ஆறு மாத கொரோனா லாக்டௌன் வாழ்க்கையைக் கடந்து தற்போது நியூ-நார்மல் வாழ்க்கைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறோம். இந்தியாவில் கொரோனா பரவலின் முதல் அலையே இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றாலும் பொருளாதார, வாழ்வியல் காரணங்களைக் கருத்தில் கொண்டு லாக்டௌனுக்கு விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஒருவருக்கு கொரோனா உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள எடுக்கப்படும் ஆர்.டி பிசிஆர் (RT - PCR) டெஸ்ட்டை விட `தனக்கு கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகிவிட்டனவா...' என்பதை உறுதிசெய்துகொள்வதற்கான ஆன்டிபாடி (Antibody) பரிசோதனைகளே இந்தியாவில் அதிகம் எடுக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். தற்போது பள்ளிகள் திறக்கப்படுவது குறித்த பேச்சுகள் எழுந்துள்ள நிலையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளையும் ஆன்டிபாடி டெஸ்டுக்கு உட்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
மக்களிடையே ஆன்டிபாடி டெஸ்ட் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது... உண்மையில் அது பயனுள்ளதுதானா? தொற்றுநோய் மருத்துவர் ராம் கோபால் கிருஷ்ணனிடம் கேட்டோம்.
``கொரோனா பாசிட்டிவா நெகட்டிவா என்பதை அறிந்துகொள்ள எடுக்கப்படுவது ஆர்.டி பிசிஆர் (RT - PCR) டெஸ்ட். ஒருவருக்கு ஆர்.டி பிசிஆர் டெஸ்ட்டில் கொரோனா பாசிட்டிவ் என்று வந்தால், அந்தத் தேதியிலிருந்து அடுத்து வரும் 10 நாள்களுக்கு அவரது உடலில் வைரஸ் வீரியத்துடன் இருக்கும். அதனால் அவரைச் சார்ந்த மற்றவர்களுக்கும் வைரஸ் எளிதில் பரவலாம். இதன் காரணமாகவே கொரோனா தொற்று ஏற்பட்டவர், அவர் பாசிட்டிவ் ஆன தேதியிலிருந்து அவரது உடலில் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகி, கொரோனா நெகட்டிவ் ஆகும்வரை தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுகிறார்.
கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்ட ஒருவருக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பிறகு, கொரோனாவுக்கான ஆன்டிபாடிகள் உடலுக்குள் உற்பத்தியாகத் தொடங்கும். உடலுக்குள் ஆன்டிபாடிகள் எவ்வளவு நேரத்தில், எந்த அளவில் உற்பத்தியாகின்றன என்பதெல்லாம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட நோய் எதிர்ப்புத்திறனைப் பொறுத்தது. கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உடலில் உருவாகிவிட்டனவா என்பதைக் கண்டறிய நடத்தப்படும் பரிசோதனைதான் ஆன்டிபாடி டெஸ்ட் (Antibody test). கொரோனா பாசிட்டிவ்வாகி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர்கள் ஆன்டிபாடி டெஸ்ட் பாசிட்டிவ் என்று வந்தால் மட்டுமே வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.
நம் உடலில் ஒரு வைரஸுக்கு எதிராக ஆன்டிபாடிகள் உருவாகும் முதல் வாரத்தில் ஆன்டிபாடி டெஸ்ட் எடுத்தால் ரிசல்ட் நெகட்டிவ் என்று வரும். அதாவது, நம் உடலில் குறிப்பிட்ட அந்த வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகவில்லை என்று வரும். அதுவே இரண்டாவது, மூன்றாவது வாரத்தில் டெஸ்ட் எடுக்கும்போது ரிசல்ட் பாசிட்டிவ் என்று வரும். ஆன்டிபாடி டெஸ்ட் பாசிட்டிவ் என்று வந்தால் ஆர்.டி பிசிஆர் டெஸ்ட் தானாகவே நெகட்டிவ் ஆகிவிடும். இதற்கு டெஸ்ட் எடுக்கப்பட்டவர் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்துவிட்டார் என்று அர்த்தம்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR), `இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 80% பேர் ஏசிம்ப்டமடிக் நிலையில் இருப்பவர்கள் என்று ஏற்கெனவே அறிவித்துள்ளது. ஏசிம்ப்டமடிக் (Asymptomatic) என்பது ஒருவர் ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு அந்த நோய்க்குரிய எந்த அறிகுறிகளும் தென்படாத நிலை. கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் ஏசிம்ப்டமடிக்காக இருக்கும்போது அவருக்குக் காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற எந்த அறிகுறியும் இருக்காது. இதனால் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகி குணமடைந்திருந்தாலும் அவருக்குத் தெரியப்போவதில்லை. ஆனால், இதை ஆன்டிபாடி டெஸ்ட் வழியே கண்டறியலாம்.
கொரோனாவுக்கான அறிகுறிகள் எதையும் வெளிப்படுத்தாத ஒருவருக்கு ஆன்டிபாடி டெஸ்ட் பாசிட்டிவ் என்று வந்தால் அவருக்கு ஏற்கெனவே கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்திருக்கலாம். கொரோனாவுக்கான ஆன்டிபாடிகள் தங்கள் உடலில் ஏற்பட்டுவிட்டனவா என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வத்தினாலேயே பெரும்பாலான மக்கள் இன்று ஆன்டிபாடி டெஸ்ட் பக்கம் செல்கிறார்கள். ஆனால், இது ஒரு விதத்திலும் பலனளிக்காது.
Also Read: கொரோனா: நீண்டகால பாதிப்பு முதல் அக்டோபர் அச்சம் வரை... இனிதான் நாம் ரொம்ப உஷாரா இருக்கணும்!
ஏனெனில், கொரோனாவுக்கு எதிராக நம் உடலில் உருவாகும் ஆன்டிபாடிகள் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே வீரியத்துடன் இருக்கும் என்று கொரோனா வைரஸ் குறித்து நடத்தப்பட்டுவரும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், ஒருமுறை கொரோனா தொற்று ஏற்பட்டு நம் உடலில் ஆன்டிபாடிகள் ஏற்பட்டாலும், 2 அல்லது 3 மாதம் போன்ற குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் தொற்று (Reinfection) ஏற்படலாம். மக்கள் ஆன்டிபாடி டெஸ்ட் எடுத்துப் பார்த்து, அதன் ரிசல்ட் பாசிட்டிவ் என்று வரும் பட்சத்தில், தங்கள் உடலில் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகியுள்ளதை நினைத்து திருப்தி அடைந்து சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அலட்சியமாக இருக்க வாய்ப்புள்ளது. இது மேலும் விபரீதத்துக்கு வழிவகுக்கும்.
கொரோனா இதுவரையில் நமக்குப் புரியாத புதிராகவே உள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்குக் கூட மறு தொற்று ஏற்படலாம். லாக்டௌனில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், மக்கள் இதை மனதில் கொண்டு சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்" என்கிறார் தொற்றுநோய் மருத்துவர் ராம் கோபால் கிருஷ்ணன்.
source https://www.vikatan.com/health/healthy/why-even-if-antibodies-are-developed-in-your-body-will-not-helpful-for-long
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக