினார். சட்டசபைத் தேர்தலில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனுத்தாக்கலும் செய்தார்.

சபரிமாலா

Also Read: பொள்ளாச்சி ஜெயராமன் மகன், எஸ்.பி வேலுமணி ஆதரவாளர் மீது வழக்குப்பதிவு - என்ன நடக்கிறது கோவையில்?

ஆனால், அது நிராகரிக்கப்படவே தி.மு.க-வுக்கு ஆதரவாக இப்போது பரப்புரை செய்து வருகிறார். இந்நிலையில், பிரசார களத்தில் தி.மு.க - அ.தி.மு.க இடையே ஏற்பட்ட மோதலில் சபரிமாலா மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அனல் பறக்கும் பொள்ளாச்சி தேர்தல் களத்தில் இருக்கும் சபரிமாலாவிடம் பேசினோம்.

``பெண்களின் பாதுகாப்பு எந்தப் பகுதியில் மோசமாக ஆனதோ, கேள்விக்குறியாக்கப்பட்டதோ, அங்கு பெண்களின் குரல் வலிமையாக ஒலிக்க வேண்டுமென நினைத்தேன். அதற்காகத்தான் பொள்ளாச்சி வந்தேன். குறைந்தபட்சம் அனைத்து வீடுகளுக்கும் துண்டறிக்கைகளையாவது கொண்டு சேர்க்க வேண்டுமென நினைத்தேன். அதைப் பார்க்கும் போதாவது, தடுமாறிக் கொண்டிருக்கும் பெண்களைக் காப்பாற்றிவிட முடியும்.

சபரிமாலா

ஆனால், நான் வேட்புமனுத்தாக்கல் செய்ததில் இருந்தே எனக்காகக் கையெழுத்து போட்ட பெண்களுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன. அவர்களின் கணவர்கள் மூலம் மிரட்டி அடித்தனர். என் கண் முன்னே மிரட்டினார்கள். ஒரு கட்டத்தில் அவர்களால் அதைத் தாங்க முடியவில்லை. அதன்பிறகு, அவர்கள் பின்வாங்கியதால் எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுவிட்டது.

பொள்ளாச்சியில் இருந்து நான் முற்றிலும் வெளியேற்றப்படுவேன் என்று நினைத்தார்கள். இப்படியே சென்றுவிடக் கூடாது என நினைத்தேன். அப்போதுதான் தி.மு.க வேட்பாளர் மருத்துவர் வரதராஜன் குறித்து விசாரித்து தெரிந்துகொண்டேன். குஜராத் பூகம்பத்தின்போது மரத்தடியில் அறுவை சிகிச்சை செய்து 17 ராணுவ வீரர்களின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார். நிறைய சமூகப் பணிகளைச் செய்திருக்கிறார். அதன் பிறகுதான் தி.மு.க ஆதரவு என்ற முடிவை எடுத்தேன். தொடர்ந்து கிராம மக்களைச் சந்திக்க வேண்டும் என்பது என் வாழ்நாள் லட்சியம்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பொள்ளாச்சி கிராமங்களிலும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்துதான் பேசி வருகிறேன். அதில் யாரின் பெயரையும் நான் பயன்படுத்தவில்லை. ஒக்கிலிபாளையம் பகுதியில் பிரசாரத்தில் இருந்தபோது, பெண் பிள்ளை பாதுகாப்பு குறித்த திட்டங்களைப் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த அ.தி.மு.க நபர், `யாருடி சபரிமாலா..? உனக்கு இங்க என்ன வேலை? பாலியல் வழக்குல பொள்ளாச்சி ஜெயராமன்தான் சம்பந்தப்பட்டார்னா, இப்பவே நிரூபி' என்று என்னைத் தாக்க வந்தார்” என்றவர்,

``அப்போதுதான் அங்கு பெண்களுக்கு எதிரான அராஜகத்தை நேரடியாகப் பார்த்தேன். எப்படியாவது என்னுடைய பிரசாரத்தைத் தடுக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். அடுத்த 10-வது நிமிடத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் மற்றும் அ.தி.மு.க-வினர் சம்பவ இடத்துக்கு வந்துவிட்டனர். குடித்துவிட்டு பெண்களை சாதி ரீதியாகச் சொல்லி எல்லாம் வசைபாடினார்கள். தொடர்ந்து எங்களைக் கண்காணிக்கிறார்கள் என்பது அச்சுறுத்தலாகத்தான் இருந்தது.

சபரிமாலா பரப்புரை

உயிரைப் பணயம் வைத்துவிட்டோம் என்ற வைராக்கியத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறேன். கொலை முயற்சி செய்ததாக என் மீதும், தி.மு.க-வினர் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த 4 பேர் யாரென்று கூட எனக்குத் தெரியாது.

இங்கு நிறைய விஷயங்களை நேரில் பார்க்கிறேன். பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர் என்னிடம் பேசுகின்றனர். ஏமாற்றப்பட்ட பல பெண்கள் தற்கொலை செய்தும் உயிரை மாய்த்துள்ளனர். ஆனால், அந்த மரணங்கள் மறைக்கப்பட்டுவிட்டன. பல உயிர்களைக் காவு வாங்கிய பயங்கரம் இதன் பின்னால் இருக்கிறது. இவ்வளவு விஷயங்கள் நடந்தும் நடவடிக்கை எடுக்கப்படாததற்கு பின்னால் அதிகாரம்தான் இருக்கிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

சபரிமாலா

இங்கிருக்கும் அ.தி.மு.க-வினரே, தி.மு.க-வுக்கு வாக்களியுங்கள் எனச் சொல்கிற நிலைதான் தற்போது நிலவுகிறது. மக்கள் எதையும் மறக்கவில்லை. இந்த மண்ணுக்கான பெருமையை மீட்க வேண்டும் என்கிற எழுச்சியை மக்களிடம் பார்க்க முடிகிறது” என்றார்.



source https://www.vikatan.com/news/election/sabarimala-speaks-about-challenges-she-face-during-campaigning-in-pollachi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக