Ad

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

திருப்பூர்: `எம்மொழியும் கற்பேன்டா; தடுக்க நீ யாரடா!’ - இது பா.ஜ.க-வின் டி-ஷர்ட் டிசைன்

கோவை, திருப்பூர், ஈரோடு என கொங்கு மண்டலம் முழுக்கச் சென்று பா.ஜ.க நிர்வாகிகளைச் சந்தித்துவருகிறார் பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன். அந்தவகையில், நேற்று முன்தினம் திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டவர், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக அச்சிடப்பட்ட டி-ஷர்ட் ஒன்றை வெளியிட்டார். ‘தமிழாய்ந்த தமிழன்டா - எம்மொழியும் கற்பேன்டா - தடுக்க நீ யாரடா’ என அச்சிடப்பட்டிருந்த அந்த டி-ஷர்ட், ‘இந்தி தெரியாது போடா’ என தி.மு.க உருவாக்கிய வினைக்கு எதிர்வினை எனக் குறிப்பிட்டார்.

எல்.முருகன்

தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய பா.ஜ.க தலைவர் எல்.முருகன், ``தி.மு.க தலைவர் ஸ்டாலின் எல்லா விஷயத்திலும் அரசியல் பண்ணக் கூடாது. குழந்தைகள் உயிரோடும், மாணவர்களின் சென்டிமென்ட்டோடும் அவர் விளையாடக் கூடாது. அரசாங்கமும், எதிர்க்கட்சிகளும் மாணவர்களுக்கு முறையான கவுன்சலிங் தர வேண்டும். மாறாக, மாணவர்களை தவறான வழியில் திசை திருப்பக் கூடாது. தேர்வுக் காலங்களில் மாணவர்களுக்கு பயம் எழுகிறது. அந்தத் தேர்வு பயத்தைப் போக்க வேண்டியது பெற்றோர்களும் அரசியல்வாதிகளும்தான். தி.மு.க தலைவர் ஸ்டாலின்மாணவர்களை பயமுறுத்தி அரசியல் செய்யக் கூடாது.

திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க செயற்குழுக் கூட்டம்

நீட் தேர்வு தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நடக்கிறது. தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றில் தமிழக மாணவர்களுக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த உண்மைகளை மறைத்து எதிர்கட்சித் தலைவர் மாணவர்களின் உயிரோடு விளையாடக் கூடாது.

அ.தி.மு.க - பா.ஜ.க உறவு சுமுகமாக இருக்கிறது. இதில் எந்தப் பிரச்னையும் இல்லை. சி.பி.எஸ்.இ., மெட்ரிகுலேஷன் என அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் இந்தி கற்பிக்கப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே புறக்கணிக்கப்படுகின்றனர். அவர்களுக்கும் இந்தியைக் கற்பிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதே பா.ஜ.கவின் நிலைப்பாடு.

2016 சட்டமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 75 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி தோல்வியை நிர்ணயித்தது. தற்போது பிரதமர் மோடி மீது நம்பிக்கைவைத்து ஏராளமானோர் அலை அலையாக வந்துகொண்டிருக்கிறார்கள். அதனால்தான் நாங்கள் தனித்து நின்றாலும் 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் எனச் சொல்கிறோம். இப்போதைக்கு இதே அணி தொடரும். தேர்தல் வரும்போது கூட்டணி குறித்துத் தெரியும்’’ என்றார்.



source https://www.vikatan.com/news/politics/tamilnadu-bjp-leader-murugan-released-new-t-shirt

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக