Ad

புதன், 31 மார்ச், 2021

மியான்மர் அகதிகளுக்கு இந்தியா உதவாதா... மணிப்பூரின் பல்டியும், மிசோரமின் மனிதாபிமானமும்!

பிப்ரவரி 1... ராணுவத்தின் சதியால் மியான்மர் நாட்டின் தலையெழுத்தே மாறியது. ஜனநாயக முறையில் அங்கே இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த ஆங் சான் சூகியின் அரசு வீழ்த்தப்பட்டது. அவரும் வீட்டுச் சிறையில் தள்ளப்பட்டார். அங்கே ஜனநாயகத்தை நீர்த்துப்போகச் செய்த கலகக் கூட்டத்தின் தலைவரான சீனியர் ஜெனரல் மின் ஆங் லயிங் (Min Aung Hlaing) இதற்குச் சொல்லும் காரணம், கடந்த ஆண்டு நவம்பரில் அங்கு நடந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான். ஆனால், அங்கிருக்கும் தேர்தல் ஆணையமே அது நியாயமாக நடந்த தேர்தல்தான் என்கிறது.

இந்நிலையில், தற்போதைய ராணுவ ஆட்சி எனும் இந்த சர்வாதிகாரத்தை எதிர்த்து லட்சக்கணக்கான மியான்மர் மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடி வருகின்றனர். இந்த இரண்டு மாதங்களில் இப்படியான போராட்டக்காரர்கள் 510 பேரை மியான்மரின் ராணுவம் கொன்று குவித்துள்ளதாகத் தெரிவிக்கிறது ராய்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம்.

மியான்மர் போராட்டம்

மியான்மரில் இருக்கும் இந்தியர்கள் பலரும் இனி அங்கிருப்பது பாதுகாப்பானதல்ல என்பதை உணர்ந்து 'வந்தே பாரத்' விமானங்கள், மியான்மரின் இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்யும் சிறப்பு விமானங்கள், சார்டர்ட் விமானங்கள் எனக் கிடைத்த வழியில் எல்லாம் தாயகம் திரும்பி வருகின்றனர். ஆனால், ராணுவ கலகத்தால் இந்திய மாநிலமான மிசோரம் - மியான்மர் எல்லையில் இருக்கும் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகிவருகின்றனர். அவர்கள் மியான்மரின் குடிமக்களாகவே இருந்தாலும், கலாசார ரீதியாக அவர்களில் பலர், மிசோரம் மாநில மக்களுடன் இணக்கமாகவே இருக்கின்றனர். மியான்மரில் கலவரம் என்றதும் அவர்கள் அகதிகளாக மிசோரமில் தஞ்சம் புகுவதற்கே வருகின்றனர். அங்கேதான் சிக்கல் ஏற்பட்டது.

மிசோரமில் என்ன நடக்கிறது?

இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மியான்மர் மக்கள் மிசோரமில் அடைக்கலம் தேடி வந்துள்ளனர். அவர்களில் பலர் மிசோரம் மாநில அரசால் திருப்பி அனுப்பப்பட்டனர். அப்படித் திருப்பி அனுப்பப்பட்டவர்களில் மீண்டும் நூறு பேர் போக இடமின்றி, வேறு வழியின்றி, மீண்டும் மிசோரமின் கதவையே தட்டியுள்ளனர். அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த திங்கள் கிழமைவரை 1042 மியான்மர் மக்கள் மிசோரம் வழியே இந்தியா வந்துள்ளனர். அவர்களில் பலர் இந்திய எல்லையோர கிராமங்களில் உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஏற்பாடு செய்துள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர், தங்களின் இந்திய உறவினர்களின் வீடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் மியான்மரின் எல்லையிலிருக்கும் சின் மாகாணத்தைச் சேர்ந்த ஸோ (Zo) என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள். வம்சாவளியாகவும் கலாசார ரீதியாகவும் இவர்களுக்கும் மிசோரமின் மிசோஸ் (Mizos) இன மக்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.
மியான்மர் போராட்டம்

இந்த நிலையில்தான் கடந்த மார்ச் 10-ம் தேதி இந்திய உள்துறை அமைச்சகம் எல்லையோர மாநிலங்களான மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியது. அதில் மியான்மரிலிருந்து இந்தியா வரும் மக்களைக் கண்காணிக்க வேண்டும் எனவும், சட்டவிரோதமாக உள்ளே வருபவர்களைத் திருப்பி அனுப்பவேண்டும் எனவும் தெரிவித்தது.

ஆனால், மிசோரம் முதல்வர் ஸோரம்தங்கா (Zoramthanga), மியான்மரின் சின் இன மக்களுடன் கலாசார ரீதியாகத் தொடர்பில் இருப்பதால் அவல நிலையில் அடைக்கலம் தேடி வருபவர்களுக்கு உதவி செய்யாமல் இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதிய கடித்தத்தில் இத்தகைய அசாதாரண சூழலில் இந்திய அரசு அம்மக்களுக்கு நிச்சயம் அடைக்கலம் தரவேண்டுமென வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதேபோல், மியான்மர் அகதிகளுக்கு தன் மாநில அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்துதரும் என்று அறிவித்துள்ளார்.

மணிப்பூரின் அரசியல்!

மியான்மருக்கு அருகிலிருக்கும் மற்றொரு மாநிலமான மணிப்பூரின் உள்துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் கியான் பிரகாஷ், கடந்த மார்ச் 26-ம் தேதி ஓர் உத்தரவை வெளியிட்டார். மியான்மரைத் தொடும் ஐந்து மணிப்பூர் மாவட்டங்களின் துணை ஆணையர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், சட்டவிரோதமாக மியான்மர் மக்கள் உள்ளே நுழைய முற்பட்டால் அவர்களை பணிவாகப் பேசித் திருப்பி அனுப்பிவிடுமாறு அதில் குறிப்பிட்டிருந்தவர், ஒருவேளை அவர்களுக்குக் காயம் ஏற்பட்டிருந்தால், அவசரமாக மருத்துவ உதவி ஏதேனும் தேவைப்பட்டால், அதை மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யலாம் என்றும் எழுதியிருந்தார். முக்கியமாக அந்தக் கடிதத்தில், எந்த மாவட்ட நிர்வாகமும் மியான்மர் மக்களுக்கு உதவும் வகையில் உணவு, உறைவிடம் கொண்ட முகாம்கள் அமைக்கக்கூடாது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 26-ம் தேதி மணிப்பூர் அரசு வெளியிட்ட உத்தரவு
இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. மணிப்பூர் அரசின் மனிதாபிமானமற்ற இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்புகளிலிருந்து கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்தன. மக்களின் எதிர்ப்பைக் கண்டு, மார்ச் 29-ம் தேதியிட்ட மற்றொரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் சிறப்புச் செயலாளர் கியான் பிரகாஷ்.

அதில் அவர், "மணிப்பூர் மாநில அரசு, மியான்மர் மக்களுக்குத் தேவையான அனைத்து வகையான மீட்பு நடவடிக்கைகளையும் மனிதாபிமான அடிப்படையில் தொடர்ந்து செய்து வருகிறது. காயமடைந்தவர்களை இம்பால்வரை கொண்டு சென்று தேவையான மருத்துவ உதவிகளை அளித்துவருகிறோம். கடந்த 26-ம் தேதி வெளியிட்ட உத்தரவுக் கடிதம் பலராலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. சொல்லவந்த விஷயத்தை விடுத்து அது வேறு வகையில் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. இதனால், மேலும் குழப்பங்கள் ஏற்படாமல் தடுக்க, அந்தக் குறிப்பிட்ட கடிதத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்" என விளக்கியுள்ளார்.

ஆனால், 26-ம் தேதி வெளியான கடிதத்தில், குறிப்பிடப்பட்ட ஐந்து விஷயங்களில், மாவட்ட நிர்வாகங்கள் உணவு, உறைவிடம் அடங்கிய முகாம்கள் எதையும் ஏற்பாடு செய்யக்கூடாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல் சிவில் சமூக அமைப்புகளும் எந்த உதவியையும் செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மருத்துவ உதவி, அவசர உதவி தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே உதவவேண்டும் எனவும் மற்றவர்களைப் பணிவாகப் பேசித் திருப்பி அனுப்பவேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. முக்கியமாக, ஆதார் சேர்க்கை நடைபெறக்கூடாது எனவும், அது தொடர்பான கிட்கள் அனைத்தும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருந்தது.

மார்ச் 29-ம் தேதி வெளியான மறுப்பு அறிவிப்பு

சிறப்புச் செயலாளர் கியான் பிரகாஷ் இத்தனை தெளிவாக ஓர் அறிக்கையை வெளியிட்டுவிட்டு, 'இது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது' என்று எப்படி முற்றிலும் முரணான ஒரு விளக்கத்தை அளிக்கிறார் எனப் பல்வேறு தரப்பினரும் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலர், முதல் உத்தரவில் மத்திய அரசின் அழுத்தம் இருந்திருக்கலாம் எனவும், எதிர்ப்பு வரவே அந்த உத்தரவு பின்வாங்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

எது எப்படியோ, மியான்மரிலிருந்து தங்களின் உயிரைக் காத்துக்கொள்ள இந்தியாவை நம்பி ஓடிவரும் மக்களுக்கு மத்திய அரசும் இந்தியாவின் எல்லையோர மாநில அரசுகளும் உதவ வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.


source https://www.vikatan.com/social-affairs/international/myanmar-refugees-and-the-stand-of-mizoram-and-manipur-governments

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக