Ad

திங்கள், 14 செப்டம்பர், 2020

வேலூர்: `கொரோனா வார்டில் 2 பேர் திடீர் மரணம்!’ - ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமா?

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில், நேற்று மாலை அரைமணி நேரத்துக்கும்மேலாக திடீரென ‘ஆக்ஸிஜன்’ தடைபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்றுவந்த வேலூரை அடுத்துள்ள மூஞ்சூர்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 42 வயது பெண்ணும், ஆரணியை அடுத்துள்ள களம்பூரைச் சேர்ந்த 36 வயதுடைய செங்கல் சூளை உரிமையாளரும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்தனர்.

கொரோனா

இவர்களின் இறப்புக்கு ‘ஆக்ஸிஜன்’ பற்றாக்குறையும், மருத்துவர்களின் கவனக்குறைவும்தான் காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதனால், மருத்துவமனையில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதையடுத்து, வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் நேற்று இரவே மருத்துவமனைக்கு விரைந்துசென்று விசாரணை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘‘வேலூர் அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் மொத்தம் 510 படுக்கைகள் உள்ளன.

இவற்றில், 285 படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 16 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், இரண்டுபேர் இறந்துள்ளனர். இருவரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறக்கவில்லை. மரணமடைந்த பெண் ஏற்கெனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நுரையீரலும் பாதிக்கப்பட்ட சூழலில் அவர் மரணடைந்திருக்கிறார். அதேபோல், செங்கல் சூளை உரிமையாளருக்கு ‘நிமோனியா’ பாதிப்பு உள்ளது.

மாவட்ட வருவாய் அலுவலர்

அவரது உடல் சிகிச்சையை ஏற்றுக்கொள்ளவில்லை. மாரடைப்பு காரணமாகவே அவர் இறந்துள்ளார். அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் போதிய ஆக்ஸிஜன் பிளான்ட் உள்ளது. மின்தடை ஏற்பட்டாலும், தொடர்ந்து 6 மணிநேரம் வரையில் ஆக்ஸிஜன் சப்ளைசெய்யும் வகையில் யு.பி.எஸ் மற்றும் சிலிண்டர் வசதியும் இருக்கிறது. எனவே, ஆக்ஸிஜன் தடை அல்லது மருத்துவர்களின் கவனக்குறைவால் இருவரும் இறக்கவில்லை. இருவருக்குமே உயர் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது’’ என்றார்.



source https://www.vikatan.com/news/general-news/2-patients-died-in-vellore-relatives-says-oxygen-shortage-is-the-reason

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக