Ad

திங்கள், 1 மார்ச், 2021

வழக்கு பதிந்தது சி.பி.சி.ஐ.டி; ராஜேஷ் தாஸ் மீதான பிடி இறுகுகிறது!

தமிழக சட்டம், ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி-யாக பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். இவர் மீது இளம் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் பாலியல் சீண்டல் புகாரளித்தார். அதுதொடர்பாக விசாரிக்க 6 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. அதைத்தொடர்ந்து, ராஜேஷ் தாஸ் தற்போது காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார். ராஜேஷ் தாஸ் மீது புகாரளிக்க வந்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை செங்கல்பட்டு டோல்கேட் பகுதியில் வைத்து தடுத்து நிறுத்திய எஸ்.பி கண்ணன் மற்றும் ஐ.ஜி ஒருவர் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில் ராஜேஷ் தாஸ் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரிக்க டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டார்.

ராஜேஷ் தாஸ்

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி போலீஸார், பெண் ஐபிஎஸ் அதிகாரியின் புகாரின் அடிப்படையில் ராஜேஷ் தாஸ் மீது வழக்குபதிவு செய்திருக்கின்றனர். அதோடு ராஜேஷ் தாஸுக்கு ஆதரவாக செயல்பட்ட எஸ்.பி கண்ணன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் இருவரையும் விசாரிக்க இருப்பதாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் தெரிவித்துள்ளனர். விசாரணைக்குப் பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.சி.ஐ.டி போலீஸார் தெரிவித்தனர். ராஜேஷ் தாஸ் வழக்கை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி கோமதி நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கிடையில் தமிழக அரசு அறிவித்த குழுவும் ராஜேஷ் தாஸிடம் விசாரிக்கவுள்ளனர்.

Also Read: சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரியின் பாலியல் புகார்! - சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் சிக்கியது எப்படி?

ராஜேஷ் தாஸ் மீது பெண்ணை மானபங்கப்படுத்துதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பதாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் தெரிவித்தனர்.

ராஜேஷ் தாஸ் மீது புகாரளித்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரியிடம் என்ன நடந்தது என்று முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு, அவர் அளிக்கும் தகவல்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்படும். அதனடிப்படையில் ராஜேஷ் தாஸிடம் விசாரணை நடத்தப்படும்.

Also Read: மசாஜ்... டான்ஸ்... டார்ச்சர்... ரகிட ரகிட ராஜேஷ் தாஸ்!

ராஜேஷ் தாஸ் மீதான குற்றச்சாட்டை, தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்திருக்கிறது. ``காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?`` என நீதிபதி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணை இன்று மதியம் 2.15 மணியளவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. ஏற்கெனவே மாநில மனித உரிமை ஆணையமும் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டிருக்கிறது.

ராஜேஷ் தாஸ் மீது அடுத்தடுத்து சட்ட நடவடிக்கை பாய்வதால் அவருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.



source https://www.vikatan.com/news/crime/cbcid-police-registered-fir-against-rajesh-das-ips

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக