Ad

திங்கள், 1 மார்ச், 2021

கரடியை வீழ்த்திய காளை... ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் - என்ன காரணம்? #Sensex

''பங்குச் சந்தை இறக்கம். 5.37 லட்சம் கோடி ரூபாய் இழப்பு...'' என்றெல்லாம் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்க, இன்று திங்கள்கிழமை அன்று பங்குச் சந்தைகள் மீண்டும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓராண்டுக்கு முன்பு, கொரோனா நோய்த் தொற்றுக் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டுமே பெரும் சரிவைச் சந்தித்தன. அந்த இறக்கத்தில் இருந்து வேகமான ஏற்றத்தைக் கண்டுவந்த இவ்விரு சந்தைகளுமே, கடந்த பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு, இன்னும் அதிவேகமாக உயர்ந்தன. சென்செக்ஸ் 50000 புள்ளிகளைத் தாண்டி சென்றுகொண்டிருந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்செக்ஸ்

இந்த நிலையில், கணிசமான லாபம் கிடைத்ததை அடுத்து அந்த லாபத்தை புக் செய்யும் விதமாகப் பல முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்துவந்தார்கள். இதனால் கடந்த வெள்ளிக்கிழமை (பிப்.26) பங்குச் சந்தை சமீபத்தில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவைச் சந்தித்தது. அதாவது, மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 1,939 புள்ளிகள் சரிந்து 51,039.31 புள்ளிகளில் முடிந்தது. இதனால் ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு 5.37 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டது.

ஆனால், வர்த்தக தொடக்க நாளான இன்று (மார்ச் 1) சென்செக்ஸும் நிஃப்டியும் ஏற்றத்துடன் வர்த்தகமாகத் தொடங்கின. சென்செக்ஸ் 700 புள்ளிகள் ஏற்றத்துடனும், நிப்ஃடி 200 புள்ளிகள் ஏற்றத்துடனும் ஆரம்பித்ததால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி மழையில் நனைந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்தியப் பங்குச்சந்தை

கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) விகிதம் 0.40% என்கிற அளவில் அதிகரித்திருப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் ('National Statistics Office') தெரிவித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்று காரணமாக இந்த நிதி ஆண்டில் முதல் காலாண்டில் மைனஸ் 24% என்கிற அளவில் இறக்கம் கண்டிருந்த சந்தை, இரண்டாம் காலாண்டில் மைனஸ் 7% என்கிற அளவில் இருந்தது. ஆனால், மூன்றாம் காலாண்டில் நெகட்டிவ் வளர்ச்சியிலிருந்து பாசிட்டிவ் வளர்ச்சிக்கு அதாவது 0.40% என்கிற அளவுக்கு வளர்ச்சி கண்டிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதால், பங்குச் சந்தைகள் மீண்டும் ஏற்றம் அடையத் தொடங்கி இருக்கின்றன.

இன்று காலை 12.30 மணி அளவில், சென்செக்ஸ் 377 புள்ளிகள் அதிகரித்து, 49,478 புள்ளிகளில் வர்த்தகமானது. அதே போல, நிஃப்டியும் 122 புள்ளிகள் அதிகரித்து 14,649 என்கிற நிலையில் வர்த்தகமானது. ஓ.என்.ஜி.சி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா மற்றும் டைட்டன் நிறுவனத்தின் பங்குகள் 5 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்து வர்த்தகமாகி வருகின்றன.



source https://www.vikatan.com/business/finance/sensex-and-nifty-started-rebound-today-in-the-share-market

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக