Ad

ஞாயிறு, 28 மார்ச், 2021

ஐன்ஸ்டீன் ஏன் சோப் பபுல்ஸுடன் விளையாடினார்?! - புத்தம் புது காலை - 1 #6AMClub

ஒருமுறை ஐன்ஸ்டீனை சந்திக்க, இந்திய அரசியல் மேதை டாக்டர் ராம் மனோகர் லோகியா, அவரது இல்லத்திற்குச் சென்றிருக்கிறார். அவரை வரவேற்ற ஐன்ஸ்டீனின் மனைவி, தனது கணவர் குளித்துக் கொண்டிருப்பதாகவும், சிறிது நேரம் காத்திருக்கும்படியும் சொல்லியிருக்கிறார். பொறுமையுடன் காத்திருந்தார் அரசியல் மேதை. அரை மணிநேரம், ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம் என மணிப்பொழுதுகள் கடந்தபோதும் விஞ்ஞானி வெளியே வருவதற்கான தடயமே இல்லை. ஒரு தருணத்தில் பொறுமையிழந்த டாக்டர் ராம் மனோகர், "இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்..?" என்று கேட்க, "அது மட்டும் யாருக்கும் தெரியாது" என்று பதிலளித்தாராம் ஐன்ஸ்டீனின் துணைவியார்.

ஆச்சர்யத்துடன், "சரி.. இவ்வளவு நேரமும், அங்கு என்ன தான் செய்வார் அவர்?" என்று கேட்டபோது, "சோப் பபுல்ஸுடன் விளையாடிக் கொண்டிருப்பார். அப்படி அவர் மகிழ்ச்சியுடன் இருக்கும்போது புதிய சிந்தனைகளும், ஆக்கப்பூர்வமான விடைகளும் வெளிப்படுகின்றன என்பதால், அச்சமயத்தில் நாங்களும் அவரைத் தொந்தரவு செய்வதில்லை..." என்று சொன்னாராம்.

ஐன்ஸ்டீன்

ஐன்ஸ்டீனின் சோப் பபில்ஸ் மட்டுமல்ல...

நம்முடைய மகிழ்ச்சி, நற்சிந்தனை, செல்வம், ஆரோக்கியம், ஏன்... நமது வாழ்க்கையும் கூட இந்த தற்காலிக சோப் பபுல்ஸ் போன்றதுதான். ஆனால், இந்த சோப் பபுல்ஸ்களை ரசித்து மகிழ நாம் ஐன்ஸ்டீனாக இருக்க வேண்டியதில்லை. ஒரு குழந்தையாகவோ அல்லது குழந்தை மனதுடனோ இருந்தால் மட்டுமே போதும்.

இந்த சோப் பபுல்ஸ் நமக்கு கற்றுத்தரும் பாடங்கள் அதிகம். உண்மையில் இந்த பபுல்ஸ் மிகவும் சுலபமானவை. உள்ளே இருப்பதை அவை மறைப்பதில்லை‌. தனித்தனியே அவை உருவானாலும், மற்ற குமிழ்கள் அருகில் வந்தால், தங்கள் சுவரைப் பகிர்ந்து, ஒன்றுசேர்ந்து கொள்கின்றன.

அவற்றில் ஒளியைப் பாய்ச்சினால், வானவில் வண்ணங்களை அவை பரிசளிக்கின்றன. அவற்றைப் பாதுகாக்க வேண்டுமென்றால் நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். அவற்றை உடைக்காமல் இருப்பது மட்டுமே!

இந்த மகிழ்ச்சிக் குமிழ்களை, நாம் தேடிச்செல்ல வேண்டியதில்லை. எப்போதும் அவை நம்மைச் சுற்றி, காற்றில் மிதந்து கொண்டிருக்கின்றன. நம்மைத் தேடி அவை வந்துகொண்டும் இருக்கின்றன.

Soap Bubbles

என்ன... இந்தக் குமிழ்களை நாம் காணவேண்டும் என்றால் அந்தத் தருணத்தை உணர நாம் தயாராக இருக்க வேண்டும்.இவற்றை அனுபவிக்க அறிவு தேவையில்லை. விஞ்ஞானியாக வேண்டியதும் இல்லை. நாம் இயல்பாக இருந்தாலே போதுமானது என வாழ்வியலை அழகாக உணர்த்திச் செல்கின்றன இந்த தற்காலிகக் குமிழ்கள்.

ஆக, சிறியதும் பெரியதுமான இந்த வண்ணமயமான மகிழ்ச்சிக் குமிழ்களை, அவை கரையும் முன், அனுபவிப்பதில்தான், அனைத்தும் உள்ளது..!

வண்ணங்கள் நிறைந்த ஹோலி பண்டிகையான இன்றுமுதல், வண்ணங்களைப் பிரதிபலிக்கும் சோப் பபுல்ஸ் போல, 'புத்தம்புது காலை' என்ற இந்தப் புதிய பக்கத்தில் கட்டுரைகள், செய்திகள், கவிதைகள், சிறுகதைகள், வரலாற்றுச் சுவடுகள், பயணங்கள், நகைச்சுவை, திரைப்பட விமர்சனங்கள், புகைப்படங்கள் மெல்லிசை போன்றவற்றின் வாயிலாக ஒவ்வொரு நாளும் இங்கே உரையாடலாம் வாருங்கள்.

நாமும் இயல்பில் சோப்பு குமிழ்கள் போல சுலபமானவர்கள் தானே?!



source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/morning-motivation-enjoy-the-soap-bubble-called-life-while-it-lasts

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக