Ad

சனி, 12 செப்டம்பர், 2020

மஞ்சளுக்கு மாற்றாகத் தங்கம் தரும் இலங்கை - மண்டபத்தில் சிக்கிய 1,020 கிலோ; 3 பேர் கைது!

இலங்கை கடத்தல்காரர்கள் மஞ்சளுக்கு மாற்றாக தங்கக் கட்டிகள் தரும் நிலையில், இலங்கைகு கடத்த முயன்ற சுமார் 3 லட்சம் மதிப்புடைய சமையல் மஞ்சள் மூடைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் கைப்பற்றினர். இது தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை : போலீஸாரிடம் சிக்கிய மஞ்சள் மூடைகள்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகக் கடலோர பகுதிகளில் இருந்து போதைப் பொருள்கள், கஞ்சா, கடல் அட்டை போன்றவை இலங்கைக்கு கள்ளத்தனமாக கடத்தப்பட்டு வருகின்றன. இவற்றுடன், தற்போது சமையலுக்கு பயன்படுத்தும் விராலி மஞ்சளும் கடத்தப்படுகின்றன. இலங்கையில் கொரோனா தடுப்பு மருந்தாக மஞ்சள் பயன்படுத்தப்படுவதால் அங்கு மஞ்சளுக்கு அதிக தேவை உள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் கடத்தல் கும்பல்கள் இங்கிருந்து இலங்கைக்கு மஞ்சளைக் கடத்துவதுடன், இவற்றுக்கு ஈடாக அங்கிருந்து தங்கக் கட்டிகளை தமிழகத்துக்குக் கடத்தி வருகின்றனர்.

Also Read: இலங்கை: பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவதற்குத் தடை... நாடாளுமன்றத்தில் நிறைவேறிய தீர்மானம்!

இந்நிலையில், மண்டபத்தை அடுத்துள்ள வேதாளையில் இருந்து மன்னார் வளைகுடா கடல்வழியாக இலங்கைக்கு மஞ்சள் மூடைகள் கடத்த இருப்பதாக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மண்டபம் மெரைன் ஆய்வாளர் கனகராஜ் தலைமையில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேதாளை கடற்கரைக்கு சரக்கு வாகனம் ஒன்று சந்தேகத்திற்கிடமாக மூட்டைகளை ஏற்றி வந்தது.

மஞ்சள் மூடைகளுடன் போலீஸார்

போலீஸார் அந்த வேனை நிறுத்தி சோதனை செய்ததில், சமையலுக்குப் பயன்படுத்தும் மஞ்சள் மூடை மூடையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனத்தில் வந்த 3 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், இலங்கைக்குக் கடத்துவதற்காக ஈரோட்டில் இருந்து மஞ்சள் மூடைகள் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.

மஞ்சள் கடத்தலில் கைதானவர்கள்

இதையடுத்து மஞ்சள் மூடைகளை ஏற்றிவந்த வாகனத்தின் டிரைவரான சத்தியமங்களம் கணபதி நகரை சேர்ந்த லோக வெங்கடேஷ் மற்றும் வேதாளை வடக்கு தெருவை சேர்ந்த ரியாஸ், ஷகிபுல்லா ஆகிய மூவரையும் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர்கள் கடத்தி வந்த சுமார் 3 லட்சம் மதிப்புடைய 1,020 கிலோ மஞ்சள், அவற்றை ஏற்றிவரப் பயன்படுத்திய வேன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.



source https://www.vikatan.com/news/crime/one-tone-turmeric-seized-near-rameswaram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக