Ad

திங்கள், 7 செப்டம்பர், 2020

ஆம்பூர்: `கண்டிச்சும் திருந்தல... சுவர் ஏறி வீட்டுக்குள்ள வர்றான்!’ - அதிரவைத்த எலக்ட்ரீசியன்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள தேவலாபுரம் ஊராட்சி ராமச்சந்திரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35), எலக்ட்ரீசியனாக உள்ளார். இவரது மனைவி அதே பகுதியில் உள்ள ஷூ கம்பெனியில் வேலை செய்துவருகிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், மணிகண்டனின் மனைவிக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் ராஜேஷ் (27) என்ற இளைஞருக்கும் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ராஜேஷிக்கும் திருமணமாகி ஓர் குழந்தை உள்ளது. தவறான உறவைக் கைவிடுமாறு மனைவியையும், ராஜேஷையும் மணிகண்டன் பலமுறை எச்சரித்துள்ளார். அவரது கண்டிப்புக்கு இருவரும் மிரளவில்லை என்று கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட மணிகண்டன்

இதனால், ஆத்திரமடைந்த மணிகண்டன் ராஜேஷை கொடூரமாக கொலை செய்யத் திட்டம் தீட்டியதாகத் தெரிகிறது. அதன்படி, சம்பவத்தன்று பெட்ரோல் நிரப்பிய கேனுடன் ராஜேஷின் வீட்டுக்குள் புகுந்த மணிகண்டன் அவரைத் தாக்கி நிலைகுலைய செய்துள்ளார். பின்னர், அவர்மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளார். உடல் முழுவதும் தீ பரவியதால் அலறித்துடித்த ராஜேஷை அப்பகுதி மக்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி ராஜேஷ் மரணமடைந்தார்.

இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக, உமராபாத் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைதுசெய்தனர். விசாரணையில், மணிகண்டன் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சி ரகம். ‘‘என் பொண்டாட்டி வேலை செய்யிற அதே ஷூ கம்பெனியிலதான் ராஜேஷும் வாட்ச்மேனாக வேலை செஞ்சிக்கிட்டு இருந்தான். அவங்க ரெண்டுபேரும் கம்பெனியிலதான் நெருக்கமாகியிருக்காங்க. எதிரெதிரே வீடு இருக்கிறதுனால அவனுக்கு இன்னும் வசதியா போச்சி. நான் இல்லாத நேரத்துல முன்வாசல் வழியா வீட்டுக்குள்ள வர்றான். நான் வீட்டுல இருந்தாலும் நைட் டைம்ல சுவர் ஏறி குதிச்சி உள்ள வர்றான்.

கொலை செய்யப்பட்ட ராஜேஷ்

ஒருநாள் நைட் என்கிட்ட மாட்டிக்கிட்டான். சுவர் ஏறி குதிச்சி தப்பிச்சி ஓடிட்டான். வெளியில சொன்னா எனக்குதான் அசிங்கம்னு அமைதியா இருந்தேன். அவனைச் சந்திச்சி, ‘உனக்கும் பொண்டாட்டி புள்ளைங்க இருக்காங்க. அப்புறம் ஏன்டா என் வாழ்க்கைய கெடுக்கிற’னு சொல்லி கண்டிச்சேன். என் பொண்டாட்டியும் திருந்தல. அவகிட்ட இருந்து இதுவரைக்கும் மூணு செல்போனைப் பிடுங்கி உடைச்சிருக்கேன். ரெண்டு பேரும் என்னை என்னனு நெனச்சிட்டாங்க. அவங்க ரெண்டு பேரு மேலயும் எனக்கு பயங்கரமான கோவம் வந்துச்சி. என் குடும்பத்தை கெடுத்த ராஜேஷை கொடூரமா கொல்லணும்னு முடிவு பண்ணேன். பெட்ரோல் வாங்கிகிட்டு அவன் வீட்டுக்குள்ள புகுந்து மேல ஊத்தி கொளுத்திட்டேன். அவனும் என் கண்ணு முன்னாடி வலி தாங்க முடியாம கதறுனான். அப்பதான் என் மனசுக்கு நிம்மதியா இருந்துச்சி’’ என்று கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் திருப்பத்தூர் கிளைச்சிறையில் அடைத்துள்ளனர்.



source https://www.vikatan.com/news/crime/youth-murdered-for-illegal-relationship-in-ambur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக