Ad

ஞாயிறு, 28 மார்ச், 2021

“எடப்பாடி சாதுர்யத்துடன் இருந்திருந்தால் கூட்டணி உடைந்திருக்காது!”

விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது அத்தனை பேர் நடுவிலும் எழுந்த கேள்வி `இவர் தாக்குப் பிடிப்பாரா?’ என்பது. ஆனால் ஆச்சர்யத்தை நடத்திக்காட்டினார் விஜயகாந்த். இப்பொழுது கணவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் தேர்தல் களமாட முடியாமல் இருக்க, விருத்தாசலத்தில் முதல் தடவையாகக் களமிறங்கியிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த். பா.ம.க-வின் கோட்டையான அங்கே புகுந்து வெற்றிக்கனி பறித்த விஜயகாந்தின் சாதனையை பிரேமலதா பின்தொடர்வாரா என்பதுதான் அரசியலில் `ஹாட் டாபிக்.’
பிரேமலதா

``எந்தக் கட்சியிலும் இல்லாத பல பாசிட்டிவான விஷயங்கள் எங்கள் கட்சியில் இருக்கின்றன. அதையெல்லாம் பார்க்க மறுக்கிறவங்க `மனைவி, மச்சினன்’ என்று பேசுகிறார்கள். எல்லா முடிவுகளும் கேப்டனின் ஆலோசனை பெற்றே எடுக்கப்படுகின்றன. எத்தனையோ ஆண்டுகள் கழித்து இப்போதுதான் நான் தேர்தலில் போட்டியிடுகிறேன். முன்பு வரைக்கும் நான் தே.மு.தி.க-வின் அடிப்படை உறுப்பினர் மட்டுமே. கட்சிப் பதவிக்கு வரும் எண்ணமோ, தேர்தலில் போட்டியிடும் எண்ணமோ எனக்கு இருந்ததில்லை. இப்போது கேப்டனின் உடல்நிலையை முன்னிட்டு தேர்தலில் நிற்கிறேன். கேப்டனின் மனைவி என்பதே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய மரியாதை. தொண்டர்கள் என்னை அன்போடு ‘லேடி கேப்டன்’ என்று அழைப்பதே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பட்டம்.’’ பிரசாரத்துக்கு இடையில் நமக்கு நேரம் ஒதுக்கிப் பேசுகிறார் பிரேமலதா.

``அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணியில் என்னதான் நடந்தது?’’

“அ.தி.மு.க தலைமை பி.ஜே.பி-யையும் பா.ம.க-வையும் பொருட்படுத்திய அளவுக்கு எங்களை மதிக்கலை. நான் ஆரம்பத்திலிருந்தே ‘தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளை சீக்கிரம் ஆரம்பிங்க, தேர்தலைச் சந்திக்கக் கால அவகாசம் கிடையாது’ன்னு சொல்லிட்டே இருந்தேன். ஆனால் அ.தி.மு.க-வினர் கடைசியாத்தான் தொகுதிகளைக் குறைத்துக்கொண்டு எங்ககிட்ட வந்து நின்னாங்க. அவர்கள் சொன்ன எண்ணிக்கை எங்க எதிர்பார்ப்புக்குப் பொருந்தலை. பேச்சுவார்த்தையின்போது தொகுதிகளின் பெயரையாவது சொல்லுங்கள் என்றால் ‘முதலில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள், பிறகு பார்க்கலாம்’ என்றார்கள். மாவட்டச் செயலாளர்களுக்கும், கேப்டனுக்கும் இதில் உடன் பாடில்லை. எடப்பாடி அண்ணன் சாதுர்யத்துடன் இருந்திருந்தால் கூட்டணி உடைந்திருக்காது. இந்தத் தேர்தலில் பெரும் வெற்றியும் கிடைத்திருக்கும். ஆனால் அவங்க அதைச் செய்யத் தவறிவிட்டார்கள். கனத்த இதயத்தோடு நாங்க வெளியே வந்துட்டோம். கட்சியை எப்படிக் கட்டுப்பாட்டோடு நடத்துவோம் என்பது எல்லோருக்குமே நல்லாத் தெரியும். எதைச் செய்தாலும் அதில் ஒழுங்கு இருக்கணும்னு எதிர்பார்க்கிறவள் நான். நல்ல மனசும் மக்களுக்காக உழைக்கத் துடிப்பும் இருக்கிறவங்க எப்போ வேணாலும் பயப்படாமல் மக்களிடம் போகலாம்னு கேப்டன் அடிக்கடி சொல்வார். நான் கொஞ்சம் வித்தியாசமா, ஆக்கபூர்வமா செயல்பட விரும்பறேன். கேப்டன் எங்க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தியபோதுதான் அ.தி.மு.க-வுடன் பேசிக்கொண்டிருந்தோம். கடைசி வரைக்கும் அவர்கள் பிடிகொடுக்காமல் இருந்தாங்க. அப்புறம் சுதீஷ், எடப்பாடி அண்ணன் வீட்டுக்கே போய்ப் பார்த்து நிலைமையைச் சொல்லிப் பேசினார். அவரும் எங்களுக்கு ஒத்துவராத எண்ணிக்கையைச் சொல்லி ‘இதற்குமேல் சீட் தர முடியாது’ எனச் சொல்லிவிட்டார். பிறகுதான் அந்தத் தகவல் கேப்டனிடம் சொல்லப்பட்டது. அவர்தான் மாவட்டச் செயலாளர்களின் மனம் புரிந்து கூட்டணியிலிருந்து விலகிவிடுவோம் எனச் சொல்லி அறிவித்துவிட்டார்.”

விஜயகாந்த், பிரேமலதா

``பணம் கேட்டீர்கள்... தொகுதிகளையும் உங்கள் வாக்கு வங்கிக்கும் மேலாகக் கேட்டீர்கள் என அவர்கள் தரப்பில் சொல்லப்பட்டதே?’’

“கொஞ்சமும் முகாந்திரம் இல்லாத குற்றச்சாட்டு. எங்கள் கட்சியை எப்படியாவது பின்னடையச் செய்துவிட வேண்டும் எனத் திட்டமிடுறாங்க. ஆனால் அவர்கள் எண்ணம் நிறைவேறாது. சுதீஷுக்காக ராஜ்யசபை உறுப்பினர் பதவி கேட்டதாகச் சொன்னாங்க. அப்படியும் நாங்க கேட்கவில்லை. எப்படியாவது இந்தக் கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காகப் பல வகையிலும் விட்டுக்கொடுத்து இறங்கி வந்தோம். எங்களின் பக்குவமான செயல்பாட்டை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்கிறபோது என்ன செய்வது? இதோ பயப்படாமல் களத்தில் இறங்கிட்டோம். ஜெயலலிதா இருந்தபோது நிலைமையைப் புரிந்துகொண்டு நடந்தார். வெற்றி கிடைத்தது. நாங்களும் நிறைய தொகுதிகளில் ஜெயித்தோம். அந்தப் பக்குவம் எடப்பாடிக்கு இல்லை.”

``தி.மு.க-வைக் குடும்பக் கட்சி என்று விமர்சித்த தே.மு.தி.க-வும் குடும்பக் கட்சி ஆகிவிட்டது என்ற விமர்சனங்கள் இருக்கின்றனவே?’’

``பொது வாழ்க்கையில் இருக்கற பிரச்னைகளை நானும் நேரடியாக உணரணும்னுதான் என்னை கேப்டன் எல்லா இடங்களுக்கும் அழைச்சிட்டுப் போனாரு. பெண் சுதந்திரத்தை வீட்டிலிருந்தே கேப்டன் தொடங்கினாரு. வீராவேசமாப் பேசுவதிலும் அறிக்கைகளிலும் எனக்கு உடன்பாடு இல்லை. மக்களுக்கு என்ன வேணுமோ அதைச் செய்யணும். அதை விட்டுட்டு வெறும் வாய்ப்பந்தல் போடுவதில் என்னங்க பிரயோஜனம்? இங்கே யாரும் பொலிட்டிக்கல் சயின்ஸ் படிச்சுட்டு அரசியலுக்கு வரலை. களத்துக்கு வந்த பிறகு கத்துக்கிட்டவங்கதான் அதிகம். எங்கள் கட்சியில ஆரம்பத்திலிருந்தே கேப்டனின் ரசிகர்களாக இருந்து வந்தவர்களுக்குத்தான் பதவிகள் தரப்பட்டன. பிறகு கட்சியின் செயல்பாடுகளைப் பார்த்து இணைஞ்சவங்களுக்குப் பகிர்ந்து தரப்பட்டது. அவர்கள் யாரும் ரத்த உறவுகள் இல்லை. எங்களுக்குக் கல்யாணம் முடிந்த கையோடு கேப்டன் ரசிகர் மன்றங்களின் செயல்பாடுகளில் நான் கவனம் செலுத்தினேன். அதே மாதிரிதான் நானும் சுதீஷும் கேப்டனுக்கு உதவியாகவே இருக்கிறோம். விருத்தாசலம் தொகுதியில் எம்.எல்.ஏ நிதி முழுமையும் பயன்படுத்தியது போக சொந்தப் பணத்தில் இலவச கம்ப்யூட்டர் மையங்களையும், தண்ணீர் டேங்குகளையும் கட்டிக் கொடுத்திருக்கிறார் கேப்டன். கேப்டன் பிறரைப் பார்த்து உதவி செய்யக் கூடியவர் அல்ல; உதவி செய்வது அவர் பிறவிக் குணம். வீட்டைத்தேடி `ரேஷன்’ என கேப்டன் சொன்னபோது சிரித்தவர்கள் இப்போது அதைச் செயல்படுத்துவேன் என்கிறார்கள். முன்னாடி ‘அவர் கோபப்படுகிறார்… அதிரடியாக நடத்துக்கிறார்’ என்றவர்கள், இன்றைக்கு ‘கேப்டன் மாதிரி ஒரு நல்ல மனுஷனை, தைரியமான ஆளை பாக்கவே முடியலைப்பா’ என்கிறார்கள். ‘வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா’ பாட்டு ஞாபகத்துக்கு வருது.”

``உங்கள் மகன் விஜய பிரபாகரன் தடாலடியாகப் பேசுகிறாரே?’’

“ ‘இளங்கன்று பயமறியாது’ என்பார்கள். அவர் எல்லாவற்றையும் கூட இருந்து கவனிக்கிறார். தொகுதிகளைப் பிரித்துக்கொள்ளாமல், கடைசிக் கட்டம் வரை இழுத்துக் கொண்டு சென்ற கோபம்தான். அரசியல் எல்லாவற்றையும் கத்துக்கொடுக்கும். பக்குவப்படுத்தும். நான் விருத்தாசலத்தில் கவனமாக இருக்கேன். மற்ற தொகுதிகளை கேப்டன், சுதீஷ், விஜய் பிரபாகரன் பார்த்துக்கிறாங்க.”

``பொறியியல் கல்லூரி, கட்சிக் கூட்டங்கள், இதற்கிடையே குடும்பத்தையும் கவனிக்கிறீர்கள்... எப்படி சமாளிக்கிறீர்கள்?’’

“ஒரே நேரத்தில் பல விஷயங்களைக் கையாளக் கூடிய திறமை என்னைப் போல எல்லாப் பெண்களுக்குமே இருக்கு. நேரத்தைச் சரியாகத் திட்டமிட்டுப் பிரித்து வேலை செய்தால் இன்னும்கூட நிறைய செய்ய முடியும்.”

``புதுப்பொலிவோடு கேப்டனை எப்போ பார்க்கலாம்?’’

“கேப்டனுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. அவருடைய தன்னம்பிக்கைக்கு முன்னாடி யாரும் நிக்கக்கூட முடியாது. ‘அவர் ரொம்ப முடியாமல் இருக்கிறார், பழைய ஃபார்முக்கு வர முடியாது’ன்னு சொல்றதில் உண்மையே இல்லை. கேப்டனுக்கு உடல்நலம் நல்லாருக்கு. பேசும்போது மட்டும் அந்தக்குரலில் தெளிவு இன்னும் கைகூடி வரலை. அதற்கு முறையான சிகிச்சைகள் நடந்துக்கிட்டே இருக்கு. எழுந்து சுலபமாக நடப்பதற்கும் சில பிரச்னைகள் இருக்கு. அதற்கும் சேர்த்து சிகிச்சைகள் நடக்குது. நல்லபடியாக அவர் எழுந்து வருவார்.”

``கேப்டன்கூட இத்தனை நாள் வாழ்க்கையை நடத்தியிருக்கீங்க... இப்போ அவர் உடல்நிலை குறித்த உணர்வு எந்த அளவுக்கு உங்களை பாதிச்சிருக்கு..?’’

“அவர் உடல்நிலை பாதிச்ச நேரத்துல மனசு உடைஞ்சு போயிட்டேன். எந்தப் பிரச்னை யானாலும் அதை எதிர்கொள்கிற பக்குவம் தைரியம் எனக்கிருக்கு. ஆனால் உடலால் அவருக்கு நேர்ந்த பாதிப்பை என் மனசால தாங்கிக்கவே முடியலை. ஏத்துக்கவே முடியலை. அவர் திரும்பவும் வந்துவிடுவார் என உறுதியாக நம்பித்தான் இப்போ பயணிச்சுக்கிட்டே இருக்கேன். கடவுளை நம்புறேன். ஒரு பீனிக்ஸ் பறவை மாதிரி அவர் வந்துடுவார்ங்கிற நம்பிக்கையில் மட்டுமே இயங்கிக்கிட்டு இருக்கேன் என்பதே உண்மை.’’



source https://www.vikatan.com/government-and-politics/politics/interview-with-premalatha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக