கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்தவர் வினோத் குமார். 12 ம் வகுப்பு படித்த இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. ப்ளக்ஸ்,டிசைனராக பணியாற்றி வந்த வினோத்குமார், பலமணிநேரம் ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் மூழ்கி கிடப்பது வழக்கம். இந்நிலையில், அவரது ஃபேஸ்புக்கில் திருச்சியை சேர்ந்த நிஷா என்ற பெண் ஒருவர் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்துள்ளார். அவரும் அதனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
முதலில் சில நாட்கள் இருவரும் நட்பாகப் பழக, அவருடைய செல்போன் நம்பரை வாங்கி தனிப்பட்ட முறையில் பேச்சைத் தொடரந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பேச்சு முத்திப்போய், "உன்னை எனக்கு பிடிச்சிருக்கு. உன்னை நான் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்" என ஒரு மெசேஜ் அனுப்பியிருக்கிறார் நிஷா. அதற்கு எதுவும் பதிலளிக்காமல் இருந்திருக்கிறார் வினோத்குமார். கொஞ்ச நேரத்தில், ’உன்னோட நான் தனியாக இருக்கணும்’ என்று ஒரு ஆபாச படம் ஒன்றை அனுப்பியிருக்கிறார் நிஷா. பின்னர் வினோத்குமாரும் அவரை சந்திக்க வேண்டும் என்ற தனது ஆவலை வெளிப்படுத்தினார். இதையடுத்து வினோத்குமாரை கடந்த 5-ம் தேதி திருச்சிக்கு வருமாறு அழைத்துள்ளார் நிஷா.
இதனையடுத்து அவர் தனது குடும்பத்தினரிடம் வேலை விசயமாக திருச்சிக்கு செல்வதாக பொய் சொல்லிவிட்டு, தனது ஃபேஸ்புக் காதலியை நேரில் பார்க்கும் ஆவலில் சினிமா பட கதாநாயகன் போல், டூவிலரில் புயலென புறப்பட்டு திருச்சி வந்துள்ளார். திருச்சி வந்தவுடன் அந்த நிஷாவுக்கு போன் செய்த அவர் காஜாமலைக்கு வருமாறும் அங்குள்ள பள்ளி ஒன்றின் அருகில் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பள்ளி விடுமுறை என்பதால் ஆள் அரவமின்றி இருந்த அப்பகுதிக்கு வந்த வினோத்குமாரிடம் அங்கு மறைந்திருந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை மடக்கி பிடித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த பர்ஸ், ஸ்மார்ட் போன், ஏடிஎம் கார்டு மற்றும் அவரது இருசக்கர வாகனத்தை பறித்துக்கொண்டு ஓடியது. செய்வதறியாது திகைத்து நின்ற வினோத்குமார் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
நிஷாவின் போன் நம்பரை வைத்து அவரை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் தங்கள் பாணியில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நிஷா அனைத்து விவரங்களையும் கூறவே இதில் மூளையாக செயல்பட்ட முகமது யாசிர், ஆசிக் மற்றும் நிஷா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்ட நிலையில் அஜீஸ், சித்திக், அன்சாரி ஆகிய 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
source https://www.vikatan.com/news/crime/the-woman-along-with-two-was-arrested-in-cheating-case-in-trichy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக