Ad

திங்கள், 29 மார்ச், 2021

தேனி: வேட்பாளர்களுக்கு கறுப்புக் கொடி; அதிமுக வாக்கு வங்கியை உடைக்குமா சீர்மரபினர் நலச்சங்கம்?

சுதந்திரத்திற்கு பிறகு, தமிழகத்தில் உள்ள பிரான்மலைக்கள்ளர், மறவர், 24 மனை தெலுங்குச் செட்டியார், போயர், குறவர், தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சமுதாயங்களை ஒன்றிணைத்து, சீர்மரபினர் பழங்குடியினர் (DNT) என அழைக்கப்பட்டும், அதற்கான சாதிச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வந்தன. கடந்த 1978-ம் ஆண்டுக்கு பிறகு, கொடுக்கப்பட்டுவந்த DNT சான்றிதழ், DNC என மாற்றம் செய்யப்பட்டது. இதனால், இச்சமுதாயங்களைச் சேர்ந்த மக்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்த மத்திய, மாநிலச் சலுகைகள் தடைபட்டன. இதனால், 68 சமூக மக்களும் இணைந்து, சீர்மரபினர் நலச்சங்கம் என்ற பெயரில் அமைப்பு ஒன்றினை உருவாக்கி, தங்களுக்கு மீண்டும் DNT சான்றிதழ் கொடுக்க வேண்டும் என போராட்டம் நடத்தினர். தமிழகத்தின் ஆட்சியில் அமர்ந்த தி.மு.க., மற்றும் அ.தி.மு.க என இரு கட்சிகளிடமும் தொடர்ச்சியாக, தங்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர்.

காலில் விழும் போராட்டம்

இறுதியாக, கடந்த 2019-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில், DNC சான்றிதழ் மூலம், தமிழக அரசின் சலுகைகளையும், DNT சான்றிதழ் மூலம் மத்திய அரசின் சலுகைகளையும் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. தாங்கள் கேட்டது DNT என்ற ஒற்றைச் சான்றிதழே, இரட்டைச் சான்றிதழ் இல்லை என மீண்டும் போராட்டக் களத்தில் இறங்கியது சீர்மரபினர் நலச்சங்கம். இந்நிலையில், தேர்தல் அறிவிப்பிற்கு முன்னர், வன்னியர் சமுதாய மக்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், 10.5% உள் இடஒதுக்கீட்டையும், சீர்மரபினருக்கு 7% உள் இட ஒதுக்கீட்டையும் அறிவித்தது தமிழக அரசு.

Also Read: தேனி: இட ஒதுக்கீட்டில் அதிருப்தி; அ.தி.மு.க-வுக்கு எதிராக சீர்மரபினர் நலச்சங்கம் பிரசாரம்

தங்கள் கோரிக்கையை முழுமையாக ஏற்காமல், உள் இட ஒதுக்கீட்டை வழங்கியிருப்பதாக, அ.தி.மு.க-வுக்கு எதிராக மீண்டும் போராட்டக்களத்தில் இறங்கியது மட்டுமல்லாமல், அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்கக் கூடாது என 68 சமுதாய மக்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று பிரசாரமும் மேற்கொண்டு வருகின்றனர் சீர்மரபினர் நலச்சங்கத்தினர். மேலும், அ.தி.மு.க வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க வரும் போது, அவர்களுக்கு கறுப்புக் கொடி காட்டி, தங்களது எதிர்ப்பையும் வெளிப்படுத்திவருகின்றனர். மேலும், வீடுகளில் கறுப்புக் கொடி கட்டுதல், அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கூறி, மக்கள் காலில் விழும் போராட்டம், பால் மீது சத்தியம் செய்யும் போராட்டம், கடந்த தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு வாக்களித்ததற்காக, தங்களைத் தாங்களே செருப்பால் அடிக்கும் போராட்டம் என நூதன முறையிலும் போராட்டம் நடத்துகின்றனர்.

வீடுகளில் கறுப்புக்கொடி

தென் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ள சீர்மரபினர் சமுதாய மக்கள், ஆங்காங்கு அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டத்தை நடத்திவருகின்றனர். குறிப்பாக, தேனி மாவட்டத்தில் கம்பம் அ.தி.மு.க வேட்பாளர் சையதுகான், ஆண்டிபட்டி அ.தி.மு.க வேட்பாளர் லோகிராஜன், பெரியகுளம் அ.தி.மு.க வேட்பாளர் முருகன் ஆகியோருக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம் நடத்தினர். எல்லாவற்றுக்கும் மேலாக, சமீபத்தில், ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து வாக்கு சேகரிக்க தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வந்தார் எடப்பாடி பழனிசாமிக்கும் கறுப்புக் கொடி எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக 3 பேர் கைதும் செய்யப்பட்டனர்.

Also Read: விகடன் செய்தி எதிரொலி : ஓ.பி.எஸ் உடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த 8 பேர் மீது வழக்குப் பதிவு!

தொடர்ச்சியாக தென் மாவட்டங்களில், அ.தி.மு.க-வுக்கு எதிரான நிலைப்பாட்டினை கையில் எடுத்து, வாக்கு சேகரிக்க வரும் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு கறுப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிப்பதால், தேர்தலில், அ.தி.மு.க-வுக்கு பின்னடைவு ஏதும் ஏற்படுமா? பிரான்மலைக்கள்ளர் மற்றும் மறவர் வாக்குகள் அதிகமாக உள்ள தேனி மாவட்டத்தில், அ.தி.மு.க-வின் வாக்கு சதவிகிதத்தில், சீர்மரபினர் நலச்சங்க போராட்டம் மாற்றத்தை ஏற்படுத்துமா போன்ற கேள்விகள் எழுகிறது.

ராமமூர்த்தி

சீர்மரபினர் நலச்சங்கத்தின் தேனி மாவட்டத் தலைவர் ராமமூர்த்தியிடம் பேசினோம். ``எங்களுடைய பிரச்னை என்ன, எதற்காக போராட்டம் நடத்துகிறோம் என இளைஞர்களுக்கு நன்றாகத் தெரிகிறது. ஆனால், பெரியவர்களுக்கு, கையில் காசு கொடுத்தால் போதும், ஓட்டை போட்டுவிட்டுச் செல்வார்கள். இன்று நாம் காசு வாங்கிவிட்டு ஓட்டு போட்டால், நாளை நாம் படிக்கும் போதும், வேலைக்குச் செல்லும் போதும் எந்த உரிமையும் கிடைக்காது என இளைஞர்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாத அ.தி.மு.க-வுக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். எங்கள் போராட்டம் 68 சமுதாய மக்களுக்கும் போய்ச் சேர்ந்திருக்கிறது. அதுவே எங்களின் முதல் வெற்றியாக பார்க்கிறோம். அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியில், பிரான்மலைக்கள்ளர், மறவர் சமூக வாக்குகள் பெருவாரியாக உள்ளது. எனவே, இந்த தேர்தலில், நிச்சயம், அ.தி.மு.க வாக்கு சதவிகிதத்தில் மாற்றம் தெரியும்.” என்றார்.

உங்களை தி.மு.க தான் தூண்டிவிடுகிறது என அ.தி.மு.க தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறதே என நாம் கேட்டோம். அதற்கு அவர், ``அ.தி.மு.க., தி.மு.க இரண்டு கட்சிகளுமே எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. நாங்கள் கடந்த 2 மாதங்களாக தொடர் போராட்டத்தை நடத்திவருகிறோம். ஆனால், தி.மு.க தரப்பில் இருந்து எங்களுக்கு எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை. அதனால் தான், சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலில் போட்டியிடுகிறோம். தேனி மாவட்டத்தில் கம்பம் மற்றும் போடிநாயக்கனூரில் வேட்பாளரை நிறுத்தியுள்ளோம். எங்கள் கோரிக்கை ஒன்றே ஒன்று தான். இரட்டைச் சான்றிதழ் முறையை நீக்கிவிட்டு, DNT என்ற ஒற்றைச் சான்றிதழ் முறையை கொண்டுவரவேண்டும். மத்திய மாநில அரசின் சலுகைகள், 68 சமூக மக்களின் பிள்ளைகளுக்கு போய்ச் சேர வேண்டும். அவ்வளவு தான்.!” என்றார்.

Also Read: ஓ.பி.எஸ் பெயரில் ரூ.61 லட்சம்; மனைவி பெயரில் ரூ.7 கோடி - துணை முதல்வரின் மொத்த சொத்துப் பட்டியல்

சீர்மரபினர் நலச்சங்கத்தினரின் தொடர் போராட்டம், தேனி மாவட்ட அ.தி.மு.க-வுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும். அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியில், சீர்மரபினர் நலச்சங்கத்தினர் தாக்கத்தை ஏற்படுத்துவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



source https://www.vikatan.com/news/politics/seermarabinar-protest-against-admk-in-theni

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக