Ad

சனி, 12 செப்டம்பர், 2020

``ஒருவேளை ஃபெயிலாகிட்டா, சீட் கிடைக்கலைன்னா... ஸாரி அப்பா!''

கவனம் ப்ளீஸ்: இந்த கட்டுரை சிலருக்கு மன பதற்றத்தைத் அதிகரிக்கலாம். அதனால் தற்போதைய சூழலில் மனதிடம் குன்றியவர்கள் இந்த கட்டுரையைத் தவிர்க்கவும்.

''அப்பா, யாரையும் பிளேம் பண்ணாதீங்க... இது யாரோட தப்பும் இல்லை. ஆனா, பயமா இருக்கு...'' - தற்கொலைக்கு முன் மாணவி ஜோதிஸ்ரீ துர்கா பதற்றத்துடன் பேசும் வீடியோவை கேட்கும்போதே இதயம் பதறுகிறது, கண்கள் கலங்குகிறது.

ஜோதிஸ்ரீ துர்கா

இன்று நாடு முழுக்க நீட் தேர்வு நடக்கவுள்ள நிலையில் பல மாதங்களாக தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்த மதுரையை சேர்ந்த போலீஸ் எஸ்.ஐ முருகசுந்தரத்தின் மகள் ஜோதிஸ்ரீ துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் அரியலூர் மாணவர் விக்னேஷின் தற்கொலையின் சோகமே நம்மை விட்டு விலகாத நிலையில், நேற்று மட்டும் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள்.

ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய கடிதமும், பேசிய வீடியோவும்தான் இப்போது எல்லோரையும் கலங்க வைக்கிறது. ''நான் நல்லத்தான் படிச்சேன். ஆனாலும் பயமா இருக்கு. ஒருவேளை ஃபெயிலாகிடுவேனோ... ஃபெயிலாக மாட்டேன். ஒருவேளை சீட் கிடைக்கலைன்னா, நீங்க எல்லோரும் ஏமாந்துருவீங்க, ஸாரி அப்பா, ஸாரி அம்மா... டாட்டா, தயவு செஞ்சு Sad-ஆ இருக்காதீங்க. ஸ்ரீதர் இருக்கிறான், அவன் ஃபியூச்சர் பற்றி யோசிங்க. ஸ்ரீதரை நல்லா பார்த்துக்கோங்க. நீங்க சோகமா இருந்தா யார் அவனை பார்ப்பா? அவனை நல்லா படிக்க வைங்க... Bye ஸ்ரீதர், ஐ லவ் யூ அம்மா, ஸாரி அப்பா, ப்ளீஸ் ஹெல்த்தை நல்லா பார்த்துக்கோங்க.

அமைச்சர் இறுதி மரியாதை

நீங்க ஹார்ட் பேஷன்ட். என்னைப் பத்தி ரொம்ப கவலைப்படாதீங்க. ஐ அம் ஸாரி...'' என்று அவர் பேசியுள்ளதை கேட்கும்போது பரிட்சையும், பயமும் 19 வயது பெண்ணின் உணர்வுகளை எந்தளவுக்கு கலைத்து போட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.

தன்னால் தன் பெற்றோரின் ஆசையை நிறைவேற்ற முடியாதோ என்ற கவலைதான் அவரைத் தொடர்ந்து மன அழுத்ததுக்கு ஆளாக்கியிருக்கிறது என்பது அவர் எழுதிய கடிதத்தில் புரிகிறது. ''என்னை நன்றாக வளர்த்த அப்பா, அம்மாவுக்கும் ஆசிரியர்களுக்கும் வணக்கம். என்னைப் பெரிய ஆளாக்க முயற்சி செய்தீர்கள், அது உங்கள் தவறு அல்ல. அதை நான் குறை சொல்லவில்லை. எனக்கு நல்ல வழிகாட்டியாக இருந்த அப்பா, அதிகமான அன்பு காட்டிய அம்மாவும் என்னை மன்னித்து விடுங்கள். என் மீது அதிக எதிர்பார்ப்புடன் இருக்கிறீர்கள். நானும் அதை நிறைவேற்றும் வகையில் நீட் தேர்விற்கு நன்றாக தயார் செய்திருக்கிறேன்.

ஆனாலும், பயமாக இருக்கிறது. மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டால் நாம் எடுத்த முயற்சிகள் வீணாகிவிடும். அதனால் என்னை மன்னித்து விடுங்கள். அப்பா... உங்கள் உடல் நிலையை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். எப்போதும் போல் மகிழ்ச்சியாக நீங்கள் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்'' என்று எழுதியவர், தொடர்ந்து... தன் அப்பா,அம்மா, தம்பி, நண்பர்கள் தன்னை மன்னித்து விடும்படி கலங்க வைக்கும் அளவுக்கு ஆங்கிலத்தில் 5 பக்கத்துக்கு எழுதியுள்ளார். இந்த கடிதத்தில்தான் தான் பேசிய வீடியோ அடங்கிய செல்போன், பீரோவில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜோதிஸ்ரீ துர்காவின் இறுதி சடங்கில்...

மதுரை ஆயுதப்படையில் எஸ்.ஐ.யாக பணியாற்றும் முருகசுந்தரம் - வேளாண்மைத்துறையில் பணியாற்றும் அபிராமி தம்பதியினருக்கு ஜோதிஸ்ரீதுர்கா, ஸ்ரீதர் என இரண்டு பிள்ளைகள். நடுத்தர வர்க்கத்துக்கே உரித்த கனவான, மகளை டாக்டராக்க வேண்டும் என்ற ஆசையுடன் ஜோதிஸ்ரீ துர்காவை படிக்க வைத்திருக்கின்றனர்.

அருப்புக்கோட்டை தனியார் பள்ளியில் பிளஸ் டூ முடித்தவர், மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற இலக்கில் கடந்த முறை நீட் தேர்வு எழுதி அதில் தோல்வி அடைந்துள்ளார். மீண்டும் முயற்சி செய்து பார்க்க பெற்றோர்கள் விரும்பியதால் இந்தமுறை நன்றாக படித்து வந்துள்ளார் ஜோதிஸ்ரீ துர்கா. கொரோனா ஊரடங்கால் பயிற்சி மையத்துக்கு நேரடியாக செல்ல முடியாவிட்டாலும் ஆன்லைன் மூலம் பயிற்சி எடுத்துள்ளார். ஆனாலும், வெற்றி பெறுவோமா, பெற்றோரின் ஆசையை நிறைவேற்றுவோமா என்ற சந்தேகம் அவரை மன ரீதியாக தொந்தரவு செய்திருக்கிறது.

Also Read: நீட் தேர்வு: தர்மபுரி, நாமக்கல்லை சேர்ந்த 2 மாணவர்கள் தற்கொலை! - தமிழகத்தை உலுக்கும் மரணங்கள்

மாநில பாடத்திட்டத்தின் மூலம் சிறப்பாக படித்தாலும், நீட் தேர்வு மிகவும் கடினமாக இருக்கிறதே என்கிற பயம் அவருக்குத் தொடர்ந்து இருந்திருக்கிறது. 13-ம் தேதி தேர்வு நடக்கவுள்ள நிலையில், நேற்று இரவு தந்தையிடம், ''நன்றாக படித்திருக்கிறேன். ஆனாலும் பயமாக இருக்கிறது'' என்று கூறியிருக்கிறார் ஜோதிஸ்ரீ துர்கா. ''நன்றாக எழுதுவாய், தைரியமாக இரு... பயப்பட வேண்டாம்'' என்று முருகசுந்தரம் தைரியம் கொடுத்திருக்கிறார். அதற்குப்பின்தான் தன் அறைக்குள் அமர்ந்து கடிதம் எழுதி வைத்துவிட்டு விடியோவில் பேசிவிட்டு இந்த முடிவை எடுத்திருக்கிறார் ஜோதிஸ்ரீ துர்கா.

''நன்றாக படிக்கக்கூடியவர்... ரொம்ப மெச்சூர்ட்டானவர். நீட் தேர்வுக்காக இரவு பகல் பாராமல் படித்து வந்தார். தேர்வு எழுதினால் எப்படியும் இந்தாண்டு வெற்றி பெற்றிருப்பார். ஆனால், தேவையில்லாத பயம் வந்து அவரை இந்த முடிவை எடுக்கத் தூண்டியுள்ளது'' என்கிறார்கள் உறவினர்கள். அன்பு மகளை இழந்து தவிக்கும் அரசு ஊழியர்களான பெற்றோர்களுக்கு எதன் மீதும் குறை சொல்ல முடியாமல் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். அழுது தீர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.

மருத்துவமனையில் ...

இனி இன்னொரு மரணம் இப்படிப்பட்ட தேர்வு பயத்தால், தோல்வியால் நடக்கக்கூடாது என்பதை அரசாங்கமும், பெற்றோர்களும்தான் உறுதிசெய்ய வேண்டும். தேர்வு குறித்த அச்சத்தைப்போக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.



source https://www.vikatan.com/government-and-politics/education/student-jothi-sri-durga-committed-suicide-because-of-neet-exam-fear

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக