Ad

திங்கள், 29 மார்ச், 2021

"நைட் பூரா தூங்க விடல சார்!"- மகாபலிபுரத்தில் பணத்தோடு தொலைந்த பர்ஸ் வீடு தேடி வந்தது எப்படி?!

அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியா விந்தை வாழ்க்கை இது. ஒரு நொடிக்கு முன்பிருந்த சர்க்கரைப்பொழுதுகள் சடுதியில் கசந்துவிடும் மாயை நம் வாழ்க்கைக்கு உண்டு.

"நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை... நடந்ததையே நினைத்திருந்தால் உலகில் அமைதியில்லை!" என்று சொன்ன கண்ணதாசன் ஒரு தீர்க்கதரிசிதான்.

ஆனால் எப்பேர்ப்பட்ட துன்பத்தையும் புரட்டிப்போடும் வல்லமை ஒரு சில மனிதர்களுக்கு உண்டு. அதிலும் முகமறியா மனிதர்கள் அப்படி நம் மகிழ்ச்சிக்குக் காரணமாகிப்போவதுதான் கூடுதல் ஸ்பெஷல்!

இரு தினங்களுக்கு முன் குடும்பத்தோடு மகாபலிபுரத்துக்கு ஒரு மினி டூர் போயிருந்தேன். நான் என் மனைவி, என் குழந்தைகள்... கூடவே என் தங்கையும் தங்கையின் இரண்டு குழந்தைகளும் வந்திருந்தார்கள். காலை 11 மணிக்குக் காரில் கிளம்பிய எங்கள் பயணம் ஆட்டம் பாட்டமென குதூகலத்தோடு குன்றத்தூரிலிருந்து துவங்கியது. போகும் வழியில் கோவளம் தாண்டி சாலையோரம் இருக்கும் மரத்தின் நிழலில் சாப்பிட்டு, கடற்கரையில் ஆட்டம் போட்டு, நிறைய நிறைய புகைப்படங்கள் எடுத்து என அத்தனை மகிழ்ச்சியால் அந்த நாள் நிரம்பி வழிய ஆரம்பித்தது.

மகாபலிபுரம்

தங்கையும், தங்கையின் குழந்தைகளும் இதற்கு முன்பு மகாபலிபுரம் வந்ததில்லை என்பதால் நானும் என் மனைவியும் கைடாகவே மாறி, "இதுலாம் ஒரே கல்லுல செஞ்ச சிற்பங்கள்!", "இந்தப் பாறைக்கும் மகாபாரதத்துக்கும் சம்பந்தமில்லை!", "பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் போர் நடந்தது... இரண்டாம் புலிகேசியை மகேந்திர வர்ம பல்லவன் தோற்கடித்தான்!" என வரலாற்றையே தோசைக்கல்லில் புரட்டிப்போட்ட ஊத்தாப்பம் போல மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டிருந்தோம். மகாபலிபுரத்தின் அத்தனை பிக்னிக் ஸ்பாட்களையும் முடித்துவிட்டு கடைசியில் கடற்கரை கோயிலையும், கடற்கரையையும் குழந்தைகளுக்குக் காட்டினால் பயணம் முழுமையடைந்துவிடும். காலையிலிருந்து அதிகம் நடந்ததால் குழந்தைகளுக்கு கால்கள் வலிக்க ஆரம்பித்துவிட்டது. கடற்கரைக் கோயிலின் புல்தரையில் உருண்டும் புரண்டும் 'சீக்கிரம் கடலைக் காட்டுங்க!' என கோரிக்கை வைத்தனர்.

மகாபலிபுரம்
மகாபலிபுரம்
மகாபலிபுரம்
மகாபலிபுரம்

மாலை மங்கும் நேரத்தில் கடற்கரையை அடைந்து ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளில் நர்த்தனமாடின மழலைகளின் கால்கள். பெரியவர்களும் மழலையாக மாறி கடலில் கால் நனைத்த பொழுதில் அனிச்சையாக எங்கள் கைகள் செல்போன்களைத்தான் தேடின. ஏனென்றால் காலையிலிருந்து நிறைய வீடியோக்கள் போட்டோக்களாக எடுத்துத்தள்ளியிருந்தோம். மனைவியின் செல்போனில் சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆகிவிட்டது. மனைவியின் போனை என் கால்சட்டைக்குள் வைத்தேன்.

ஆனாலும் கடலில் ஆட்டம் போடுவதை எடுக்காமல் விடுவோமா என்ன? என் செல்போனில் க்ளிக்கினேன்.

எங்கள் அருகே கடலில் குதியாட்டம் போட்ட ஒரு வட இந்தியக் குடும்பத்தை ரோந்து வந்த போலீஸ்காரர்கள் அதட்டினர். வருடத்துக்கு நூறு பேரையாவது காவு வாங்கும் கடல் இது என எச்சரித்தார்கள்.

இருள் கவியத்தொடங்கியதால் குழந்தைகளிடம் கெஞ்சிக்கூத்தாடி கடலிலிருந்து விலக்கி அழைத்துப்போனோம். கடற்கரை அருகே இருக்கும் அந்த குறுகலான பாதையோரக் கடைகளில் பொருட்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்துபோனோம். அத்தனைப் பெருங்கூட்டம். கொரோனாவே அங்கு வந்தால் மனிதக்கூட்டத்தின் நடுவே நசுங்கி ஆளை விட்ருங்கடா சாமி என கதறிவிடும் அளவுக்கான கூட்டம் அது!

''பெருங்கூட்டத்தில் குழந்தைகள் மிஸ்ஸாக வாய்ப்பிருக்கிறது... கவனமாக இருங்கள்'' என ஒரு போலீஸ்காரர் மைக்கில் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு பெண் தன் மகனைக் காணவில்லை என பதற்றத்தோடு தேடிக்கொண்டிருந்தார். பார்க்க அதிர்ச்சியாக இருந்தது. இரண்டு பெண்களும் நான்கு குழந்தைகளை சமாளிக்க முடியுமா என நினைத்தபடி மனைவி இருக்கும் இடத்தை பதட்டத்தோடு வந்தடைந்தேன். படுசுட்டிக் குழந்தைகள் சமர்த்தாக அவரவர் அம்மாக்களோடு அங்கு நின்றிருந்தார்கள். அப்பாடா என்றிருந்தது. இன்னும் சில அடிகளில் கார் பார்க்கிங். அதோடு திருப்தியாக வீட்டுக்குக் கிளம்பிவிடலாம் என்று நினைத்துக் கொண்டே மனைவியும் தங்கையும் வாங்கிய பொருட்களுக்காக பணத்தைக் கொடுக்க பர்ஸைத் தேடினேன். காணவில்லை... என் இரண்டு பாக்கெட்களிலும் இரண்டு செல்போன்கள் மட்டுமே இருந்தது. ஒரு சில விநாடிகள் இதய நின்று துடித்தது.

பர்ஸைக் காணவில்லை என்றதும் மனைவியும் தங்கையும் கலவரமானார்கள். ஏனென்றால் அதில் 1,200 ரூபாய் பணம்... என்னுடைய வாக்காளர், ஆதார், பான் அட்டைகள், காரின் ஆர்.சி புக், இரண்டு ஏ.டி.எம் கார்டுகள் என முக்கியமான ஆவணங்களும் இருந்தன.
மகாபலிபுரம்

கடற்கரை நடைபாதைக் கடையோர மணலில் மனிதக் காலடித்தடங்கள் மட்டுமல்ல... எக்கச்சக்க குப்பைகள்...அந்த  ஜனநெருக்கடியில்  நின்று தேடக்கூட முடியவில்லை. இந்நேரம் என் பர்ஸ் யார் கையில் இருக்கிறதோ என்று நினைத்துக் கொண்டே விக்கித்து ஒரு நிமிடம் ஒரு திண்டில் போய் உட்கார்ந்துவிட்டேன். பிறகு ஆசுவாசப்படுத்திக் கொண்டு குடும்பத்தினரோடு காவல் நிலையத்திற்கு சென்று புகாரளித்தேன். புகார் அளித்தேன் என்பதைவிட திணித்தேன் எனலாம். காவல் நிலையத்தில் இதை ஒரு பெரிய விஷயமாகவே நினைக்கவில்லை. இரும்பு மனிதர்களைப் போல எந்திரத்தனமாய் புகாரை போனால் போகிறதென்று வாங்கினார்கள்.

காரில் மௌனமாக அங்கிருந்து குடும்பத்தோடு கிளம்பினேன். சென்னையிலிருந்து மகாபலிபுரம் கிளம்பும்போது இருந்த உற்சாகம் வடிந்திருந்தது. நல்லவேளையாக சென்னையை நெருங்கும்போது, இயல்புநிலைக்குத் திரும்பினேன். ஒவ்வொரு அடையாள அட்டைக்காகவும் அரசு அலுவலகங்களின் கதவைத் தட்டவேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்திருந்தேன். அந்த மசகு போடாத தூர்ந்து போயிருக்கும் அரசு எந்திரத்தை எப்படி அணுகி எனக்கான அடையாளத்தை ஒவ்வொன்றாகப் பெறுவது என்று நினைத்தாலே துக்கம் தொண்டையை அடைத்தது. அதிலும், "காரின் ஆர்.சி புக் ஒரிஜினலை தொலைத்தால் போச்சு. இனி உன் காரின் மதிப்பே பாதிதான்!" என கிலி கிளப்பினார்கள் நண்பர்கள்.

ஒருநாள் மிக சோகமாகக் கழிந்தது. மறுநாள் காலையிலேயே மனைவி `காம்போதி' ராகத்தில் திட்ட ஆரம்பித்துவிட்டார். அடுத்த தாக்குதலுக்குள் ஆவணங்களை வாங்கிவிடவேண்டும்.
மகாபலிபுரம்

அப்போது கீழ் வீட்டில் வசிக்கும் வீட்டு ஓனர் கால் பண்ணியிருந்தார். 

"நேத்து உங்களுக்கு ரிஜிஸ்டர்டு போஸ்ட் வந்திருந்துச்சு. ரெண்டு பேருமே வேலைக்குப் போயிட்டதால போஸ்ட் ஆபிஸ் வந்து வாங்கிக்க சொல்லியிருக்காங்க" என்றார். ஏதோ பொறி தட்டியது. காலையில் முதல் வேளையாக போஸ்ட் ஆபிஸ் போனேன். அந்தத் தபாலை வாங்கிப் பிரித்துப் படித்தேன். ஒரு வெள்ளைத்தாளில் சின்னதாய் தகவல் இருந்தது. கூடவே பின் செய்யப்பட்ட தொலைந்து போன என் ஆவணங்களின் நகல்கள். ஒரு கணம் என் கால்கள் தரையில் இல்லை! மீண்டும் மீண்டும் வாசித்தேன்.

"நாங்கள் சுற்றுலா சென்ற இடத்தில் உங்கள் ஆவணம் கிடைத்தது. அதில் உங்கள் செல் நம்பர் இல்லை. இரண்டு முகவரிகள் இருந்ததால் இரண்டு முகவரிக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறோம். இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்!" என எழுதி ஆற்காட்டில் இருந்து செல்போன் நம்பரோடு அனுப்பியிருந்தார் கோபிநாத் என்ற நல்லவர். உடனடியாக அவருக்குக் கால் செய்து அறிமுகப்படுத்திக்கொண்டு நன்றி சொல்லி பேசினேன். உற்சாகத்தோடு பேசினார் மனிதர்.

"நல்ல வேளை பேசிட்டீங்க சார்... நாங்க ஆற்காட்டுல இருக்கோம் சார். என்னோட மனைவியும் அவங்க தோழிகளும் மகாபலிபுரம் டூர் போனாங்க. அங்கே மணல்ல பர்ஸ் கிடைச்சிருக்கு. போலீஸ் ஸ்டேஷன் போக தயக்கம். அதான் என்ன பண்றதுனு தெரியாம ஊருக்குக் கொண்டு வந்துட்டாங்க. நைட் பூரா தூங்க விடல சார் என்னை..! 'பாவம் இத தொலைச்சவரு என்ன பாடுபட்ருப்பாரோ... புள்ளகுட்டிகளோட வந்திருந்தா பத்திரமா வீடு போய் சேர்ந்திருப்பாங்களா-னு தூங்கவே இல்லை. என்னையும் தூங்க விடலை... ஆதார்ல இருக்குற அட்ரஸுக்கும் ஆர்.சி புக்ல இருக்குற அட்ரஸுக்கும் முதல் வேலையா ரெண்டு தபால் போட்டோம்!'' என்றார்.

கோபிநாத் குடும்பத்துடன்

ஆற்காட்டில் சின்னதாய் செல்போன் கடை வைத்திருக்கிறாராம் கோபிநாத்.

"ஆற்காடுக்கு நேரில் நீங்க வர தாமதமாகும் கூரியரில் பத்திரமா அனுப்புறேன்!" என்று சென்னையில் என் அலுவலக முகவரியை வாங்கிக் கொண்டார். உடனே கூரியரில் அழகாக பேக் செய்து என் பர்ஸை அன்றே அனுப்பி வைத்தார் கோபிநாத். மறுநாள் காலையில் என் கைக்கு வந்து சேர்ந்தபோது அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. கனவில் மிதப்பதுபோல இருந்தது. கோபிநாத்தின் மனைவி மகாலட்சுமிக்கு ஸ்பெஷல் நன்றியைச் சொன்னபோது அந்தப் பெண் பேசிய வார்த்தைகள் நெகிழ வைத்துவிட்டது.

"உங்க பொருளை உங்ககிட்ட சேர்த்ததுக்கு எதுக்கு சார் நன்றிலாம்... நீங்க எடுத்திருந்தா இப்படி பண்ண மாட்டீங்களா..? நான் உங்க பர்ஸை எடுத்தப்போ ரெண்டு பசங்க எங்ககிட்ட கொடுங்கனு கேட்டாங்க. நான்தான் வீட்டுலயே கூரியர் இருக்குனு பொய் சொல்லி வெச்சுக்கிட்டேன். பணத்தை எடுத்துட்டு வீசிட்டு போயிட்டாங்கன்னா என்ன பண்றதுனு பயம்...பொண்ணுகளா நாங்க சேர்ந்து போனதால போலீஸ் ஸ்டேஷன் போகவும் தயக்கம். அதான் நாமளே அட்ரஸ் கண்டுபிடிச்சி அனுப்பிடலாம்னு ஆற்காட்டுக்கே வந்துட்டேன். ஒவ்வொரு நிமிஷமும் பதற்றமா இருந்துச்சு. பணம்லாம் கரெக்ட்டா இருக்கா சார்?" என்றார்.

"பணம் கிடக்கட்டும் பணம்... இந்த மனம் யாருக்கு வரும்? ரொம்ப நன்றிமா!" என்றேன்.

"என் மாமா அனுப்புன கடுதாசில அவர் கையெழுத்து உங்களுக்குப் புரியாம போயிடுமோனு கூட பயந்துட்டு இருந்தேன் அண்ணா..!" என்ற மகாலட்சுமி, "அண்ணானு கூப்பிட்டுக்கலாம்ல உங்களை?" என்று வெள்ளந்தியாய் கேட்டார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை ஆற்காட்டில் உள்ள தங்கச்சி வீட்டுக்கு ஃபேமிலி டூர் போகப்போகிறோம்.



source https://www.vikatan.com/lifestyle/travel/interesting-human-story-on-wallet-lost-and-found

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக