பொதுவாக மக்கள் பிரச்னைகள் திடீர் திடீரென கிளம்பும். உடனுக்குடன் சுடச்சுட அரசியல் தலைவர்கள் கருத்து சொல்லுவார்கள். ஆனால், தமிழக பி.ஜே.பி. தலைவர் முருகனோ, கொஞ்சம் லேட்டாகத்தான் ரியாக்ட் செய்கிறார் என்கிற பேச்சு பி.ஜே.பி. கட்சியினர் மத்தியிலே எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
கறுப்பர் கூட்ட பிரச்னை முடிந்த பிறகு, வேல் பூஜைக்கு முருகன் அழைப்பு விடுத்தார். பிரச்னை வீரியமாக இருந்தபோது, பேசாமல் இருந்துவிட்டு, லேட்டாக விழித்து வேல் பூஜை நடத்தினார். இதேபோல், இ-பாஸ் முறையை ரத்து செய்யச் சொல்லி பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து ஒய்ந்த பிறகு, கடைசியாக குரல் கொடுத்தது தமிழக பி.ஜே.பி. கொரோனா பரவமால் இருக்க சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் என்று பிரதமர் மோடி திரும்பத்திரும்ப விலியுறுத்தி வருகிறார். ஆனால், தமிழக பி.ஜே.பி. தலைவர் எல். முருகன் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி கேட்டார்.
இந்த நிலையில், பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தில் நடந்து வரும் மோசடியை விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று செப்டம்பர் 6-ம் தேதிதான் பி.ஜே.பி. தலைவர் எல். முருகன் அறிக்கை கொடுத்தார். அதன் தொடர்ச்சியாக, இன்று(செப்டம்பர் 7) மதியம் 3 மணிக்கு தமிழக பி.ஜே.பி.-யின் துணை தலைவர் வி.பி. துரைசாமி, பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிடட முக்கிய பிரமுகர்கள் தமிழக அரசின் தலைமைச செயலாளர் சண்முகத்தை நேரில் சந்திதது புகார் மனு கொடுக்கப்போகிறார்கள்.
மாவட்டங்களில் உள்ள பி.ஜே.பி. தலைவர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கிறார்கள். இந்த ஊழல் தொடர்பாக கடந்த மாதமே செய்தி வெளியாகி பரபரப்பானது. அதை தொடர்ந்து, தமிழக அரசும் ஊழலுக்கு துணை போன அதிகாரிகளை சஸ்பெண்டு செய்ய ஆரம்பித்துவிட்டனர். கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முறைகேடாக பெயர் சேர்க்கப்பட்டவர்களைப் பற்றிய தீவிர விசாரணை நடக்கிறது. தமிழக பி.ஜே.பி. தலைவர்கள் இப்போது திடீரென்று விழித்துக்கொண்டு ஊழல் நடந்திருப்பதாக சொல்லி புகார் மனு கொடுக்கப்போகிறார்கள்.
ஏன் லேட் என்று கருத்து கேட்க தமிழக பி.ஜே.பி. தலைவர் முருகனுடன் தொடர்புகொண்டபோது, அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. துணைத்தலைவர் வி.பி. துரைசாமியிடம் பேசினோம், ''ஏற்கனவே நாங்கள் அரசு கவனத்துக்கு கொண்டுபோயிருக்கிறோம். இந்த ஊழலில் தொடர்புடையவர்களை விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி இப்போது மனு கொடுக்கப்போகிறோம். அவ்வளவுதான்’' என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/is-tamil-nadu-bjp-reacting-late-in-every-issues
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக