Ad

திங்கள், 14 செப்டம்பர், 2020

சூர்யாவின் கருத்து ஏற்படுத்திய சர்ச்சை: முன்னாள் நீதிபதி, கல்வியாளர், ஊடகவியலாளரின் கருத்து!

பொதுவாக பள்ளித் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில், தேர்வில் தோல்வி அடைந்ததன் காரணமாக அங்கொன்றும் இங்கொன்றுமான மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் முன்பு வெளியாகும். சமீபமாக அதுபோன்ற செய்திகள் குறைந்திருக்கின்றன. ஆனால், தேர்வெழுதுவதற்கு முன்பாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அவலம் தற்போது அரங்கேறி வருகிறது. அதுவும் நடப்பாண்டு நீட் தேர்வு நடைபெறுவதற்கு முந்தைய தினம், தேர்வு பயத்தின் காரணமாக, மன அழுத்தம் உண்டாகி அடுத்தடுத்து மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது. அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி பலரும் இந்த மரணங்கள் குறித்து தங்களின் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தனர்.

சூர்யா அறிக்கை

அதன் தொடர்ச்சியாக நடிகர் சூர்யா, மிகக் காட்டமான அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டார். அதில்,

''அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாகக் கொண்டு வருகிறது. ஏழை, எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது'' என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் நடைபெறுவது குறித்து நடிகர் சூர்யா தெரிவித்துள்ள கருத்து, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் அவரின் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரியும் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் ஒன்றை எழுதினார். மறுபுறம் `கல்வி சார்ந்த விஷயங்களில் கருத்துத் தெரிவிக்க நடிகர் சூர்யா என்ன கல்வியாளரா?’ என்றும் ‘சூர்யா தன் படங்களுக்கான புரோமோஷனுக்காக இது போன்ற கருத்துக்களைத் தெரிவிக்கிறார்’ என்றும் சூர்யாவின் மீது பலமுனைத்தாக்குதல் நடைபெற்று வருகின்றன.

''நடிகரான சூர்யாவுக்கு கல்வி குறித்து கருத்துத் தெரிவிக்க உரிமையில்லை'' எனக் கூறுவது பற்றி கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம்;

''நடிகர் சூர்யா வரி கட்டவில்லையா... அவர் ஓட்டுப் போடவில்லையா... அவர் இந்தியன் இல்லையா... ஒரு இந்தியனாக அவருக்கு இந்திய நாட்டில் நடக்கிற ஒரு சிக்கலைக் குறித்து கருத்து சொல்வதற்கு முழு உரிமை இருக்கிறது. தன் குழந்தைகளைப் போல, பெரும்பாலான குழந்தைகளைப் படிக்க வைத்துக்கொண்டிருக்கும் அவருக்கு கல்வி குறித்து கருத்துச் சொல்வதற்கு தார்மீக உரிமை இருக்கிறது. எனக்குத் தெரிந்து அவரைவிடத் தகுதியானவர்கள் வேறு யாரும் இல்லை.

`குழந்தைகளின் பெற்றோர்கள் கூடுதல் கவனத்தோடு இல்லாததால்தான் இந்த மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன’ என்றும் சிலர் முன்வைக்கிறார்கள். குழந்தைகள் சிறுவயதிலிருந்து ஒரு கனவை உருவாக்கிக் கொள்கிறார்கள். அதற்காக தங்களைத் தயார்படுத்தி வருகிறார்கள். குழந்தைகள் விரும்புவதைப் பூர்த்தி செய்வதுதான் பெற்றோர்களின் கடமை. அதிலென்ன தவறு? படித்து நன்றாக மதிப்பெண் பெற வேண்டும் என பெற்றோர் விரும்புவதிலும் என்ன தவறு இருக்கிறது. காரணம், அந்த மாணவர்கள் 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்கிறார்களே... நீட் தேர்வைப் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டு குழந்தைகளை, பெற்றோர்களை குறை சொல்வது எந்தவகையிலும் நியாயமில்லை. அதேபோல மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு தங்களைத் தயார் படுத்திக்கொண்டுவிட்டார்கள் என்கிற செய்தியும் பரவி வருகிறது. அதுவும் தவறான தகவல். கடந்த சில ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு 11-ம் வகுப்பு சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 15 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. அதேபோல, 11-ம் வகுப்பில் பயாலஜி பிரிவில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பதையே புள்ளிவிவபரங்கள் நமக்குச் சொல்கின்றன.

என்னைப் பொறுத்தவரை கலைஞர்களுக்கு இயல்பாகவே சமூகம் குறித்த ஒரு அக்கறை உணர்வு இருக்கும். அதுவும் குழந்தைகளுடன் இருக்கும் சூர்யாவுக்கு அந்த உணர்வு கூடுதலாகவே இருக்கும். அதனால், சூர்யா இந்த விஷயத்தில் கருத்துத் தெரிவிக்காமல் இருந்திருந்தால்தால்தான், அது தவறு என நான் சொல்லியிருப்பேன்” என்றார்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு

தமிழக பா.ஜ.க துணைத்தலைவரும் முன்னாள் ஐ.பி.,எஸ் அதிகாரியுமான அண்ணாமலையைத் தொடர்பு கொண்டு இதுகுறித்துக் கேட்டோம்.

``நடிகர் சூர்யாவுக்கு கருத்து சுதந்திரம் இருந்தாலும் இவ்வளவு காட்டமான அறிக்கை வெளியிடத் தேவையில்லை'' என்று ஆரம்பித்தவர், ``சூர்யாவுக்கு கருத்துத் தெரிவிக்க உரிமை இருக்கிறது. ஆனால், மாணவர்கள் நீட் தேர்வெழுதுவதற்குத் தயாராகிவிட்டனர். வருடந்தோறும் தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கையும் தேர்ச்சி விகிதமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தாண்டு தேர்வு முடிவுகள் வெளியாகும்போது அது மீண்டும் நிரூபணமாகும். சாமானிய மாணவர்களுக்கு இந்தத் தேர்வு எதிராக இருப்பதாக சூர்யா கருத்துத் தெரிவித்துள்ளார். அது தவறு. நீட் தேர்வு, ஏழை மாணவர்களும் எளிமையாக மருத்துவப் படிப்பு படிக்கவேண்டும் என்பதற்காகத்தான் கொண்டு வரப்பட்டது. அந்த அறிக்கையில் சூர்யா தெரிவித்துள்ள கருத்துகளை நான் ஏற்கவுமில்லை.

தவறான புரிதலோடு இப்படியான கருத்துகளைத் தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா. தவிர ஊடகங்கள் இந்த விஷயங்களைக் கையாண்டதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன. 'Press Council of India' செப்டம்பர், 2019-ம் ஆண்டில் தற்கொலைகளை எப்படி செய்தியாக்க வேண்டும் என்கிற வழிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. அதை ஊடகங்கள் சரியாகப் பின்பற்றுவதில்லை. ஒரு தற்கொலையை ஊதிப் பெரிதாக்கும்போது அது தொடருவதற்கான வாய்ப்பு உளவியல் ரீதியாகவே இருக்கிறது. ஊடகங்கள் கொஞ்சம் கவனமாக இந்த விஷயத்தைக் கையாண்டிருக்கவேண்டும் என்பது என்னுடைய கருத்து'' என்றார் அவர்.

பா.ஜ.க அண்ணாமலை

''ஊடகஙகள் இந்த தற்கொலை மரணங்களை இன்னும் கவனமாகக் கையாண்டிருக்க வேண்டுமா?''

மூத்த பத்திரிகையாளர், ஆர்.கே.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ``மன்னராட்சிக் காலத்தில், தவறான செய்திகளைக் கொண்டு வருகிற எதிர் நாட்டுப் படை வீரர்களின் தலையை வெட்டிக் கொலை செய்யும் வழக்கம் இருந்தது. செய்தி எழுதி அனுப்பிய மன்னரை விட்டுவிட்டு, தகவல் கொண்டு வரும் வீரரைக் கொல்வதற்கு ஒப்பானதுதான் செய்தி வெளியிட்ட ஊடகங்கள்தான் தற்கொலைக்குக் காரணம் எனத் திசைதிருப்புவது. தொடர்ச்சியாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது நீட் தேர்வினால்தானே தவிர அதைப்பற்றிய செய்தி வெளியிட்டதால் அல்ல. அந்த மாணவர்கள் படிக்காமல் செய்தி சேனல்களை பார்த்துக் கொண்டிருந்தார்களா என்பது கூட தெரியாத நிலையில், இப்படி மீடியாவின் மீது குற்றம் சுமத்துவது அபாண்டமானது. அதுபோக தற்கொலை குறித்து அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள்தான் இது போன்ற கருத்துகளைத் தெரிவிப்பார்கள்'' என்றார் காட்டமாக.

Also Read: நீட் தேர்வு: நடிகர் சூர்யா அறிக்கை.. `நீதிமன்ற அவமதிப்பு’ என தலைமை நீதிபதிக்கு கடிதம்

இந்தநிலையில் ஓய்வு பெற்ற நீதிபதிகளான கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, சுதந்திரம், அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் கூட்டாக தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில், நடிகர் சூர்யாவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்’ என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் 4 மாணவர்கள் மரணம் தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்களைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளதை போல எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்றும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன்,

''சூர்யாவின் கடிதத்தில் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் எந்தக் கருத்தும் இல்லை. அவர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். சமூக அக்கறையோடு தன் கருத்துகளை முன்வைக்கிறார் அவ்வளவுதான். இதில் எந்தத் தவறும் இல்லை. சூர்யாவின் கருத்தை சமூக வலைத்தளங்களில் நான் உள்பட ஆயிரக்கணக்கானோர் தங்களின் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். அனைவரும் நீதிமன்றத்தை அவமதித்து விட்டார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியுமா?

அரி பரந்தாமன்

சூர்யா, நீதிமன்றம் என பொதுவாகக் குறிப்பிட்டாலும் அவர் உச்ச நீதிமன்றத்தைத்தான் குறிப்பிடுகிறார். நீட் தேர்வை எழுத உத்தரவிடும் உச்சநீதிமன்றம், ஆன்லைனில்தான் நடக்கிறது. வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்கு வரவே பயப்படுகின்றனர். ஆனால், மாணவர்கள் நேரடியாகச் சென்று தேர்வெழுத வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிடுகின்றனர். உலகளவில், நம் நாட்டில்தான் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்தநேரத்தில் இப்படியொரு தேர்வு அவசியம்தானா. அண்ணா யுனிவர்சிட்டியின் தேர்வுகள் எல்லாம் ஆன்லைனில்தானே நடக்கிறது?

தேர்வெழுதச் செல்லுமிடத்தில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? அவர்கள் மூலம் அவர்களின் குடும்பத்தில் உள்ள வயது மூத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது... இதைத்தான் சூர்யா கேள்வி கேட்டுள்ளார். அதில் எந்தத் தவறும் இல்லை. அதைக்கூட தெரிவிக்கக் கூடாது என்றால் என்ன ஜனநாயகம் இருக்கிறது இந்த நாட்டில்'' என்றார் அவர்.

''நடிகர் சூர்யா தன் பட ப்ரமோஷனுக்காகத்தான் இதுபோன்ற கருத்துகளை வெளியிடுகிறாரா?'' இயக்குநர் பாரதிராஜாவிடம் பேசினோம்,

''சூர்யா மிகவும் நல்ல பொறுப்புள்ள பையன். அறிவுஜீவி. அறக்கட்டளை நடத்தி வருபவர். சமூகத்தின் மீது அக்கறை உள்ள பையன். நடிகன் என்பதைத்தாண்டி இவ்வளவு குவாலிட்டி அவரிடம் இருக்கிறது. மக்களுக்கு அது தெரியும்'' என்றார் அவர்.



source https://www.vikatan.com/government-and-politics/policies/actor-suriyas-statement-on-neet-ignites-new-debate

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக