Ad

சனி, 12 செப்டம்பர், 2020

குமரி: கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட உடல்! - தற்கொலை செய்துகொண்டாரா மருத்துவக் கல்லூரி மாணவர்?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள முகிலன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சீனிவாசன். இவரது மூன்றாவது மகன் சிவனேஷ் (22). இவர், மதுரையில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டதால், சிவனேஷ் தனது வீட்டிற்கு வந்து, பெற்றோருடன் வசித்துள்ளார். இந்நிலையில் நேற்று காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன் பல் தேய்ப்பதற்காக வீட்டுக்குப் பின்புறம் உள்ள தோப்பிற்குச் சென்ற சிவனேஷ், வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. மகனைக் காணாததால், தந்தை சீனிவாசன் வீட்டுக்கு பின்புறம் உள்ள தோப்பில் தேடிப் பார்த்துள்ளார். தோப்பிற்குள் எங்கும் மகனைக் காணாததால், சந்தேகத்தின் பேரில் அங்குள்ள விவசாயக் கிணற்றில் எட்டிப்பார்த்துள்ளார். தண்ணீர் வற்றிய நிலையில் இருந்த அந்த கிணற்றில் தனது மகன் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த சீனிவாசன் அழுது சத்தம்போட்டுள்ளார்.

கிணற்றில் இருந்து உடல் மீட்பு

உடனே அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இதுகுறித்து சுசீந்திரம் காவல் நிலையம் மற்றும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் கிணற்றில் இருந்து சிவனேஷை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிவனேஷ் இறந்துவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சிவனேஷின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Also Read: நீட் தேர்வு: தர்மபுரி, நாமக்கல்லை சேர்ந்த 2 மாணவர்கள் தற்கொலை! - தமிழகத்தை உலுக்கும் மரணங்கள்

மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவன் சிவனேஷ் திடீரென இறந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தோப்பிற்கு சென்றபோது கால் தவறி கிணற்றில் விழுந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் சுசீந்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சிவனேஷை, அவரது தந்தை திட்டியதால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கிணற்றில் இருந்து உடல் மீட்பு

இதுகுறித்து போலீஸார் ஒருவர் கூறுகையில், ``சிவனேஷ், காலை 10.30 மணி வரை தூங்கியுள்ளார். `இவ்வளவு நேரம் தூங்குவாயா?’ என அவரது தந்தை சத்தம்போட்டுள்ளார். இதையடுத்துதான் அந்த மாணவன் பெட்டில் இருந்து எழுந்து வெளியே சென்றுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வெளியே சென்ற சிவனேஷை அவரது தந்தை தேடிச் சென்றபோதுதான் கிணற்றில் அவரது உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே தந்தை திட்டியதால் அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் விசாரணை முடிவில்தான் காரணம் தெரியவரும்" என்றார்.



source https://www.vikatan.com/news/crime/medical-college-students-body-recovered-from-well-near-kanyakumari

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக