Ad

சனி, 12 செப்டம்பர், 2020

சுனாமி நிவாரணம் டு சீன எல்லைப் பிரச்னை வரை... - அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்த சவால்கள்!

கடந்த ஆண்டு மோடி இரண்டாவது முறையாகப் பிரதமர் பதவியேற்ற போது, அவரோடு சேர்ந்து நிறைய புதிய அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். மோடி அமைச்சரவையின் புதிய அமைச்சர்களில், அதிக கவனம் ஈர்த்தவர் ஜெய்சங்கர். காரணம், முன்னாள் ஐ.எஃப்.எஸ் அதிகாரி ஒருவர் ஆளும் கட்சியில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாத நிலையில் மத்திய அமைச்சராக்கப்பட்டார் என்பதுதான்.

அதிகாரியாக ஜெய்சங்கர்!

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றி வரும் இவர், 1955-ம் ஆண்டு டெல்லியில் பிறந்தார். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவரின் தந்தை சுப்பிரமணியம் இந்தியக் குடிமைப் பணி அதிகாரியாகப் பணியாற்றியவர். டெல்லி ஜே.என்.யு-வில் பிஹெச்.டி பட்டம் பெற்றவர், 1977-ம் ஆண்டு ஐ.எஃப்.எஸ் அதிகாரியாகத் தேர்வாகி தன் முதல் பணியைத் தொடங்கினார். அதன்பின்னர் 1979-1981 காலகட்டத்தில் ரஷ்யாவிலுள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றினார். அங்கு ரஷ்ய மொழியைக் கற்றுக் கொண்டார் ஜெய்சங்கர்.

Jaishankar
தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளைத் தவிர்த்து ரஷ்யன், ஹங்கேரியன், ஜாப்பனிஸ் ஆகிய மொழிகளையும் கற்றறிந்தவர் ஜெய்சங்கர்.

1982-ம் ஆண்டு இந்தியா திரும்பியவர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அமெரிக்கப் பிரிவில் பணியாற்றி வந்த ஜி.பார்த்தசாரதியின் சிறப்பு உதவியாளராகப் பணி செய்தார். அந்தச் சமயத்தில், இந்தியாவின் தாராபூர் அணுமின் நிலையத்துக்கு அமெரிக்கா எரிபொருள் தர மறுத்த விஷயத்தைச் சிறப்பாகக் கையாண்டு சரி செய்த குழுவில் ஜெய்சங்கரும் ஒருவர்.

1985 முதல் 1988 வரை அமெரிக்காவில் இருக்கும் இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளராகப் பணிசெய்தார். அதன் பின்னர், இரண்டு ஆண்டுகள் இலங்கையில் இந்திய அமைதிப்படையின் முதன்மைச் செயலாளராகவும் அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றினார் இவர். 1990 முதல் 1993 வரை ஹங்கேரி நாட்டில் இந்தியாவின் வணிக ஆலோசகராக பணியாற்றினார். மீண்டும் இந்தியா திரும்பியவர் 2 ஆண்டுகாலம் இந்திய வெளியுறவுத்துறையின் கிழக்கு ஐரோப்பா பிரிவில் இயக்குநராகப் பணியாற்றினார். ஹங்கேரி, ஐரோப்பா ஆகிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்தியதில் பெரும் பங்கு ஜெய்சங்கருக்கு உண்டு.

Jaishankar

Also Read: India-China Stand-off: மாஸ்கோ சந்திப்பில் கண்டித்த இந்தியா! - சீனாவின் `ஒரு இன்ச்' ரெஃபரன்ஸ்

1996 முதல் 2000-ம் ஆண்டு வரை ஜப்பானில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தலைவராக பணியாற்றினார். அந்தச் சமயத்தில்தான் இந்தியா பொக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்தியது. அதன்காரணமாக இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கிடையேயான உறவில் சரிவு ஏற்பட்டது. பொக்ரான் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்ட சிலகாலம் கழித்து அப்போதைய ஜப்பான் பிரதமர் யோஷிரோ மோரி இந்தியா வருகை தந்தார். அதன் பிறகு மீண்டும் இந்தியா-ஜப்பான் உறவில் நல்லிணக்கம் ஏற்பட்டது. ஜப்பான் பிரதமரின் இந்திய வருகையில் முக்கிய பங்காற்றினார் ஜெய்சங்கர். அதைத் தொடர்ந்து 4 ஆண்டுகாலம் செக் குடியரசின் இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார் ஜெய்சங்கர்.

2004 முதல் 2007 வரையிலும் வெளியுறவுத்துறையின் அமெரிக்கப் பிரிவில் இணைச் செயலாளராகப் பணியமர்த்தப்பட்டார் ஜெய்சங்கர். 2004 டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சூறையாடியது சுனாமிப் பேரலை. அதற்கான நிவாரணங்களைப் பெற்றுத்தருவதில் முக்கிய பங்காற்றினார் ஜெய்சங்கர். 2006 மார்ச் மாதம் இந்தியா-அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை புதுடெல்லியில் சந்தித்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வுக்கு அடித்தளமிட்டவர்களில் முக்கியமானவர் ஜெய்சங்கர்.

Manmohan Singh

2007 முதல் 2009 வரை சிங்கப்பூருக்கான இந்திய உயர் ஆணையராகப் பணியாற்றியுள்ளார். இவரின் பதவிக்காலத்தில், சிங்கப்பூருடன் `விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்' ஒன்றைக் கையெழுத்திட்டது இந்திய அரசு. இதன்மூலம் இந்திய வணிகம் சிங்கப்பூரில் விரிவடைந்தது.

இதையடுத்து 2009 முதல் 2013 வரை ஜெய்சங்கர் சீனாவுக்கான இந்தியத் தூதராக இருந்தார். தற்போதுவரை சீனாவுக்கான இந்தியத் தூதராக அதிக காலம் பணியாற்றியவர் ஜெய்சங்கர்தான். சுமார் நான்கரை ஆண்டுகள் அந்தப் பதவியிலிருந்தார் அவர். இந்தியா-சீனா இடையேயான வர்த்தகம் உள்ளிட்ட பல ஒப்பந்தங்களில் இவரின் பங்களிப்பு பெரிய அளவிலிருந்தது. இந்தியா, சீனா எல்லைப் பிரச்னை வரும்போதெல்லாம் இவரது செயல்பாடு முக்கியத்துவம் பெறும். அதைச் சிறப்பாகவும் செய்திருக்கிறார்.

Indian Foreign affairs minister Jaishankar

2013-ம் ஆண்டு இந்திய எல்லையில் அளவுக்கு அதிமான படைகளைக் குவித்தது சீனா. இதனால் இந்திய-சீன எல்லையில் பதற்றம் நிலவியது. அதே நேரத்தில் இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருந்தார் அப்போதைய சீன அதிபர் லீ. இதனையடுத்து `சீன ராணுவப்படை எல்லையிலிருந்து பின்வாங்கவில்லை என்றால் சீன அதிபரின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்படும்' என்று எச்சரிக்கை விடுத்தார் ஜெய்சங்கர். அதன்பின்னர் சீனப் படைகள் பின்வாங்கின. சீனப் பிரதமரும் இந்தியா வந்து சென்றார். சீனப் பிரதமர் இந்தியா வந்து சென்ற பின்னர், அவருடன் என்னவெல்லாம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து செய்தியாளர் சந்திப்பில் விவரித்தவரும் ஜெய்சங்கர்தான்.

அதன் பின்னர், ஜெய்சங்கர் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக 2013-ம் ஆண்டு முதல் செயல்பட்டார். 2014 ஜனவரியில் வாஷிங்டன்னில் அமைந்துள்ள சர்வதேச அமைதிக்கான அறக்கட்டளையில் பேசினார் ஜெய்சங்கர். அங்கு, ``இந்தியா-அமெரிக்கா உறவு எழுத்துப்பூர்வ ஒப்பந்தமாகச் சிறப்பாகவே உள்ளது. ஆனால், அதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன'' என்று பேசினார். அமெரிக்காவின் இந்தியத் தூதராக பதவியேற்ற சில நாள்கள் கழித்து அப்போதைய அதிபர் பராக் ஓபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் ஜெய்சங்கர். மேலும், இந்திய - அமெரிக்க உறவைப் பலப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதாகவும் அவரிடம் உறுதியளித்தார். இதன்மூலம் உலக நாடுகளை இந்தியா பக்கம் திரும்ப வைத்தார்.

Obama And jaishankar

2015-ம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்ற இவர் மூன்று ஆண்டுக்காலம் சிறப்பாகப் பணியாற்றினார். குறிப்பாக டோக்லாம் விவகாரத்தில் மோடி தொடர்ச்சியாக 2 மாதங்களுக்கு மேல் ஜெய்சங்கருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மேலும், இந்தியா-நேபாளம் எல்லைப் பிரச்னையிலும் பெரும் பங்காற்றியவர் ஜெய்சங்கர். தன்னுடைய தேர்தல் பிரசாரத்தில் சீனாவுடனான ஒத்துழைப்பை அதிகரிப்பது, இந்தியாவைச் சார்ந்து இருப்பதைக் குறைப்பது குறித்துப் பேசித்தான் 2015-ம் ஆண்டில் நேபாளத்தின் பிரதமரானார் கே.பி.ஷார்மா ஒலி. சீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அவரை அதிரடியாக சில முடிவுகளை எடுத்துத் திண்டாடச் செய்தது இந்திய அரசு. அதில் சில நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியவர் ஜெய்சங்கர்.

மோடியுடனான நட்பு!

மோடி குஜராத் முதல்வராக இருந்த போது முதல்முறையாகச் சீனாவுக்குச் சென்றார். அப்போதுதான் ஜெய்சங்கரின் நட்பு மோடிக்குக் கிடைத்தது. 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி முதன்முதலாக அமெரிக்காவுக்குச் செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால், குஜராத் முதல்வராக இருந்தபோது நடந்த கலவரம் காரணமாக மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்துவந்தது. அப்போது அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக இருந்த ஜெய்சங்கர் இந்த விஷயத்தில் தலையிட்டு பிரச்னைகளைத் தீர்த்துவைத்தார். அதுமட்டுமல்லாமல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடியை உரையாற்றச் செய்யும் சவாலான பணியையும் செய்து முடித்து, பிரதமர் மோடி மனதில் நீங்கா இடம்பிடித்தார் ஜெய்சங்கர். கடந்த ஆண்டில் இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான `பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த ஆண்டு மோடி அமைச்சரவையிலும் இடம்பெற்றார் ஜெய்சங்கர்.

Modi

இவர், இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றபோது காங்கிரஸ் கட்சி உறுப்பினரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான நட்வர் சிங் இவரைப் புகழ்ந்து பேசியிருந்தார்.

வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர்!

மே 31, 2019 அன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார் ஜெய்சங்கர். ஜூன் 24, 2019 அன்று பி.ஜேபி-யில் இணைந்தார். பின்னர், ஜூலை 5, 2019 அன்று ராஜ்ய சபா உறுப்பினராகக் குஜராத் மாநிலம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜெய்சங்கர்

பல வெளிநாடுகளுடன் நல்ல தொடர்பும், வெளியுறவுத்துறையில் பெரும் அனுபவமும் கொண்டவர் ஜெய்சங்கர் என்பதால் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் இவர் மீதான எதிர்பார்ப்புகள் பன்மடங்காகின. வெளியுறவுத்துறையில் நிச்சயம் முக்கிய நகர்வுகளை மேற்கொள்வார் என்று அப்போதே பலரும் கருத்துகளைத் தெரிவித்தனர். அதேபோல சில அதிரடியான நகர்வுகளை மேற்கொண்டார் அவர்.

சர்வதேச நாடுகளில் நிலவி வரும் பாதுகாப்பு சூழல் குறித்து விவாதிப்பதற்காக ஜொ்மனியின் மியூனிக் நகரில் ‘பாதுகாப்பு மாநாடு’ கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, அமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எம்.பி. லின்ட்ஸே கிரகாம் பேசுகையில், ‘‘அமெரிக்காவைப் போல இந்தியாவும் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. அந்தப் பிரச்னைகளுக்கு ஜனநாயக ரீதியில் இந்தியா தீர்வு கண்டு வருகிறது. ஆனால், ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில் இந்தியா எவ்வாறு தீர்வு காணப்போகிறது என்று தெரியவில்லை. ஏனெனில் இந்த ஒரு பிரச்னைக்கு இரு ஜனநாயக நாடுகள் வெவ்வேறு தீர்வுகளைக் காண வாய்ப்புள்ளது’.’ எனக் கருத்து தெரிவித்தார். இதற்கு ``இந்த விவகாரம் தொடர்பாக நீங்கள் கவலைப்பட வேண்டாம். இந்தியா இந்த விவகாரத்துக்கு உரிய தீர்வு காணும்’’ என்று அதிரடியாகப் பதிலளித்தார் அமைச்சர் ஜெய்சங்கர். இதைத் தொடர்ந்து பேசிய ஜெய்சங்கா்,

ஐ.நா சபையின் நம்பகத்தன்மை குறித்துப் பேசிய ஜெய்சங்கருக்கு மற்ற நாட்டு பிரதிநிதிகள் மத்தியில் பாராட்டுகள் குவிந்தன.

இந்த மாதத் தொடக்கத்தில், ஐ.நா சபை பாதுகாப்பு கவுன்சிலில் இரண்டு இந்தியர்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்க முயற்சி செய்தது பாகிஸ்தான். கோபிந்தா பட்நாயக், அங்காரா அப்பாஜி ஆகிய இரண்டு இந்தியர்களைப் பயங்கரவாதிகளாக அறிவித்து தடை விதிக்குமாறு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் கோரியது. இந்த முயற்சியானது பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் ஆதரவுடன் முறியடிக்கப்பட்டது. இதேபோல கடந்த ஜூலை மாதத்திலும் வேணு மாதவ், அஜோய் மிஸ்த்ரி ஆகிய இருவரையும் பயங்கரவாதிகளாக அறிவிக்க வேண்டுமெனப் பாகிஸ்தான் கோரியிருந்தது. ஆனால், அதற்கான தகுந்த அதரங்களைப் பாகிஸ்தான் சமர்ப்பிக்கவில்லை. அந்த சமயத்தில் சீனாவைத் தவிர்த்த மற்ற நாடுகள் பலவும் இந்தியாவுக்கே ஆதரவளித்தன. இது இந்திய வெளியுறவுத்துறை, மற்ற நாடுகளோடு வைத்திருக்கும் நல்லிணக்கத்தை நிரூபித்தது.

ஜெய்சங்கர்

Also Read: India-China Faceoff: `மே மாதத்திலிருந்தே மிக மோசமான நிலைமைதான்..!' - எல்லையில் என்ன நடக்கிறது?

அதேபோல இந்தியா-சீனா எல்லையில் கடந்த சில மாதங்களாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஜூன் 15-ம் தேதி இருநாட்டு வீரர்களிடையேயும் ஏற்பட்ட தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் மரணமடைந்தனர். இதனையடுத்து மீண்டும் கடந்த வாரத்தில் இந்திய-சீனா எல்லையில் உச்சக்கட்ட பதற்றம் நிலவியது. இதுகுறித்து பேட்டியளித்த அமைச்சர் ஜெய்சங்கர்...

இந்தநிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மாஸ்கோ சென்றார். தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களைச் சந்தித்து இருநாட்டு உறவு குறித்துப் பேசினார் ஜெய்சங்கர். இதையடுத்து ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான `ரிக்’ அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் நடத்தினார். இதில் இந்தியா, சீனா இடையே நிலவும் சிக்கல்கள் குறித்துப் பேசப்பட்டன.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், எல்லையில் நிலவும் பிரச்னையைத் தீர்க்க ஐந்து அம்சத் திட்டத்துக்கு இரு நாட்டு அமைச்சர்களும் ஒப்புதல் அளித்துள்ளாதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமலிலுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் மரபுகளின் அடிப்படியில் எல்லைப் பிரச்னையைத் தீர்க்க ஐந்து அம்சத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து அம்சக் கோரிக்கை உடன்படிக்கையில் ஜெய்சங்கரின் பங்கு மிக முக்கியமானது. இதன் பின்னர் சீனாவுடனான பிரச்னையில் சுமுகமான தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jaishankar

வெளியுறவுத்துறை அதிகாரியாகக் காங்கிரஸ், பா.ஜ.க என கட்சி பேதமின்றி திறம்படச் செயலாற்றியவர் ஜெய்சங்கர். பா.ஜ.க ஆட்சியில் அமைச்சர் பொறுப்பேற்றிருந்தாலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர் இவரைப் பாராட்டிப் பேசியுள்ளதுதான் இதற்குச் சான்று. ``இனி வரும் காலங்களில் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடனான எல்லைப் பிரச்னைகளில் திறம்படச் செயலாற்றி சர்வதேச நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு நற்பெயரை நிச்சயம் உண்டாக்குவார் ஜெய்சங்கர்'' என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் டெல்லியைச் சேர்ந்தவர்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/detailed-article-about-central-minister-jaishankars-work

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக