Ad

சனி, 12 ஆகஸ்ட், 2023

The Hunt for Veerappan: "டிசிஎஃப் ஶ்ரீனிவாஸ் வீரப்பனை நல்வழிப்படுத்தவே நினைத்தார்!" - சிவசுப்ரமணியன்

'வீரப்பனை என்கவுண்டர் செய்தது உண்மைதானா? அப்படியென்றால், இறந்த வீரப்பனின் மீசை மழிக்கப்பட்டிருந்தது எப்படி? வீரப்பன், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபகாரன் பெயரில்தான் ஏமாற்றப்பட்டு, போலீஸின் வலையில் சிக்கினாரா? இப்படி எக்கச்சக்கமான கேள்விகளை எழுப்பியிருக்கிறது, நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ள ‘தி ஹண்ட் ஃபார் வீரப்பன்' ஆவணப்படம்.

மேலும், வீரப்பன் குறித்த மர்மங்களையும் ரகசியங்களையும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தையும் தூண்டிவிட்டிருக்கிறது. யார் அந்த வீரப்பன்? தமிழக போலீஸுக்கே தண்ணி காட்டிக்கொண்டிருக்கும் வீரப்பன் எப்படி இருப்பார்? அவரது உருவம் எப்படி இருக்கும்? என்று மிரண்டுபோய் பார்த்துக்கொண்டிருந்த சூழலில், தமிழகத்தில் முதன்முதலில் வீரப்பன் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டவர் புகைப்பட பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியன். முதன்முதலில் வீரப்பன் பேட்டியையும் எடுத்த பெருமை சிவசுப்பிரமணியனையே சேரும். 'தி ஹண்ட் ஃபார் வீரப்பன்' ஆவணப்படத்தில், சிவசுப்பிரமணியனும் தோன்றி வீரப்பனை ஆவணப்படுத்தியுள்ள நிலையில், அவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தேன்..

வீரப்பனுடன் சிவசுப்பிரமணியன்

"தி ஹண்ட் ஃபார் வீரப்பன் ஆவணப்படம் எப்படி இருக்கு?"

"வீரப்பன் ஒரு சமூக குற்றவாளி. அவரை தனிமனித குற்றவாளியாக பார்க்கமுடியாது. சமூகம்தான் அவரை குற்றவாளியாகவே மாற்றியது. அவர் எதற்காக, காட்டுக்குச் சென்றார்? எதற்காக யானை வேட்டைக்கு மாறினார்? எதற்காக காவல்துறையினரை கொன்றார் என்பதற்கான கேள்விகளும் பதிலும் இந்த ஆவணப்படத்தில் கொண்டுவரவில்லை என்பது பெரிய பின்னடைவு. அதேபோல, ஆவணப்படத்தில் பேசும் காவல்துறை அதிகாரி செந்தாமரைக்கண்ணன் 'நான்தான் முகிலன் போர்வையில் வீரப்பனிடம் சென்றேன்' என்கிறார். அவர், சொல்வது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியாது. காவல்துறையில் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் மாறுவேடத்தில் போய் நடிப்பது சாத்தியப்படாது. பத்து வருடம் பணிபுரிந்துவிட்டாலே உடற்கட்டு, தோற்றம், தோரணை எல்லாமே மாறிவிடும். அந்த சின்ன விஷயத்தைக்கூட யோசிக்காமல், செந்தாமரைக்கண்ணன் நான்தான் போனேன் என்று சொல்வது வீரப்பன் மரணத்தை இன்னும் சந்தேகிக்க வைக்கிறது."

தி ஹண்ட் ஃபார் வீரப்பன்

"வீரப்பனுடனான சந்திப்பு எப்படி நிகழ்ந்தது? புகைப்படம் எடுத்த தருணம் குறித்து?"

"எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும், அரசியல்வாதியாக இருந்தாலும், சமூகத்தால் ஒதுக்கப்பட்ட கொலையாளியாக இருந்தாலும் ஏதாவதொரு காலத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்க விரும்புவார்கள். அப்படித்தான், வீரப்பன் என்னை சந்தித்தார். அப்போது, நான் ஃப்ரிலான்ஸ் புகைப்பட பத்திரிகையாளராக பணியாற்றிக்கொண்டிருந்தேன். வீரப்பனை சந்தித்துப் பேட்டி எடுக்கவேண்டும் என்று கொளத்தூர் மணியிடம் விருப்பத்தை தெரிவித்தேன். அவரும் அதிலுள்ள சவால்களை எல்லாம் சொல்லிவிட்டு, ஐந்தாறு மாதங்கள் கழித்து வீரப்பனை சந்திக்க வைத்தார். வீரப்பனுடன் நான்கு நாட்கள் முழுமையாக இருந்தேன். அவரது பேச்சை மொத்தம் ஆறு மணிநேரம் ரெக்கார்ட் செய்தேன். போட்டோவும் எடுத்தேன். வீரப்பனும் நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தார். இந்தியாவில் முதன்முதலாக வீரப்பனை ஊடகத்திலிருந்து பேட்டியும் போட்டோவும் எடுத்தது நான்தான். அதற்குமுன்பாக, 1984-ஆம் ஆண்டு பெங்களூர் போலீஸ் வீரப்பனை கைது செய்து வைத்திருந்தபோது, ஒரேயொரு போட்டோவை எடுத்திருந்தார்கள்."

வீரப்பன்

"டிசிஎஃப் ஶ்ரீனிவாஸ் கொலைக்குப்பிறகு, வீரப்பன் வேறொரு பாதைக்குச் சென்றதாக 'தி ஹண்ட் ஃபார் வீரப்பன்' ஆவணப்படத்தில் காட்டப்பட்டுள்ளதே... உங்கள் பார்வையில் டிசிஎஃப் ஶ்ரீனிவாஸ் எப்படிப்பட்டவர்?"

"டிசிஎஃப் ஶ்ரீனிவாஸ் வீரப்பன் குடும்பத்தினரை, தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பது உண்மைதான். ஆனால், அவரது நோக்கம் வீரப்பனையும் அவரது குடும்பத்தினரையும் நல்வழிப்படுத்துவதிலேயே இருந்தது. வீரப்பன் தங்கை மாரியம்மாள் வறுமையில் வாடியபோது, வீரப்பன் காட்டுக்குள் இருந்தார். வீரப்பன் அண்ணன் மாதையனும் தம்பி அர்ஜுனனும் சிறையில் இருந்தார்கள். மாரியம்மாளுக்கு வேலை கொடுக்கவும் உதவவும் யாரும் முன்வரவில்லை. அனைவராலும் கைவிடபட்ட நிலையில்தான், டிசிஎஃப் ஶ்ரீனிவாஸ் மாரியம்மாளுக்கு உதவினார். ஒருகட்டத்தில், காவல்துறையின் நெருக்கடியினாலும் சில சூழ்நிலைகளாலும் மாரியம்மாள் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். ஶ்ரீனிவாஸ், தனது தங்கைக்கும் குடும்பத்திற்கும் உதவியதை வீரப்பன் ட்ராமா என்று தவறாக புரிந்துகொண்டார். ஶ்ரீனிவாஸைக் கொலையும் செய்தார். அவரது கொலைக்கு முத்துலட்சுமியும் வீரப்பன் தம்பி அர்ஜுனனும் ஒருவகையில் காரணமானார்கள். ஶ்ரீனிவாஸ் தங்களுக்குச் செய்த உதவிகளை, இவர்கள் வீரப்பனிடம் சொல்லவே இல்லை.

ஶ்ரீனிவாஸ் ஒரு நல்ல அதிகாரி. வீரப்பன் கூட்டாளிகள் 22 பேர் சரணடைந்தபிறகு, அவர்களை நீதிமன்றத்துக்கு அனுப்பாமல், தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். வீரப்பன் சரணடைந்தால், அந்த 22 பேரையும் விடுவிக்கலாம் என்று நினைத்திருந்தார். இதனால், மேலதிகாரிகளின் எதிர்ப்பையும் சம்பாதித்தார். சிக்கல்களும் வந்தன. நிறைய காயப்பட்டுத்தான் வீரப்பன் குடும்பத்திற்கும் அவரது கூட்டாளிகளுக்கும் உதவிகளைச் செய்தார்.

டி.சி.எஃப் ஶ்ரீனிவாஸ்

முக்கியமாக, வீரப்பன் மனைவி முத்துலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது, வழக்கறிஞரும், பென்னாகரம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அப்புனு கவுண்டர் வீட்டில்தான், தங்கவைக்கப்பட்டார். அப்போது, டிசிஎஃப் ஶ்ரீனிவாஸ்தான் வீரப்பன் மனைவிக்கு பல்வேறு உதவிகளை செய்துவந்தார். 'நான் இதுவரைக்கும் பார்த்த அதிகாரிகளில் இவர் நல்ல அதிகாரி. இவரைப்போல வேறு யாரையும் பார்த்ததில்லை. டிசிஎஃப் ஶ்ரீனிவாஸ் வீரப்பனை நல்வழிப்படுத்ததான் நினைத்தார்' என்று அப்புனு கவுண்டரே, என்னிடம் பாராட்டினார்.

முத்துலட்சுமிக்கு முதல் குழந்தை பிறந்தபோது, வீரப்பன் உறவினர்கள் யாருமே பார்க்கவரவில்லை. ஶ்ரீனிவாஸ்தான் வீரப்பன் உறவினர்களையும், அவரது மாமனார் வீட்டினரையும் வரவைத்து குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவையே எடுத்தார். துணிமணி செலவு, சாப்பாட்டு செலவு என அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டதோடு வீரப்பன் மகளுக்கு வித்யாராணி என்ற பெயரையும் ஶ்ரீனிவாஸ்தான் வைத்தார். ஆனால், இதனை வீரப்பன் ட்ராமா என்று நினைத்துக்கொண்டார்.

உண்மையில் ஶ்ரீனிவாஸ் ட்ராமா செய்யவில்லை. அவர், முன்பு பணிபுரிந்த இடங்களிலும் அங்குள்ள ஏழை மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்துள்ளார். செங்கப்பாடி கிராமத்திற்கு முதன்முறையாக, வனத்துறை அமைச்சரை வரவைத்ததோடு கிராம மக்கள் மாற்றுத்தொழில் செய்யவும் ஏற்பாடு செய்தார். அம்மக்களின் குழந்தைகள் படிப்பதற்கான வசதிகளையும் செய்துகொடுத்தார். எனக்கு தெரிந்த வகையில் ஶ்ரீனிவாஸ் உள்நோக்கத்தோடு செயல்படவில்லை என்றுதான் சொல்வேன்."

சிவசுப்ரமணியன் பேட்டியை முழுமையாகக் காண:

The Hunt for Veerappan|DCF Srinivas வீரப்பனை நல்வழிப்படுத்தவே நினைச்சார்| Journalist Sivasubramanian



source https://cinema.vikatan.com/streaming/journalist-sivasubramanian-interview

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக