பஞ்சாப் - சிறு வரலாறு
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை மினி ஆர்சிபி என ரசிகர்கள் கிண்டல் அடிப்பார்கள். ஆனால், உண்மையில் பெங்களூருவைவிட பஞ்சாபின் பர்ஃபாமென்ஸ்தான் ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசம். இன்னும் ஒருமுறைக்கூட கோப்பையை வெல்லாத பஞ்சாபின் உச்சபட்ச சாதனை என்பது 2014 ஐபிஎல்-ல் இறுதிப்போட்டியில் விளையாடியதே!
12 ஆண்டுகளாக ஐபிஎல்-ல் விளையாடுபவர்கள் இதுவரை எந்த சீசனையும் சீரியஸாக எடுத்துக்கொண்டதில்லை என்பதே வரலாறு. பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பிரீத்தி ஜிந்தா ஐபிஎல் ஏலத்துக்கு ஷாப்பிங் வரும் மனநிலையிலேயே வருவார் என அவரைப்பற்றி உலவும் மீம்களில் உண்மைகள் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு சீசனுக்கும் அணிக்குள் இருக்கும் பலரை கழற்றிவிட்டு, ஏகப்பட்ட கோடிகளோடு ஏலத்துக்கு வந்து ஆசைதீர ஏல போட்டாப்போட்டியை நடத்தி ப்ளேயர்களை பர்ஸில் வாங்கிப்போட்டுக்கொண்டுபோவது பிரீத்தியின் ஹாபி. ஏலத்தின்போதுதான் இவர்கள் ட்ரெண்டில் இருப்பார்களே தவிர ஐபிஎல் நடக்கும்போது இவர்களின் பர்ஃபாமென்ஸ் ட்ரெண்ட் ஆனதேயில்லை.
யுவராஜ் சிங் தொடங்கி, சங்ககாரா, கில்கிறிஸ்ட், டேவிட் ஹஸ்ஸி, ஜார்ஜ் பெய்லி, ஷேவாக், மில்லர், முரளி விஜய், கிளன் மேக்ஸ்வெல், அஷ்வின் என 12 சீசன்களில் 11 கேப்டன்களைப் பார்த்துவிட்டது பஞ்சாப். இரண்டு ஆண்டுகளாக கேப்டனாக இருந்த அஷ்வினை அணியில் இருந்து கழற்றிவிட்டு கே.எல்.ராகுலை இந்த முறை கேப்டன் ஆக்கியிருக்கிறார்கள். 2014-ல் ரன்னர் அப் வந்தது ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி தலைமையில்தான் நடந்தது. கடந்த பல ஆண்டுகளாக ப்ளே ஆஃபுக்கூடத் தகுதிபெற முடியாத அணியாக இருக்கும் பஞ்சாபுக்கு அப்படி என்னதான் பிரச்னை?!
பிரச்னை ஒன்று - கேப்டன்களுக்கே கியாரன்ட்டி கிடையாது!
ஒரு அணியில் வீரர்கள் மாறலாம். ஆனால், கேப்டனே சீசனுக்கு ஒருமுறை மாறுவதுதான் பஞ்சாபின் முதல் பிரச்னை. கேப்டன்கள் மாறிக்கொண்டேயிருந்ததால் வெற்றிபெறுவதற்கான அணியை அவர்களால் உருவாக்கவேமுடியவில்லை. எந்த வீரரின் மீதும் நம்பிக்கை இல்லாததால் ஒரு நிலையான அணி அவர்களிடம் இல்லை. இங்கே இரண்டு ஆண்டுகள் கேப்டனாகத் தாக்குப்பிடித்ததே அஷ்வினின் சாதனைதான். கேப்டன்கள் மட்டுமல்ல கூடவே சேர்ந்து பயிற்சியாளர்களும் மாறிக்கொண்டேயிருந்திருக்கிறார்கள்.
பிரச்னை இரண்டு - பேட்டிங் கோளாறு!
இங்கேயும் வெளிநாட்டு பேட்ஸ்மேன்களின் ஆதிக்கமே அதிகம். அதுதான் ஒருவகையில் பிரச்னையும் கூட. கிறிஸ் கெய்லுக்கே அவர்மீது நம்பிக்கை இருக்கிறதா எனத்தெரியாது. ஆனால், இன்னமும் பஞ்சாப் அவரை நம்புகிறது. 40-வயதான கெய்ல் கடந்த சில சீசன்களாக பஞ்சாபுக்கு விளையாடிக்கொண்டிருக்கிறார். கடந்த இரு சீசன்களில், கே எல் ராகுல் மட்டும்தான் சிறப்பாக ஆடிய பேட்ஸ்மேன். மற்றவர்கள் எல்லாம் பெவிலியனுக்குப் போவதும், வருவதுமாக இருந்தவர்கள்தான்.
பிரச்னை மூன்று - அனுபவம் இல்லாத பெளலர்ஸ்!
கடந்த ஐபிஎல் சீசனில் 175 ரன்களுக்கு மேல் பல போட்டிகளில் அடித்தும் அதை டிஃபெண்ட் செய்ய முடியாமல் தோற்ற அணி பஞ்சாப். ஷமியும், அஷ்வினும் மட்டுமே ஓரளவுக்கு ஒகேவாகப் பந்துவீசியவர்கள். அதில் இந்த முறை அஷ்வினும் இல்லை. ஆப்கானிஸ்தானின் ஆஃப் ஸ்பின்னர் முஜீப் உர் ரஹ்மான், தமிழகத்தின் முருகன் அஷ்வின், ரவி பிஷ்னாய் எனத்திறமையான ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். ஆனால், இவர்களை எப்படிப் பயன்படுத்தப்போகிறார்கள் என்பதில்தான் வெற்றி இருக்கிறது.
2020 சவால்கள் - புது கேப்டன், புது பயிற்சியாளர்!
பழைய PT வாத்தியார் என கோலியால் அடையாளப்படுத்தப்பட்ட அணில் கும்ப்ளேதான் பஞ்சாப் அணியின் புது பயிற்சியாளர். கே.எல்.ராகுல் புது கேப்டன். இருவருமே கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என்பது பலம். இவர்கள் மட்டுமல்லாமல் மயாங்க் அகர்வால், கருண் நாயர், கிருஷ்ணப்ப கெளதம், ஜெகதீச சுஜித் என பல பெங்களூரு பாய்ஸ் 2020 பஞ்சாப் அணியில் இடம்பிடித்திருக்கிறார்கள். இந்த கர்நாடக கூட்டணி இணைந்து கலக்கினால் பஞ்சாப் சர்ப்ரைஸ் கொடுக்கலாம்.
மேக்ஸ்வெல் மேக்ஸிமம்ஸ்!
கிளென் மேக்ஸ்வெல் பஞ்சாப் அணிக்குத் திரும்பியிருப்பது மிகப்பெரிய பலம். பேட்டிங், ஸ்பின் பெளலிங் என இரண்டிலுமே இவரின் பங்கு அதிகமாக இருந்தால் மட்டுமே பஞ்சாப் வெற்றிகளைப் பெறமுடியும். கிறில் கெயில் இந்த முறை ப்ளேயிங் லெவனில் இருப்பாரா என்பது சந்தேகம்தான். கரீபியன் லீகைப் புறக்கணித்தவர் இந்தியன் பிரீமியர் லீகுக்கு வந்து கடுமையான பயிற்சிகளில் இறங்கியிருக்கிறார். ஆனால், அவருக்கான இடம் என்பது உறுதியில்லாதது. ஏனென்றால் மேக்ஸ்வெல், பூரான், முஜிப் உர் ரஹ்மான், ஜேம்ஸ் நீஷம்/ஜோர்டன்/காட்ரெல் என இந்த வெளிநாட்டு ப்ளேயர்கள் ப்ளேயிங் லெவனுக்குள் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் இருக்கிறது.
Also Read: வார்னர், பேர்ஸ்டோ, ரஷீத், நபி... இம்போர்ட்டட் வீரர்கள் மட்டுமே போதுமா?! LEAGUE லீக்ஸ் - 3 #SRH
ஸ்பின் டு வின்!
ரவிச்சந்திரன் அஷ்வின் போன்று அனுபவமுள்ள ஸ்பின்னர் இல்லையே தவிர ஏகப்பட்ட ஸ்பின்னர்கள் அணிக்குள் இருக்கிறார்கள். முஜீப் பஞ்சாபுக்கு முக்கியமானவராக இருப்பார். இவரின் பர்ஃபாமென்ஸ் கரீபியன் லீகிலும் குறைசொல்ல முடியாததாகவே இருந்தது. முஜீப், கிருஷ்ணப்பா கவுதம், சுஜித், முருகன் அஷ்வின், ரவி பிஷ்னோய் என நல்ல ஸ்பின்னர்கள் அணிக்குள் இருக்கிறார்கள். பயிற்சியாளருமே ஸ்பின்னர் என்பதால் இந்தமுறை சரியான ஸ்பின் காம்பினேஷனை பஞ்சாப் லெவனில் எதிர்பார்க்கலாம்.
ப்ளேயிங் லெவன் என்ன?
கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் ஓப்பனிங் ஆடுவார்கள் எனத்தெரிகிறது. ஒருசில போட்டிகளில் கெயில் இறங்கலாம். ஒன் டவுனில் மேக்ஸ்வெல் அல்லது பூரான். இவர்களுக்குள் இந்த இரண்டு இடங்களும் மாறும். கருண் நாயரின் பேட்டிங் பொசிஷனும் சூழலுக்குத் தகுந்தபடி மாறும். இதற்கடுத்து சர்ஃபராஸ் கான், கிருஷ்ணப்ப கெளதம் ஆகியோர் இருப்பார்கள். ஆல்ரவுண்டர்களைப் பொறுத்தவரை சாம் கரண் அல்லது ஜேம்ஸ் நீஷம் என இருவரில் யாராவது ஒருவர் இருப்பது அணிக்கு பலம் சேர்க்கலாம். ஸ்பின்னர்கள் ஸ்பாட்டில் முஜீபும், முருகன் அஷ்வினும் இடம்பிடிப்பார்கள். வேகப்பந்து வீச்சாளர்களைப் பொருத்தவரை ஷமி உறுதி. ஆனால், இவரோடு சேர்ந்து இந்த ஆண்டு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷெல்டன் காட்ரெல் அல்லது இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஜோர்டனை ப்ளேயிங் லெவனுக்குள் எடுக்கவேண்டும். இதில் கிறிஸ் ஜோர்டன் அணிக்கு மிகவும் உதவியாக இருப்பார். டெத் ஓவர்களில் இவரின் ரிவர்ஸ் ஸ்விங்குகள் அண்ணியைக் காப்பாற்றும். அப்படி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் வெளிநாட்டு ப்ளேயராக இருந்தால் ஆல்ரவுண்டர் அல்லது பூரான்/கெயிலின் இடமும் காலியாகும்.
பஞ்சாப் அணியின் பெயர் பட்டியலைப் பார்க்கும்போது ஐபிஎல் கோப்பையை இவர்களால் ஏன் வெல்ல முடியாது என்ற கேள்வி எழுகிறது. ஆனால், கோப்பையை வெல்ல திறமையான வீரர்கள் இருந்தால் மட்டும்போதாது, சரியான தலைவன் இருக்கவேண்டும். அதுதான் பஞ்சாபில் தொடர்ந்து மிஸ்ஸிங். இந்த முறை பஞ்சாப் வெற்றிபெறுவது கே.எல்.ராகுல் - அணில் கும்ப்ளே என இந்த இருவரின் சரியான திட்டமிடலில்தான் இருக்கிறது.
source https://sports.vikatan.com/ipl/ipl-2020-kings-eleven-punjab-team-analysis-report
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக