Ad

திங்கள், 29 மார்ச், 2021

“அடுத்த இலக்கு ஒலிம்பிக்தான்!” - தனலட்சுமி என்னும் தைரியலட்சுமி

தனலட்சுமி - இந்தியத் தடகள அரங்கில் பாய்ந்திருக்கும் புதிய மின்னல் கீற்று. திருச்சியின் வயல்வெளிகளில் ஓடிக்கொண்டிருந்த கால்கள், தேசிய ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில் பதக்கங்களைக் குவித்துத் திரும்பியிருக்கின்றன. 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று, இந்தியாவின் அதிவேகப் பெண்ணாகியுள்ள தனலட்சுமி, தான் கடந்து வந்த பாதை பற்றிப் பகிர்கிறார்.
மணிகண்ட ஆறுமுகம்

“இந்த வெற்றி எப்படி சாத்தியமானது. இதை எதிர்பார்த்தீர்களா?”

“நிச்சயம் எதிர்பார்த்தேன். கடந்த ஆறு மாதங்களாக இதற்காகத்தான் கடுமையாக உழைத்தேன். என்னுடைய முதல் லட்சியமே எப்படியாவது டூட்டி சந்த், ஹீமா தாஸ் இருவரையும் தோற்கடிக்கவேண்டும் என்பதாகத் தான் இருந்தது. ஏனெனில், அவர்கள் இருவர் மட்டும்தான் இந்தியாவில் பிரபலமாக இருந்தார்கள். அதனால், அவர்களை வீழ்த்தவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.”

“வெற்றி, வரவேற்பு… எப்படி உணர்கிறீர்கள்?”

“மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. போட்டியை முடித்தவுடன் எனக்கு எதுவும் பெரிதாகத் தெரியவில்லை. சாதாரணமாகத்தான் இருந்தேன். தமிழ்நாட்டில் கால் வைத்த பிறகு, இங்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து மிகவும் பெருமையாக இருக்கிறது.”

தனலட்சுமி

“தடகளம் மீதான ஆர்வம் எப்போது, எப்படி தொடங்கியது?”

“பள்ளி அளவிலேயே போட்டிகளில் பங்கேற்றேன். எங்கள் உடற்கல்வி ஆசிரியர் மாநில அளவிலான போட்டிகளுக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அதற்கென்று தனியாக எந்தப் பயிற்சியும் மேற்கொள்ளவில்லை. கல்லூரியில் சேர்ந்த பிறகு `கோ கோ’தான் விளையாடத் தொடங்கினேன். அதன்பிறகு தடகளம் மீதான ஆர்வம் கொஞ்சம் அதிகரித்தது. அதனால், தடகளத்தில் சேர்ந்து கடந்த நான்கு ஆண்டுகளாகப் பயிற்சி மேற்கொண்டுவருகிறேன்.”

“உங்கள் தடகளப் பயணத்தில் பயிற்சியாளர் மணிகண்ட ஆறுமுகம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்…”

“நான் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறேன் என்றால், அதற்கு அவர்தான் முக்கிய காரணம். ஏனெனில், ஆரம்பக் காலத்தில் எந்தப் பயிற்சியும் இல்லாமல்தான் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கெடுத்துக்கொண்டிருந்தேன். ஆனால், நான் இன்று தேசிய அளவில் தங்கம் வென்றிருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் அவர் கொடுத்த பயிற்சிதான்.”

தனலட்சுமி

“உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்”

“எனக்கு அம்மா மட்டும்தான். என் சிறுவயதிலேயே தந்தை இறந்துவிட்டார். எனக்கு ஒரு சகோதரி இருக்கிறார். அம்மா வயலில் வேலை செய்துதான் எங்களை வளர்த்தார். எனக்கு, என் கரியருக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார். வெளியே ஒரு போட்டிக்குப் போகவேண்டுமென்றால் குறைந்தது 5,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை செலவாகும். அதற்காக, தன் நகையை அடகு வைத்தோ, வட்டிக்கு வாங்கியோ அம்மா எனக்குக் கொடுப்பார்.”

“வறுமை, தந்தையின் பிரிவு என பல கஷ்டங்களைக் கடந்து வந்திருக்கிறீர்கள். அந்தத் தடைகளை எப்படித் தாண்டினீர்கள்?”

“பொருளாதாரரீதியாகப் பல நெருக்கடிகள் இருந்தன. கல்லூரி மூலமாக சில உதவிகள் கிடைத்தன. இருந்தாலும் என் டயட்டுக்காகச் சில பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்கவேண்டிவரும். அதுமட்டுமல்லாமல், சொந்தக்காரர்கள், சுற்றியிருப்பவர்கள் எனப் பலரும் ‘அப்பா வேறு இல்லை. பெண் பிள்ளையை எதற்காக வெளியே அனுப்பவேண்டும்’ என்றெல்லாம் கேட்பார்கள். ஒவ்வொன்றையும் எதிர்கொள்வது மிகவும் சிரமமாகவே இருக்கும். ஆனால், அதை நினைத்து நான் தேங்கிவிட வில்லை.”

“உங்களுடைய ரோல் மாடல் யார்?”

“என்னுடைய கோச்தான் ரோல் மாடல்.”

“அடுத்த இலக்கு?”

“அடுத்த மூன்று மாதங்களில் இன்னும் கடினமாக உழைத்து, ஒலிம்பிக்குக்குத் தகுதி பெறுவேன். ஒரு சர்வதேசத் தொடரில் இந்தியாவுக்கு ஒரு தங்கப் பதக்கம் வென்று கொடுக்கவேண்டும்.”

ஒலிம்பிக்கைக் குறிவைத்து இப்போதே ஓடத் தொடங்கிவிட்டார் தனலட்சுமி. அவர் தன் ரோல் மாடலாக, தன் வெற்றிக்கு மிகவும் முக்கியமான காரணமாகக் கூறிய பயிற்சியாளர் மணிகண்ட ஆறுமுகத்துக்கு 31 வயதுதான். அவரும் இன்னும் தடகளப் போட்டிகளில் பங்கெடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்.

“பெண்கள் மட்டுமே இருக்கும் வீட்டில், ஒரு பிள்ளையை விளையாட்டுத் துறைக்கு அனுப்பவேண்டுமா என்று பலரும் கேட்பார்கள். ஆனால், அதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல் தனலட்சுமியை அவர் அம்மா அனுமதித்தார். அதற்கு அசாத்திய நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கைக்கு ஏற்றாற்போல் கடுமையாக உழைத்தார் தனலட்சுமி. தன் கஷ்டங்களை தூர வைத்துவிட்டு தைரியமாக நின்றார். சாதித்திருக்கிறார்” என்று தன்னை முன்னிலைப் படுத்தாமல், தனலட்சுமியையும் அவர் அம்மாவை யும் பிரதானப்படுத்துகிறார் பயிற்சியாளர் மணிகண்ட ஆறுமுகம்.



source https://www.vikatan.com/news/general-news/interview-with-indian-athlete-dhanalakshmi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக