Ad

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

நூடுல்ஸ் வாடையும் வீணான காளானும்..! - பெண்ணின் சமையலறை டைரீஸ் #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"அம்மா... இன்னிக்கு ராத்திரி நானே சமைக்கிறேன்மா!"

"என்னடி... இத்தனை நாளா நானே சமைக்கச் சொன்னாலும் கிச்சன் பக்கம் போக மாட்ட... இப்போ என்ன திடீர்னு?"

"அப்போயெல்லாம் ஸ்கூல், ட்யூஷன், காலேஜ்னு பிஸியா இருந்துட்டேன். இப்போ கத்துக்கிறேன்மா. சுத்தமா சமையல் தெரியாதுன்னு சொல்ல எனக்கு அசிங்கமா இருக்கு" என்றேன் அம்மாவிடம்.

"ஆமா... 24 வயசாகுது... சமைக்கத் தெரியாதுன்னு சொன்னா போற இடத்தில உன் மாமியார் என்னை தான் திட்டுவாங்க."

"அதெல்லாம் நீ பயப்படாதம்மா, நான் பாத்துக்கிறேன். என் சமையல் எபிஸோடு ஆரம்பமாகுது."

Representational Image

எனக்கும் சமையல் அறைக்கும் பெரிய பரிட்சயம் இல்லை.

அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்றால் முதல் நாள் உணவகத்தில் வாங்கிக் கொள்வோம். இரண்டாம் நாள் அம்மாவின் வழிகாட்டுதல்படி நான் சமையல் செய்வேன். தக்காளிச் சட்னியை அப்படி செய்ததாக ஞாபகம். பின் எப்போதாவது அம்மா சமையற்கட்டில் இருக்கும்போது, அவசர வேலை வந்து அவர் சென்றுவிட்டால் என்னை அடுப்பை பார்த்துக்கொள்ளச் சொல்வார்.

நான் அடுப்பில் இருப்பதை தீயவிடாமல் கிளறிக் கொண்டிருப்பேன். அம்மா வந்ததும் ஒப்படைத்துவிட்டு நகர்ந்து விடுவேன்.

இப்போது வந்திருக்கும் ஆசையோ, முழு சமையலையும் நானே செய்ய வேண்டும் என்ற அவா.

முதல் நாள் நூடுல்ஸ் சமைக்கத் திட்டமிட்டேன். எடுத்ததுமே ஆரோக்கியமில்லாத அயல் நாட்டு உணவை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்று தெரியவில்லை. காய்கறிகளை நானே அரிந்து யூடுயூப்பில் நான்கு, ஐந்து வீடியோ பார்த்துவிட்டு தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டு சமைக்கத் தொடங்கினேன்.

நூடுல்ஸை வேகவைத்து எடுத்துவைத்தபோது, அதன் வாசனையே எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. பக்கத்து அடுப்பில் வெங்காயம் வதங்கியதும் கேரட், குடமிளகாய் சேர்த்து வேகவைக்க, அதன் வாசனையும் எனக்குப் பிடிக்கவில்லை. ஓரளவுக்கு நூடுல்ஸ்தான் என்று சொல்லும் அளவுக்குச் செய்து முடித்துவிட்டேன்.

Noodles

சாப்பிடுவதற்காக ஒரு தட்டு நிறைய போட்டுக்கொண்டு சாப்பிட அமர்ந்தேன். அதுநாள் வரை, நூடுல்ஸை எப்படி செய்கிறார்கள் என்று தெரியாமல் நான் உண்டு வந்த ஓர் ருசியான உணவான அது, இன்றோ வேகவைத்தபோது வந்த வாடை, அதன் வழவழ, கேரட் வாடை, இன்னும் நான் அதில் என்னவெல்லாம் சேர்த்தேனோ அவையெல்லாம் எனக்கு நூடில்ஸிடமிருந்து தனியாகத் தெரிய, எனக்கு சாப்பிடவே பிடிக்கவில்லை.

தங்கை, 'நல்லா இல்ல...' என்று சொல்லிவிட்டாள். அப்பாவும் அம்மாவும், 'நல்லாதான் இருக்கு' என்றனர். அது உண்மையாகச் சொன்னதா, இல்லை என் ஆறுதலுக்காகச் சொன்னதா எனக்குத் தெரியவில்லை. ஆனாலும், நான் செய்த நூடில்ஸ் எனக்குப் பிடிக்கவில்லை என்பது நிஜம். 'இனி நூடுல்ஸ் வாங்கவே கூடாது' என்று அம்மாவிடம் சொல்லிவிட்டேன்.

அடுத்து நாள், வீட்டில் காளான் இருப்பதாகவும் அதை வைத்து குழம்பு வைக்கப் போவதாகவும் அம்மா கூறினார்.

"வேண்டாம்மா... காளான்ல நான் ஏதாவது வித்தியாசமா செய்றேன். நீ வேற குழம்பு வெச்சிக்கோ..." என்றேன் அம்மாவிடம்.

என்ன செய்யலாம் என்று ஆராய்ந்ததில் 'மஷ்ரூம் டிக்கா' எளிமையாகவும், கண்கவரும் வண்ணமும் இருந்தது. அதனால் அதை செய்ய முடிவெடுத்தேன்.

தயிர், கடலைமாவு, மற்றும் தேவையான மசாலாவை சேர்த்து காளானை ஊறவைத்து விட்டேன். மூங்கில் குச்சியில் சொருகி வேகவைக்க வேண்டும். வீட்டில் மூங்கில் குச்சி இல்லை. ஒரு வீடியோவில், தோசை கல்லிலே காளானை நேரடியாக வேக வைத்தார்கள். அதேபோல நானும் செய்தேன்.

நன்றாக வெந்து மொறுமொறுவெனத் தயாராகப்போகிறது என்று நான் ஆசையாகக் காத்திருக்க, காளானிலிருந்து தண்ணீர் விட ஆரம்பித்தது. மசாலாவும் சரியாக ஒட்டவில்லை. எண்ணெய் ஊற்றினால் தண்ணீர் கசிந்து தெறிக்கிறது. அப்படியே வேகவிட்டால் கருகுகிறது. காளான் தண்ணீர் விட்டு வேகும் என்று எந்த வீடியோவிலும் சொல்லவில்லையே..!

மசாலா கலந்தது, பதம், வேகவைக்கும் முறை... இதில் ஏதோ ஒன்றில் கோட்டைவிட்டு மொத்த காளானையும் வீணாக்கிவிட்டேன்.

என்னதான் யூடியூப் பார்த்தாலும், பிராக்டிக்கல் நாலெட்ஜுக்கு, இனி அம்மா சமைக்கும்போது அருகிலிருந்து பார்த்து கற்றுக்கொண்டு சமைக்கலாம் என்று முடிவெடுத்தேன்.

ஒரு 80 பக்க நோட் ஒன்று வாங்கி அதில் குறிப்புகளை எடுக்கத் தொடங்கினேன்.

சட்னி வகைகளைச் செய்வது எனக்கு மிகவும் பிடித்தது. சின்னச் சின்ன மாறுதல் செய்து பல வகை சட்னிகளை ருசியாகச் செய்யலாம் என்று அம்மாவின் பக்கத்தில் நின்று கற்றுக்கொண்டேன்.

உப்புமா பலருக்குப் பிடிக்காது என்கின்றனர். ஆனால் எனக்கு என் அம்மா செய்யும் உப்புமாவும் தேங்காய் சட்னியும் மிகவும் பிடிக்கும். அதன் செய்முறையையும் குறிப்பு எடுத்துக் கொண்டேன்.

Mushroom

அவ்வப்போது நானும் தனியாக சமையல்செய்து கற்றுக்கொண்டேன். குருமா செய்யும்போது பட்டை, கிராம்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கும்போது வீடே மணக்கும். அந்த வாசனையே சமைக்கத் தூண்டுகிறது. இந்த உப்பு, காரம்தான் எனக்குச் சரியான அளவில் சேர்க்கத் தெரியவில்லை. ஏதாவது ஒன்று அதிகமாகி என்னை இம்சிக்கிறது.

அடுத்ததாக, எண்ணெயில் பொரித்து எடுக்கக் கற்றுக் கொண்டேன். கையின் மேலே சில கொப்புளங்களை அன்பளிப்பாகவும் பெற்றேன்.

அம்மா ரசம் வைக்கும்போது அதை பார்த்து கற்றுக் கொள்வதைவிட, சீரகம், மிளகு அரைத்த மிக்ஸி ஜாரை நுகர்ந்து கொண்டிருப்பதிலேயே எனக்கு பாதி நேரம் சென்று விடுகிறது.

ஒரு பிறந்தநாள் விழாவுக்காக பெரியப்பா காளான் பிரியாணி செய்யப்போவதை என்னிடம் சொன்ன அம்மா, 'நீ போய் கற்றுக்கொள்' என்றார்.

நானும் பெரியப்பா அருகில் நின்று என்னென்ன போடுகிறார் என்று ஒவ்வொரு பொருளாகக் கூர்ந்து கவனித்தேன். அவர் 30 பேருக்கு சமைத்துக்கொண்டிருந்தார். அதுவே நாலு பேருக்கு செய்வதாக இருந்தால் என்ன அளவு போட வேண்டும் என்றும் சொல்லிக்கொண்டே செய்தார்.

முதலில் எண்ணெய், நெய் ஊற்றி பச்சைமிளகாயைச் சேர்த்தார். உடனே அது பொரிந்து, என் மேல் தெறித்தது.

"பயப்படாத... பச்சை மிளகாயை முழுசா போடவும் அப்படி தெறிக்குது, நறுக்கிப் போடணும்...'' என்றார் பெரியப்பா.

சமையல் / Vegetables

அந்த நெய்யோடு சேர்ந்த பச்சைமிளகாய் வாசத்தில் இருந்தே பிரியானி பிறப்பு எடுத்துவிட்டது. காளான் என்றதும் பயந்தேன். ஆனால் பிரியாணியில் காளான் தண்ணீர் விட்டு வெந்தும் நன்றாகவே வந்தது. அரிசியை சேர்ப்பதற்கு முன் மசாலாவில் தண்ணீர் சேர்த்துக் கிளறி, உப்பு, காரம் சரியாக இருக்கிறதா என்று பார்க்க என்று சொல்லி, என்னிடம் அந்த தண்ணீரை கரண்டியில் எடுத்துக் கொடுத்தார் பெரியப்பா. வாயில் ஊற்றியதும் ஏதோ ஒன்று தலைக்கு ஏறியது. உப்பா, காரமா, மசாலாவா, இல்லை அதன் சூடா தெரியவில்லை. இதைப் பிரித்துப் பார்த்து உணறும் அறிவு எப்போதுதான் வருமோ என்று என்னை நானே நொந்துகொண்டேன்.

Also Read: சாக்கோபார்..! - குறுங்கதை #MyVikatan

கடைசியில் பிரியாணியைச் சாப்பிடும்போது மிகவும் ருசியாக இருந்தது. அதன் செய்முறையை கற்றுக் கொண்டதில் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் உண்டேன்.

அன்று காலையில் தோசை, கறிவேப்பிலை சட்னி, மதியம் பெரியப்பாவிடம் இருந்து கற்றுக் கொண்ட காளான் பிரியாணி, இரவு சப்பாத்தி, சென்னா கிரேவி நானே செய்தேன். சப்பாத்திக்கு அம்மா மாவு பிசைந்து கொடுத்தது வேற கதை.

Biryani

எல்லா வேலைகளையும் முடித்ததும் உள்ளுக்குள் ஒரு சந்தோசம். 'ரசத்திற்கு புளி கரைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்... மற்றபடி நாமும் சமையலை ஓரளவிற்கு கற்றுக் கொண்டு விட்டோம்.'

"அம்மா நான் சமையல் கத்துக்கிட்டேன்லம்மா..." என்றேன் பெருமையும் மகிழ்ச்சியும் கலந்து.

"சமையல்ல இன்னும் கத்துக்க எவ்வளவோ இருக்கு.. அசைவம் செய்யப் பழகணும், மீன் கழுவத் தெரியணும், அரைக்க வேண்டிய பொருள்லாம் இருக்கு. மாவு அரைக்கக் கத்துக்கணும், கொள்ளு சமைக்கிறப்ப கல்லை புடைச்சிட்டு சமைக்கணும், இனிப்பு வகை செய்ய கத்துக்கணும். இதெல்லாம் கேக்க ஈசியா இருந்தாலும் பாக்குவமா எல்லாம் பழகணும். அதுக்குள்ள சமையல் அவ்ளோதான்னு நினைச்சா எப்படி!"

அம்மா சொல்லிக்கொண்டே இருக்க, என் மைண்ட் வாய்ஸ் கதற ஆரம்பித்தது... 'அய்யோ இப்போவே எனக்கு கண்ணக் கட்டுதே!'


-செ. ரேவதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/24-year-old-woman-shares-her-first-cooking-experience

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக