Ad

திங்கள், 29 மார்ச், 2021

பொள்ளாச்சி ஜெயராமன் மகன், எஸ்.பி வேலுமணி ஆதரவாளர் மீது வழக்குப்பதிவு - என்ன நடக்கிறது கோவையில்?

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது அவதூறு பரப்பிய வழக்கில் தி.மு.க பிரமுகர் கைது, இளைஞர் கைது என்று தான் கோவை மாவட்டத்தில் அடிக்கடி செய்திகள் வலம் வரும். ஆனால், தேர்தல் நெருங்கும் நிலையில் கடந்த சில நாள்களாக அமைச்சர் வேலுமணி ஆதரவாளர் சந்திரசேகர் மீது போலீஸார் வழக்குப்பதிவு, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் மீது போலீஸார் வழக்குப்பதிவு என்ற செய்திகள் அடிபடுவதால் கோவை அ.தி.மு.க-வினர் கதிகலங்கியுள்ளனர்.

சந்திரசேகர்

கோவை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையாளர் மாற்றத்தைத் தொடர்ந்துதான் இந்த அதிரடிகள் நடந்து வருகின்றன.

பொள்ளாச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ராசாமணி மற்றும் காவல் ஆணையர் சுமித் சரண் ஆகியோர் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக செயல்படுவதாக எழுந்த புகாரையடுத்து, அவர்கள் மாற்றப்பட்டு நாகராஜன் கோவை மாவட்ட ஆட்சியராகவும், டேவிட்சன் தேவாசிர்வாதம் கோவை காவல் ஆணையாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

சந்திரசேகர்

நியமிக்கப்பட்ட சில நாள்களிலேயே தேர்தல் பணியில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து நாகராஜன் உத்தரவிட்டார். இந்நிலையில், வேலுமணியின் நிழலாக வலம் வரும் நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் மீது வடவள்ளி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Also Read: கோவை:``பாஜக-வுக்கு பிரசாரம் செய்ய வற்புறுத்துகின்றனர்” - தனியார் கல்லூரிப் பேராசிரியர்கள் ஆதங்கம்

``ஸ்டாலின் அவர்களுக்கு சொல்கிறேன். கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் ஒவ்வொரு ஆட்டை அனுப்பியிருக்கிறார். தேர்தல் முடிந்தவுடன் எங்கள் வெற்றி விழாவில் கிடா வெட்டி விருந்து வைப்போம். அப்போது, அந்த ஆடுகளை வெட்டுவோம். எல்லோரையும் வெட்டி, பிரியாணி செய்து கோயம்புத்தூரில் இருந்து அனுப்பவில்லை என்றால், அப்புறம் கேளுங்கள் அமைச்சர் வேலுமணி யார் என்று.

சந்திரசேகர்

இதை சவாலாகவே சொல்லிக் கொள்கிறேன்” என்று சந்திரசேகர் ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். இதுதொடர்பாக, தி.மு.க-வினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் சந்திரசேகர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, பொள்ளாச்சி ஒக்கிலிபாளையம் பகுதியில் தி.மு.க-வினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது தி.மு.க-வுக்கு ஆதரவாக பரப்புரை செய்துவரும் பெண் விடுதலை கட்சி சபரிமாலா பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து பேசியதாக தெரிகிறது. இதனால், அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பிரவீன்

அப்போது துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன், ஜெயராமனின் உதவியாளர் வீராசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தி.மு.க-வினர் மற்றும் சபரிமாலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தாக புகார் எழுந்தது. இதுகுறித்து தி.மு.க-வினர் புகாரும் அளித்திருந்தனர். இதையடுத்து, பிரவீன், வீராசாமி, ஜெயராமன் ஆகியோர் மீது வடக்கிபாளையம் போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதேபோல, அ.தி.மு.க-வினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சபரிமாலா மற்றும் தி.மு.க-வினர் 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சபரிமாலாவை போலீஸ் விசாரணைக்கு ஆஜராக சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பிரவீன் சாதியை சொல்லி திட்டியதாக அளித்தப் புகாரின் அடிப்படையிலும் போலீஸார் அவர் மீது மற்றொரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். ``நாங்கள் பிரசாரத்தில் யாரின் பெயரையும் பயன்படுத்தவில்லை.

Also Read: Fact Check: பொள்ளாச்சி விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாக பரவும் தகவல் உண்மையா?

15 நாள்களுக்கு முன்பாகவே அந்த இடத்தில் பிரசாரம் செய்ய அனுமதி வாங்கிவிட்டோம். அந்த இடத்தில் பிரவீன், வீராசாமிக்கு என்ன வேலை? திட்டமிட்டு அ.தி.மு.க-வினர் பிரச்னை செய்கின்றனர்” என்று தி.மு.க-வினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க-வினர்தான் பிரச்னை செய்வதாக அ.தி.மு.க-வினர் கூறுகின்றனர். இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ``இரு தரப்பிலும் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளோம். விசாரித்துவிட்டு நடவடிக்கை எடுப்போம்” என்றனர். ``அதிகாரிகள் மாறியதால்தான் இப்படி பாரபட்சம் இல்லாத நடவடிக்கைகளை பார்க்க முடிகிறது. எனவே, தேர்தல் முடியும்வரை இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்வது அவசியம்” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.



source https://www.vikatan.com/news/tamilnadu/fir-filed-against-pollachi-jayaraman-son-praveen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக