மூன்றாகப் பிரிக்கப்பட்ட திருச்சி மாவட்ட அ.தி.மு.க-வில், மாநகர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பவர் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். அவரது ஆளுகைக்குட்பட்ட பகுதியில், 8 பகுதிச் செயலாளர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், பாலகரைப் பகுதிச் செயலாளராக இருந்த கலீல் ரகுமானை நீக்கிவிட்டு, தனது ஆதரவாளரான சுரேஷ் குப்தாவை புதிதாக நியமித்துள்ளார் வெல்லமண்டி.
இதையடுத்து, 'வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வைப் புறக்கணிப்போம்' என இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் அமைப்பினர், அமைச்சர் வெல்லமண்டி நடராஜனைக் கண்டித்து திருச்சி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
``நான் 22 வருடமாகக் கட்சியில் இருக்கிறேன். என்னை சர்வ சாதாரணமாகத் தூக்கி எறிந்து விட்டார்" என்று ஆதங்கத்தோடு பேசத்தொடங்கினார் கலீல் ரகுமான். ``நடந்து முடிந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் நாங்கள் பிரசார வேலையில் ஈடுபட்ட நேரத்தில், அமைச்சர் வெல்லமண்டி,`வா போ’ என ஒருமையில் பேசத் தொடங்கினார். அமைச்சரின் டென்டர் விவகாரம் அத்தனையும் அவரது மகன் ஜவஹர்லால் நேருதான் கவனித்து வருகிறார். அந்த கான்ட்ராக்ட் பணிகளை எங்களைப் பார்க்கச் சொல்லுவார். ஆனால், அந்தத் தேர்தலுக்குப் பிறகு `கான்டிராக்ட் வேலையெல்லாம் நீ பாக்கவேணாம்னு அமைச்சர் சொன்னாரு’ என கட்சியிலிருந்தும் என்னை ஓரங்கட்ட ஆரம்பித்தார். அதற்குப் பிறகு தான் நான், புறநகர் மாவட்டச்செயலாளர் குமாரிடம் போய்ச் சேர்ந்தேன்.
இது அமைச்சருக்குப் பிடிக்கவில்லை. அந்தநேரத்தில்தான் மாநகர் மா.செவாக வெல்லமண்டி நியமிக்கப்பட்டார். பகுதிச் செயலாளர்கள், கிளைக்கழக நிர்வாகிகள் உட்பட அனைத்து பொறுப்பாளர்களையும் அழைத்து கூட்டம் நடத்துகிறார். ஆனால், என்னிடம் ஒரு வார்த்தைகூட தெரிவிக்கவில்லை. டெல்டா மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு திருச்சிக்கு வந்த முதல்வருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கவேண்டும் என்று எல்லோருக்கும் தகவல் சொல்லியுள்ளார் அமைச்சர். ஆனால், என்னிடம் சொல்லவில்லை. அவர் திட்டமிட்டுப் புறக்கணிப்பதால் திருவெறும்பூர் பகுதியில் கொடுத்த வரவேற்பில் கலந்து கொண்டேன்.
இந்நிலையில், `கட்சியின் எந்த வித நிகழ்ச்சிகளிலும் நான் கலந்து கொள்ளவில்லை' என்று அவர் பதவியேற்ற 40 நாள்களுக்குள் என்னைப் பதவியை விட்டு நீக்கியிருக்கிறார். ஏன் எதற்காக நீக்கினார் என்ற காரணத்தை இன்று வரையிலும் சொல்லவில்லை. என்னை நீக்கியதால் ஜாமத் தரப்பில் போஸ்டர் அடித்திருக்கிறார்கள். கட்சியில் உழைத்தவனுக்குப் பதவி கொடுக்காமல் அவருடைய ஆதரவாளர்களுக்குப் பதவி கொடுத்திருக்கிறார். 'நான் குமார் அணியில் இருக்கிறேன்' என்ற ஒரே காரணத்துகாக என்னை நீக்கியிருக்கிறார் என்று கட்சித் தலைமையிடமும் புகார் அளித்திருக்கிறேன். என்னைப்போல் ஒரு சிலரும் அமைச்சர் செயல்பாடுகள் குறித்து மனக் குமுறலில் தான் இருக்கிறார்”என்று ஆவேசப்பட்டார்.
திருச்சி அ.தி.மு.க-வில் என்னதான் நடக்கிறது என்று கட்சி உள்விவகாரம் அறிந்தவர்களிடம் பேசினோம். ``வெல்லமண்டிக்கும் முன்னாள் எம்.பி ப.குமாருக்கும் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் மா.செ., பதவியை விட்டுக் கொடுத்தார் அமைச்சர். அந்தப் பதவி எம்.பி குமாருக்கு வழங்கப்பட்டது. இந்தநிலையில் கட்சியை விட்டு ஒதுங்கியிருப்பார் என நினைத்துக்கொண்டிருந்த குமார் அணியினர், அமைச்சரின் மகன் ஜவஹர்லால் நேரு, வைத்தியலிங்கம் மற்றும் வேலுமணியைப் பிடித்து மீண்டும் தனது தந்தைக்குப் பதவியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
இது குமார் அணியினருக்கு வருத்தத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. வெல்லமண்டிக்கு மா.செ பதவி கிடைத்தபோது அவரின் ஆதரவாளர்கள் வெல்லமண்டி நடராஜன் மகன் ஜவஹர்லால் நேருவின் புகைப்படத்தைப் போட்டு, வாழ்த்து மழைபொழிந்து திருச்சி முழுவதும் போஸ்டர்களை ஒட்டினார்கள். இதனை, குமார் அணியினர் அப்படியே தலைமைக்குத் தந்தியடித்தனர். தலைமையும், `வாரிசு அரசியலைத் தூக்கிப்பிடிக்க வேண்டாம்’ என்று கறாராகச் சொல்லியிருக்கிறது. இந்தநிலையில், இப்போதும் குமாரின் ஆதரவாளரான கலீல் ரகுமானைத் தூக்கிவிட்டு அமைச்சரின் ஆதரவாளரான சுரேஷ் குப்தாவை நியமித்திருப்பதுதான் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. சுரேஷ் குப்தாவும் நம்பிக்கையானவர் கிடையாது. ஒரு இடத்தில் இருந்துகொண்டே இரண்டு வேலைகள் செய்யக்கூடியவர்.
அமைச்சரின் விசுவாசி அவ்வளவுதான். கலீல் ரகுமான், பாலகரைப் பகுதி செயலாளராக இருந்தபோது, தில்லைநகர் வீடுகட்டுவோர் சங்கத்தில் மிகப்பெரிய மோசடி செய்தார் என்ற வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அத்துடன், கட்சியிலும் இவர் மீது பல புகார்கள் இருப்பதால்தான் ஓரங்கட்டப்பட்டர். இவருடைய ஆதரவாளர்கள்தான் போஸ்டர் அடித்து அமைச்சருக்கு நெருக்கடி கொடுக்க நினைக்கிறார்கள். இங்கு நடக்கும் கோஷ்டி மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே வருகின்ற சட்டமன்றத்தேர்தலில் தி.மு.கவினருக்கு 'டஃப் பைட்' கொடுக்கமுடியும். இல்லையேல் திருச்சி மாவட்டத்தில் அ தி.மு.க வெற்றி பெறுவது கேள்விக்குறிதான்” என்றார்கள்.
அமைச்சர் வெல்லமண்டி நடராஜனைத் தொடர்பு கொண்டோம்.. ``நான் முக்கியமான மீட்டிங்ல இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்" எனச் சொல்லி தொலைபேசி இணைப்பைத் துண்டித்தார். மீண்டும் பலமுறை தொடர்புகொண்டோம், நம் அழைப்புகளை அவர் ஏற்கவில்லை.
இந்தநிலையில் தான் அமைச்சரின் மகன் ஜவஹர்லால் நேருவைத் தொடர்புகொண்டு பேசினோம். ``கலீல் சொல்வது முற்றிலும் பொய். கட்சி நிகழ்ச்சி குறித்து தகவல் சொல்ல நானும், அமைச்சரும் பலமுறை போன் அடித்திருக்கிறோம். அவர் எடுத்ததில்லை. அரவக்குறிச்சி, ஆர்.கே.நகர் உள்ளிட்ட இடைத்தேர்தல்களில் செலவு செய்வதற்குக் கொடுத்த பணத்தை முறையாகச் செலவு செய்யவில்லை என்ற புகாரும், கடந்த எம்.பி., தேர்தலில் கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க வேட்பாளருக்கு ஆதரவாகச் செலவு செய்யக் கொடுக்கப்பட்ட ரூ.30 லட்சம் பணத்தைச் சுருட்டிவிட்டார் என்ற புகாரும் தலைமைக்குப் போயிருக்கிறது. அதே போல சில வருடமாக அவர் பெரிதாக எந்தவித கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டதில்லை.
இந்தநிலையில் கட்சித் தலைமையிலிருந்து யார் யார் சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்று ஒரு பட்டியல் கேட்டார்கள். செயல்படக்கூடியவர்களின் பட்டியலைக் கொடுத்தோம். அதன்படிதான் கலீல் ரகுமானை நீக்கியிருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் நாங்கள் அவரை நீக்கவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்று போஸ்டர் அடித்து எங்களை எதிரிபோல் சித்திரிக்க நினைக்கிறார்கள்" என்றார்.
Also Read: திருச்சி: `அ.தி.மு.க-வைப் புறக்கணிப்போம்!’ - வெல்லமண்டி நடராஜனுக்கு எதிரான போஸ்டர்... பின்னணி என்ன?
இதுகுறித்து புறநகர் மாவட்டச்செயலாளர் ப.குமாரிடம் பேசினோம். ``எங்களுக்குள் எந்தவித மோதல்களும் இல்லை. கலீல் ரகுமானை ஏன், எதற்காக நீக்கினார்கள் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அதுகுறித்து பேசத் தயாராக இல்லை. இப்பகுதிக்கு ’ரத்தினவேலு தான் மா.செ வாக’ இருந்தார். அவரை எடுத்துவிட்டு என்னை மா.செ-வாக நியமித்தது கட்சித்தலைமை.
நான் பதவியேற்றதும் அவரது ஆதரவாளர்களை நீக்குவது சரியா. ஆனால், அப்படித்தான் நடக்கிறது. விருப்பு வெறுப்புகளை மறந்து கட்சிக்காக உழைக்க வேண்டும். அண்ணன் வெல்லமண்டி சரியாக இருந்தாலும், அவரது மகன் ஜவஹர்லால் நேரு சின்ன சின்ன விஷயங்களில் ஈடுபட்டு கட்சியின் பெயரைக் கெடுக்கிறார். எங்களுக்குள் எந்தவித மோதல்களும் இல்லை” என்பதோடு முடித்துக்கொண்டார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/tussle-between-minister-vellamandi-nadarajan-and-ex-mp-kumar-irks-controversy-in-trichy-admk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக