Ad

திங்கள், 29 மார்ச், 2021

``கங்கனாவுடன் மூணு மாத டிராவல்... 25 கிலோ எடை கூடிய ரகசியம்!" - `தலைவி' குறித்து காயத்ரி ரகுராம்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பிரதிபலிக்கும் `தலைவி’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. `தாம் தூம்’ படத்தில் நடித்திருந்தாலும், முன்னணி நடிகையாக உயர்ந்த பிறகு, கங்கனா ரனாவத் ரீ-என்ட்ரி கொடுக்கும் தமிழ்ப் படம் இது. இதனாலும், ஜெயலலிதாவின் பயோபிக் என்பதாலும் `தலைவி'க்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இந்தப் படத்தில் முக்கியமான பாடல் ஒன்றுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றியிருக்கும் காயத்ரி ரகுராம், கங்கனாவுக்கு நடனம், தமிழ் கற்றுக்கொடுத்து அவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறார்.

'தலைவி'யில் கங்கனா ரனாவத்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கலைப் பிரிவு தலைவராக காயத்ரி நியமிக்கப்பட்ட பிறகே, சினிமா பிரபலங்கள் பலரும் இந்தக் கட்சியில் இணைவது அதிகரித்துவருகிறது. `தலைவி’யில் பணியாற்றிய அனுபவம், கங்கனா உடனான நட்பு, அரசியல் பயணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் காயத்ரி ரகுராமிடம் பேசினோம்.

``நடிகையா சில படங்கள்ல நடிச்சிருந்தாலும், ஆஃப் ஸ்கிரீன்ல பெரிசா வேலை செய்யல. பிறகு, அமெரிக்காவுல சில காலம் வசிச்ச நிலையில மறுபடியும் சென்னைக்கு ஷிஃப்ட் ஆனேன். பின்னர், `பொய் சொல்லப் போறோம்’ படத்தின் மூலம் இயக்குநரா அறிமுகமான ஏ.எல்.விஜய் சார், என்மேல நம்பிக்கை வெச்சு அந்தப் படத்துல நடன இயக்குநரா என்னை அறிமுகப்படுத்தினார். அப்போ தொடங்கிய எங்க நட்பு இப்போ வரை தொடருது. அவரோட ஒவ்வொரு படத்துலயும் ஒரு பாட்டுலயாச்சும் நடன இயக்குநரா வேலை செய்ய எனக்கு வாய்ப்பு கொடுப்பார். அப்படித்தான் `தலைவி’யில நானும் ஓர் அங்கமானேன்.

'தலைவி' டீம்

சினிமாவுல இருந்து விலகிய பிறகு, சில வருஷம் மீடியா வெளிச்சம் படாம அமைதியா இருந்திருக்காங்க ஜெயலலிதா அம்மா. அதன் பிறகு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில அவங்க டான்ஸ் ஆடியிருக்காங்க. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்த நிகழ்ச்சியிலதான் ஜெயலலிதா அம்மா எம்.ஜி.ஆரை சந்திச்சிருக்காங்க. அதன் பிறகுதான் அவரை எம்.ஜி.ஆர் அரசியலுக்குக் கூட்டிட்டு வந்திருக்கார். இந்த நிகழ்வை மையப்படுத்தி `கண்ணும் கண்ணும்’னு ஒரு பாடலை பிரமாண்டமா உருவாக்கினோம்.

கங்கனாவுக்கு கிளாசிக்கல் டான்ஸ்ல பரிச்சயம் இல்ல. அதனால, இந்த செமி கிளாசிக்கல் பாடலுக்காக மும்பையிலுள்ள அவங்க வீட்டுலயே மூணு மாதங்கள் பயிற்சி கொடுத்தேன். இந்தப் படத்துக்காகப் பயிற்சியாளரை வெச்சு கங்கனா தமிழும் கத்துகிட்டாங்க. அதுக்கும் நான் கூட இருந்து உதவி செஞ்சேன். சொல்லிக்கொடுக்கிறதைச் சரியா உள்வாங்கி, நேர்த்தியுடன் நடனமாடி அசத்தினாங்க. அப்போ நல்ல நண்பர்களாகி நெருங்கிப் பழகினோம். அக்கான்னு என்கிட்ட பாசமா பழகினாங்க. நான் அரசியல்ல இருக்கிறதைத் தெரிஞ்சுகிட்டு அதைப் பத்தியும் நிறைய பேசினாங்க. அப்போதான் அரசியல் ரீதியா திருமாவளவனோடு எனக்கு மோதல் ஏற்பட்டுச்சு.

'தலைவி'யில் கங்கனா ரனாவத்

அதைத் தெரிஞ்சுகிட்ட கங்கனா, `உங்களோட முடிவு சரியானதுதான். எப்போதும் போல்டா இருங்க’ன்னு சொன்னாங்க. அவங்களோட அரசியல் நிலைப்பாடு பத்திக் கேட்டேன். `அரசியல் விஷயங்கள் பத்தி தெரிஞ்சுக்கிறதுல ஆர்வம் இருக்கு. ஆனா, இப்போதைக்கு நேரடி அரசியல்ல ஈடுபடும் விருப்பமும் நேரமும் இல்ல. எதிர்காலத்துல என்ன நடக்குதுனு பார்ப்போம்’னு சொன்னாங்க. படத்துல அந்தப் பாடலை, சென்னையில் செட் போட்டு எடுத்தோம். நூறு டான்ஸர்களை வெச்சு மூணு நாள்கள்ல ஷூட் முடிச்சுட்டோம். நிஜ சம்பவ அடிப்படையில, எம்.ஜி.ஆர் தலைமையில நடந்த நடன நிகழ்ச்சியின்போது ஜெயலலிதா அம்மா எடை கூடியிருப்பாங்க. அதனால, சராசரியா 50 கிலோ எடையில இருக்கும் கங்கனா, இந்தப் பாட்டுக்காகக் கூடுதலா 25 கிலோவுக்கும் அதிகமா எடை கூடினாங்க. பிறகு, சீக்கிரமே எடையைப் பழைய நிலைக்குக் குறைச்சாங்க.

தன்னோட போர்ஷன் முடிஞ்சதும் உடனே கேரவன் போகாம, மத்த டான்ஸர்ஸ் ஆடுறது உட்பட எல்லா வேலைகளையும் கவனிக்கிறதுல ஆர்வம் காட்டினாங்க. ரொம்பவே அர்ப்பணிப்புடன் இந்தப் படத்துல நடிச்சாங்க. எங்க வீட்டுல இருந்து அவங்களுக்கு ஸ்பெஷலா சில உணவுகளை அனுப்பினோம். அதை விரும்பிச் சாப்பிட்டாங்க. இந்த மூணு மாதங்கள் தவிர, ஷூட் நடந்துகிட்டு இருக்கும்போதும் கங்கனாவுக்கு உதவியா அவருடன் டிராவல் செஞ்சேன். எம்.ஜி.ஆராக நடிச்சிருக்கும் அரவிந்த் சாமிக்கும் ஒரு பாடலுக்குச் சில போர்ஷன்ல மட்டும் சப்போர்ட் பண்ணினேன். ஒருகட்டத்துல அரசியல் வேலைகளுக்காக அந்தப் படத்துக்கான என்னோட எல்லா வேலைகளையும் முடிச்சுக்கொடுத்துட்டு கிளம்பிட்டேன்.

காயத்ரி ரகுராம்

தமிழ் தவிர, தெலுங்கு மற்றும் இந்தியிலும் இந்தப் படம் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டிருக்கு. மற்ற ரெண்டு மொழிகள்லயும் இந்த ஒரு பாடலுக்கு நான்தான் நடன இயக்குநரா வேலை செஞ்சிருக்கேன். இந்தியில நான் வேலை செய்யும் முதல் படமும் இதுதான். ஜெயலலிதா அம்மாவுக்கு என்னோட அப்பா இளமைக்கால நண்பர். தன்னம்பிக்கைக்கு உதாரணமான ஜெயலலிதா அம்மாவோடு நேரடியா நான் அதிகம் பழகினதில்ல. ஆனா, அவங்களோட பயோபிக்கா வெளியாகும் இந்தப் படத்துல வேலை செஞ்சது பெருமித நிறைவு. இந்தப் படத்துக்காக எல்லாக் கலைஞர்களுமே முழு அப்பணிப்புடன் வேலை செஞ்சிருக்கோம். நான் இயக்கியிருக்கும் `யாதுமாகி நின்றாள்' படமும் விரைவில் வெளியாக இருக்கு” என்று நிறைவுடன் கூறுபவர், அரசியல் பயணம் குறித்தும் பேசினார்.

``பாரதிய ஜனதா கட்சி மக்கள் நலன்ல அக்கறையுடன் செயல்படுறதாலதான், இந்தக் கட்சியில சேர்ந்தேன். முன்பு தமிழ் சினிமாவுல நேரடியாவும் மறைமுகமாவும் தி.மு.க-வைச் சேர்ந்தவங்கதான் கோலோச்சிட்டு இருந்தாங்க. இதனால சினிமா பிரபலங்கள் பலரும் அதிருப்தியடைஞ்சு, பல வகையிலும் பாதிக்கப்பட்டாங்க. இந்த நிலையில மோடி ஜி பிரதமரான பிறகு, பலருக்கும் புது நம்பிக்கை பிறந்திருக்கு. தைரியமா அவரோட கொள்கைகளைப் பாராட்டுறாங்க.

காயத்ரி ரகுராம்

அதன் நீட்சிதான், தமிழ் சினிமா பிரபலங்கள் பி.ஜே.பி-யில சேர்வது. இதுக்காக, நாங்க யாரையும் கட்டாயப்படுத்தல. கவர்ச்சிகரமான பொய் வாக்குறுதி எதுவும் தரல. மோடி ஜி மீதான உண்மையான நேசத்துல, மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணத்துலதான் பிரபலங்கள் பி.ஜே.பி-யில இணையுறாங்க. இதன் பின்னணியில எங்க கட்சியின் மாஸ்டர் பிளான், எனக்கான டார்கெட்டுனு எதுவுமே இல்ல.

அரசியல்ல எதுக்குமே ஓர் எல்லை இருக்கு. மனுஸ்மிருதி விஷயத்துல திருமாவளவன் அந்த எல்லையைத் தாண்டி பெண்களைப் பத்தி தவறா பேசினாரு. அதுக்குத் தைரியமா பதிலடி கொடுத்தேன். இப்படி யாருமே பேசாம இருந்தா, தொடர்ந்து அவரும் மத்தவங்களும் தவறான கருத்துகளைப் பேசுவாங்க. யாருக்கு எப்படிச் சொன்னா உரைக்குமோ, அப்படிச் சொல்றதுல தப்பில்லைங்கிறது என் கருத்து. அப்படிப் பேசினதால, என்னோட சோஷியல் மீடியா பக்கங்களை முடக்கினாங்க. பல வகையிலும் மிரட்டினாங்க. இதுக்காகவெல்லாம் நான் பயப்படல.

காயத்ரி ரகுராம்

இப்போ சட்டமன்றத் தேர்தலுக்கு பிரசாரம் செய்துகிட்டு இருக்கேன். நான் வசிக்கிற ஆயிரம் விளக்கு தொகுதியில குஷ்பு அக்கா போட்டியிடுறாங்க. அவங்களுக்கும் பிரசாரம் செஞ்சேன். எங்க கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்குப் பிரசாரம் செய்துகிட்டு இருக்கேன். மோடி ஜி நிறைய நலத்திட்டங்களைச் செய்றாரு. சில சாதி பிரிவினரை இணைச்சு தேவேந்திர குல வேளாளர்னு கூப்பிடும் மாற்றம் உட்பட நாங்க செய்யும் பல விஷயங்களுக்கும் வரவேற்பு கிடைச்சிருக்கு. தமிழ்நாட்டுல தாமரை மலராதுன்னு சிலர் கேலியும் கிண்டலும் செய்றாங்க. அந்த விஷமத்தனமான பேச்சுகளையெல்லாம் தமிழக மக்கள் மாத்திக்காட்டுவாங்கன்னு உறுதியா நம்புறோம்" என்று முடித்தார் காயத்ரி ரகுராம்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/gayathri-raghuram-speaks-about-thalaivi-movie-choreography-experience

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக