Ad

ஞாயிறு, 28 மார்ச், 2021

மோடி, அமித் ஷா முன் பழனிசாமி தலைகுனிகிறார்; அதற்கு விலை கொடுப்பது தமிழக மக்களே - ராகுல் காந்தி

தேர்தல் பரப்புரைக்காக இன்று தமிழ்நாடு வந்த ராகுல் காந்தி, சென்னையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அதன் பிறகு சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஸ்டாலினுடன் மேடைய பகிர்ந்து கொண்டு பரப்புரை செய்தார்.


அப்போது பேசிய அவர் `` இப்போதிருப்பது பழைய அ.தி.மு.க இல்லை. மக்கள் அதை நம்ப வேண்டாம். இப்போதிருக்கும் அ.தி.மு.க முகமூடி அணிந்த அ.தி.மு.க. அந்த முகமூடியை அகற்றினால் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வின் முகமே உங்களுக்கு தெரியும். தமிழக மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மோடி, அமித் ஷா, மோகன் பகவத் முன் எந்த தமிழரும் தலைகுனிய விரும்ப மாட்டார். ஆனால் பழனிசாமி தலைகுனிகிறார். மக்களின் பணத்தை கொள்ளையடித்து சொத்துக்களை குவித்திருப்பதால் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முன் தலைகுனிந்து நிற்கிறார். அதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. தலைகுனிந்து தான் ஆக வேண்டும். ஆனால் தமிழக மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பழனிசாமி ஒவ்வொருமுறை தலைகுனியும்போதும் நீங்களே அதற்கான விலையை கொடுக்கிறீர்கள். உங்கள் மொழி, உங்கள் பண்பாடு, உங்கள் தொன்மையையும் விலையாகக் கொடுக்கிறீர்கள்.

சிறு குறு தொழில்களே தமிழகத்தின் பலம். இந்த நாட்டின் உற்பத்தி தலைநகரமாக இருக்கிறது தமிழ்நாடு. இந்த நாடே நீங்கள் அனுமதித்ததால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பால் தமிழகத்தின் சிறு குறு தொழில்கள் கடும் பாதிப்படைந்துள்ளன. லட்சக்கணக்கானோர் வேலைகளை இழந்துள்ளனர். அது பற்றி முதலமைச்சர் மோடியிடம் கேள்வி கேட்பதில்லை. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், தமிழகத்தை பாதிக்கும் கல்விக் கொள்கை, நீட் தேர்வு என எதை மோடி திணிக்கப் பார்த்தாலும் எதிர்த்து முதலமைச்சர் பழனிசாமி பேச மறுக்கிறார்.

தமிழகத்தை தமிழகத்தில் இருந்து ஆட்சி செய்ய வேண்டும். அந்த தமிழ்நாடுதான் வேண்டும். டெல்லியில் இருந்து ஆட்சி செய்யப்படுகின்ற தமிழ்நாடு வேண்டாம்.

நான் தமிழன் இல்லை ஆனால் நான் தமிழ் மொழியை கற்க முயற்சி செய்கிறேன். தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய கவிதைகளை படித்திருக்கிறேன்.


இந்தத் தேர்தல் அ.தி.மு.க, பா.ஜ.க, ஆர்.ஆர்.எஸ் ஒரு பக்கம் தமிழக மக்கள் ஒரு பக்கம். தேர்தல் முடிவில் அ.தி.மு.க, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கூட்டணி அழிவை சந்திக்கும். தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவார்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/rahul-gandhi-speech-edappadi-palanisamy-bows-down

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக