Ad

புதன், 31 மார்ச், 2021

``மோடி பிரசாரம் அதிமுக கூட்டணிக்கு பலவீனம்!” இந்து என்.ராம் கருத்து

இந்து குழுமத்தின் முன்னாள் தலைவரான என்.ராம் விகடன் யூடியூப் சேனலுக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். அதில், தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்திருக்கிறார். அந்த நேர்காணலிலிருந்து...

``தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக வெளியாகியிருக்கும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தி.மு.க அணி வெற்றிபெறும் என்று செல்கின்றன. நீங்களும், தி.மு.க தலைமையிலான அணிக்கு பெரிய வெற்றி கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறீர்கள். தி.மு.க கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கிறீர்கள்?“

எடப்பாடி பழனிசாமி

``தனியார் தொலைக்காட்சி ஒன்றின் கருத்துக் கணிப்பு விவாதத்தில் பங்கேற்றேன். அந்தக் கருத்துக்கணிப்பில் தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி ஆகிய இரு அணிகளுக்கும் இடையிலான அனைத்து அம்சங்களிலும் பத்து சதவிகிதத்துக்கு மேல் வித்தியாசம் இருந்தது. எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள், நம்பர் ஒன் தலைவர் யார் என எல்லா அம்சங்களிலும் இரு கூட்டணிகளுக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது.

அந்த கருத்துக்கணிப்பை விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால், இந்த 10 சதவிகித இடைவெளி என்பது 12 சதவிகிதம், 13 சதவிகிதத்துக்கு மேல்கூடப் போகலாம். அப்படிப் பார்த்தால், தி.மு.க அணிக்கு 160 - 170 சீட்களுக்கு மேல் கிடைக்கும். தி.மு.க-வைப் பொறுத்தவரையில், 200 சீட்களுக்கு மேல் எதிர்பார்க்கிறார்கள். நான் குறிப்பிட விரும்புவது, தி.மு.க-வுக்கு பெரிய வெற்றி கிடைக்கும் என்பதுதான்.”

ஸ்டாலின்

“தி.மு.க-வுக்கு ஆதரவான அலை அடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா?“

``கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அலை இருக்காது என்று பலர் சொன்னார்கள். ஆனால், தி.மு.க ஆதரவு அலை அடித்தது. அது ஓர் அமைதியான அலையாக இருந்தது. இந்தத் தேர்தலில் அலை இருக்குமா என்பது தெரியவில்லை. ஒருவேளை, தி.மு.க-வுக்கு ஆதரவான அலை இருக்குமானால், அ.தி.மு.க-வுக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படும் மேற்கு மாவட்டங்களில்கூட, அ.தி.மு.க-வுக்கு பாதிப்பு ஏற்படும். அதற்கு, எத்தனை சதவிகிதம் பேர் வாக்களிக்கிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். பொதுவாக, தமிழகத்தில் வாக்கு சதவிகிதம் அதிகமாகவே இருக்கும்.”

Also Read: வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிரந்தரமானது; அதை நீக்க முடியாது! - ராமதாஸ்

``தி.மு.க-வுக்கு ஆதரவான இந்த சூழலுக்கு என்ன காரணம்? ஆட்சிக்கு எதிரான மனநிலை எந்தளவுக்கு இருக்கிறது?”

``ஆட்சிக்கு எதிரான மனநிலை என்பதைக் காட்டிலும், பாசிட்டிவான ஒரு மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். அதாவது, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்க ஆதரவான மனநிலை மக்கள் மத்தியில் இருப்பதைக் கருத்துக்கணிப்புகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. கட்சி, தலைமை ஆகிய இரு அம்சங்களிலும் ஒரு பாசிட்டிவ் ஆன மாற்றம் வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது.”

மோடி

``அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்திருக்கிறார். இது, அந்த அணியின் வெற்றிக்கு எந்தளவுக்கு கைகொடுக்கும்?”

“பிரதமர் மோடியின் பிரசாரம் இங்குள்ள பா.ஜ.க ஆதரவாளர்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் தெம்பைக் கொடுக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், பிரதமரின் பிரசாரம் அ.தி.மு.க கூட்டணிக்கு ஒரு பலவீனம். ஏனென்றால், பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்தது அ.தி.மு.க-வுக்கு மைனஸ். பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்ததால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு எதிர்விளைவைத்தான் ஏற்படுத்தியது. அ.தி.மு.க தனியாகப் போயிருந்தால் நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கும். அவ்வளவு பெரிய தோல்வியை அ.தி.மு.க சந்தித்திருக்காது.” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/modi-campaign-will-weaken-admk-in-election-results-hindu-nram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக