பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்றல் அதுவே படை
என்பார் வள்ளுவர். எமனே படை திரட்டி வந்தாலும் திரண்டு எதிர்க்கும் ஆற்றல் உடையதே படை.
ஒவ்வொரு முறை தலைவர்களின் பாதுகாப்பிற்கு வரும் படைகளை ஆச்சர்யமாய் பார்ப்போம்.
சமீபத்தில் ஒரு நடிகைக்கு பாதுகாப்பு அரணாக படைகள் வந்த போது அது Y படையா Y ப்ளஸ்ஸா என சந்தேகம் வந்தது. அதனை அறிந்து கொள்ள நேர்க்கையில் சில விஷயங்கள் தெரிந்தன.
ஒவ்வொரு மக்களுக்கும் காவல் துறையினர் பாதுகாப்பு அளிப்பது போல உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு பிரத்யேக பாதுகாப்பு அளிக்க பாதுகாப்புப் பிரிவுகள் உள்ளன.
இவர்கள் தவிர விஜபிக்கள், நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்களுக்கு பாதுகாப்பு வழங்குகின்றனர். இந்தியாவில் பாதுகாப்பு அமைப்பு X,Y,Y+,Z,Z+,SPG எனும் சிறப்பு பாதுகாப்பு என வழங்குகின்றனர்
#பாதுகாப்புப் படைகள்
நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், உள்நாட்டு பிரச்னை ஏற்படாமல் தடுக்கவும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (C.R.P.F),மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை(C.I.S.F),எல்லைக் காவல்படை, இந்தோ திபெத்திய எல்லைக்காவல் படை, சஹாஸ்த்ரா சீமா பால் எனும் ஐந்து படைகள் செயல்படுகின்றன. இதிலிருந்துதான் பாதுகாப்பு பிரிவுக்கு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இதில் C.R.P.F எனும் படைப்பிரிவு 1939ல் உருவாக்கப்பட்டு 1949ல் முறைப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. C.I.S.F எனும் தொழில் பாதுகாப்புப் படை 1983ல் துவக்கப்பட்டது. இது போன்ற படைகளில் பயிற்சி பெற்றவர்கள் நியமிக்கப்படுவர்.
இவைதவிர பல்வேறு படைகளில் சிறப்பாக பணியாற்றும் படைவீரர்களையும் உள்துறை அமைச்சகத்தின் கீழ் பாதுகாப்பு படையில் ஈடுபடுத்துவர்.
இவர்களில் Black cats என்பவர்கள் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் ஆவர். கர்நாடகத்தில் உள்ள பெல்ஹாம் பள்ளியில் கமாண்டோ பயிற்சி பெற்றவர்களே ப்ளாக் கேட்ஸாக வர முடியும். ஆயுதம் இன்றியே எதிரிகளை சமாளிக்கும் வல்லமை பெற்றவர்கள். கருப்பு அல்லது பழுப்பு நிற சஃபாரி உடை அணிந்திருப்பர்.
#பாதுகாப்புப் பிரிவு
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகள், மத்திய அமைச்சர்கள் ஆகியோருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இவை தவிர பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளவர்கள், வி.வி.ஐ.பி., உள்ளிட்ட தனி நபர்களுக்கும் அவர்கள் தகுதிக்கு ஏற்ப பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
பல்வேறு வகையான பாதுகாப்பு பிரிவுகள்
X பிரிவு பாதுகாப்பில் 2 வீரர்கள் இடம்பெறுவர். அமைச்சர்கள் அந்தஸ்த்தில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுவதாகும். பாதுகாப்புப் படைகளில் கடைநிலைப்பிரிவு இதுவாகும். இதில் கமாண்டோக்கள் இல்லை.
Y பிரிவு பாதுகாப்பு என்பது நாள் ஒன்றுக்கு 11 பேர் கொண்ட வீரர்கள் 3 வேளை சுழற்சி முறையில் பணியில் இருப்பர். ஒருவர் துப்பாக்கி ஏந்தியும் நிலையான பாதுகாப்பிற்கு மற்றவரும் இருப்பர்.
Y plus பாதுகாப்பு என்பது உளவு அமைப்புகள் அளிக்கும் அச்சுறுத்தல் காரணமாக அளிக்கப்படும். ஆயுத கமாண்டோக்கள் சுழற்சி முறையில் இருவர் துப்பாக்கி ஏந்தி 24 மணி நேரமும் பாதுகாப்பார்கள். 11 முதல் 22 பேர் வரை இருப்பார்கள்.
(11 பி.எஸ்.ஒ வீரர் இருப்பர் இதில் ஒன்று அல்லது 2 மத்திய காவல்துறை கமாண்டோக்கள் மற்றும் இதர காவல்துறையினர் பணியில் அமர்த்தபடுவார்கள். இவர்கள் இல்லாமல் 2 பெர்சனல் செக்யூரிட்டிகார்ட்களும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவார்கள்)
Z பாதுகாப்பு பிரிவில் 22 வீரர்கள் 3 வேளை சுழற்சி அடிப்படையில் இருப்பர். (4அல்லது 5 கமாண்டோ வீரர்கள் இருப்பர்)
அதி நவீன துப்பாக்கிகள் மற்றும் நவீன சாதனங்கள் வழங்கப்பட்டிருக்கும். ஆறு பேர் துப்பாக்கி ஏந்தியும் மற்றவர் பாதுக்காப்பு பணியிலும் இருப்பர்.
இவர்களில் டெல்லி காவல்துறை, ஐ.டி.பி.பி (ITBP) மற்றும் சி.ஆர்.பி.எஃப் (CRPF) உள்ளடங்குவர்.
Z plus பாதுகாப்பு பிரிவில் 36- 55 வீரர்கள் 3வேளை சுழற்சி அடிப்படையில் பணியாற்றுவர். 8 பேர் (24 பேர் மூன்று சுழற்சி அடிப்படையில்) அதிநவீன துப்பாக்கி ஏந்தி காவல் காப்பர்.
*SPG (Special Protection Group) என்பது ஒரு உயரடுக்கு பாதுகாப்பு முறையாகும். நாட்டின் பிரதமர்கள் முன்னாள் பிரதமர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்படுகிறது.
1984ல் பிரதமர் இந்திராகாந்தி சுடப்பட்டதை அடுத்து 1985ல் எஸ்.பி.ஜி துவங்கப்பட்டது. 1989ல் வி.பி.சிங் பிரதமரானபோது ராஜிவ் காந்திக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி வாபஸ் பெற்றது. பின் அவரின் படுகொலைக்குப் பின் முன்னாள் பிரதமரின் குடும்பங்களுக்கும் பத்து ஆண்டுகளுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் விதி திருத்தப்பட்டது.
SPG பாதுகாப்பு பணியிலிலுள்ளோர் சிறப்பு பயிற்சி பெற்ற நவீன தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் பயன்படுத்துவர். மறைத்து வைக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் இருப்பர். குண்டு துளைக்காத உள்ளாடைகள், கையுறை, சன் கிளாசுடன் இருப்பார்கள். இதில் CRPF, BSF,IPS பிரிவினை சார்ந்தவர் இருப்பர். 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். உலகின் மிகச்சிறந்த நவீன பயிற்சிகள் இவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. தானியங்கி துப்பாக்கி, க்ளோக் 17 வகை பிஸ்டல் வைத்திருப்பார்கள்.
தற்போதைய பிரதமரின் பாதுகாப்புப் பணியில் இருக்கும் எஸ்.பி.ஜி உடன் இருக்கும் வீரர்களுடன் Counter Assault Team (CAT) இருக்கும். இந்த குழு FN-2000, P-90, Glock-17, Glock-19 மற்றும் FN-5 போன்ற நவீன ஆயுத அமைப்புகளைப் பயன்படுத்துகிறது. பிரதமர் மீதான எந்தவொரு தாக்குதலின் போதும் அதி விரைவாக நடவடிக்கை எடுப்பதே இவர்களின் சிறப்பு.
#இசட் பிளஸ் பாதுகாப்பு
உச்சகட்ட பாதுகாப்பு என்பது இசட் பிளஸ் பாதுகாப்பு ஆகும். இசட் ப்ளஸ் பாதுகாப்பில் 55 வீரர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள். அவர்களில் 10 பேர் வரை NSG கமாண்டோ பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.
Also Read: ``ஊரார் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தேன், என் பிள்ளைகள் தானா வளர்ந்தாங்க!" - நெகிழும் ஆசிரியை #MyVikatan
மீதமுள்ளவர்கள் போலீஸ் அணியைச் சேர்ந்தவர்கள். இந்த பாதுகாப்பு வி.வி.ஐ.பிகளுக்கு (VVIPs) வழங்கப்படுகிறது. முதல் சுற்று பாதுகாப்புக்கு என்.எஸ்.ஜி பொறுப்பாகும். எஸ்.பி.ஜி (SPG) இரண்டாவது அடுக்கில் அதிகாரிகளைக் கொண்டுள்ளது. இவர்களைத் தவிர, ஐ.டி.பி.பி மற்றும் சி.ஆர்.பி.எஃப் பணியாளர்களும் பாதுகாப்பில் நிறுத்தப்படுவர். எஸ்.பி.ஜி கமாண்டோக்கள் பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்களுக்கு இசட் பிளஸ் பிரிவின் பாதுகாப்பின் கீழ் பாதுகாப்பு வழங்குகிறார்கள்.
இதில், ஒரு குண்டு துளைக்காத வாகனம், இரண்டு பாதுகாப்பு வாகனம் மற்றும் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் மொத்தம் 24 பயிற்சி பெற்ற வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். குடியரசுத்தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு ராணுவ பாதுகாப்பு மட்டுமின்றி இசட் பிளஸ் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோருக்கு மட்டுமே கடந்த 10 ஆண்டுகளில் 'இசட்-பிளஸ்' கமாண்டோ பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் என்ற அடிப்படையில், 1991-ம் ஆண்டில் இருந்து இசட்- பிளஸ் கமாண்டோ பாதுகாப்பு வழங்கப்பட்டுவந்தது. பின் 2016ல் வாபஸ் பெறப்பட்டது. கருணாநிதிக்கு 1997-ம் ஆண்டு முதல் இசட்-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. அவர் இறப்பிற்குப் பின் வாபஸ் பெறப்பட்டது. மத்திய உளவுத் துறை அறிக்கையின் பேரில் சுப்பிரமணியன் சுவாமிக்கு இசட் பிளஸ் வழங்கி பின் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு கமாண்டோக்கள் அதிநவீன துப்பாக்கி(Hecler and Koch MP5)ஏந்தியிருப்பர். இந்த பாதுகாப்பில் 1-2 எச்சரிக்கை கார்கள், முன் மற்றும் பின்புற பைலட் மற்றும் 3 ஷிப்டுகளில் 3-4 மாநில போலீஸார், 2 முதல் 4 வரை பின்தொடர கார்கள் பாதுகாப்பு அதிகாரிகள் PSO இவையனைத்தும் பாதுகாப்பு அரணாக இருக்கிறது. இந்தியாவின் தற்போது 17 வி.ஐ.பி.க்களுக்கு இசட் + வகை பாதுகாப்பைப் பெறுகின்றனர். இதற்கென மாதம் 25 லட்சம் ருபாய் வரை செலவு செய்யப்படுகிறது.
எப்போதும் தன்னலம் கருதாது, தன்னுயிரை துச்சமென நினைத்துபாதுகாக்கும் தன்னலமற்ற வீரர்கள் பாதுகாப்பு படையினராவர்.
-மணிகண்டபிரபு
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/article-about-indian-special-forces
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக