Ad

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

Doctor Vikatan: பால் குடிக்க மறுக்கும் குழந்தை... தினமும் சீஸ் கொடுப்பது சரியானதா?

Doctor Vikatan: என் 8 வயதுக் குழந்தைக்கு பால் கொடுப்பது பெரிய போராட்டமாக இருக்கிறது. பால், தயிர் என எதுவும் அவனுக்குப் பிடிப்பதில்லை. சீஸ் மட்டும்தான் சாப்பிடுகிறான். தினமும் சீஸ் கொடுக்கலாமா... எவ்வளவு கொடுக்கலாம்? பால் குடிக்க மறுப்பதால் பிரச்னை வராதா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

குழந்தைகளுக்கு சீஸ் கொடுப்பதில் தவறில்லை. அதில் மிகக் குறைந்த அளவே புரதமும் கால்சியமும் இருக்கிறது. சீஸில் கொழுப்பும் உப்புச்சத்தும் அதிகமிருக்கும் என்பதால் அளவோடு கொடுக்கப்பட வேண்டும். எவ்வளவு கொடுக்கிறீர்கள் என்பதைப் போலவே அந்த சீஸின் தரமும் கவனிக்கப்பட வேண்டும். தரமான சீஸா, காலாவதி ஆகாமல் இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள்.

புரதத் தேவை என்று வரும்போது பாலுக்குத்தான் முதலிடம். ஆனால் பெரும்பாலான குழந்தைகள் பால் குடிக்க அடம் பிடிக்கிறார்கள். எனவே அவர்களுக்கு பாலுக்கு மாற்றாக மில்க் ஷேக் கொடுக்கலாம். பனீர் கொடுக்கலாம். சப்பாத்தி, தோசை போன்றவற்றில் பனீர் சேர்த்துக் கொடுக்கலாம். பிரெட் ரோஸ்ட் உடன் பனீர் சேர்த்துக் கொடுக்கலாம். சாண்ட்விச் போல கொடுக்கலாம். வெறும் பாலாகக் குடிக்க அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு அதில் ஏலக்காய்த்தூள், நட்ஸ் போன்றவற்றைச் சேர்த்துக் கொடுத்துப் பாருங்கள். சுவையில் வேறுபாடு இருக்கும் என்பதால் இதை குழந்தைகள் விரும்பிக் குடிப்பார்கள்.

பால்

பாலுக்கு மாற்றாக சோயா பால் சேர்த்த பானங்கள் கொடுக்கலாம். டோஃபு எனப்படும் சோயா பனீர், பட்டாணிப் புரதம் போன்றவற்றையும் கொடுக்கலாம். சில குழந்தைகள் பால் குடிக்க மாட்டார்கள். ஆனால் தயிர் சாப்பிடுவார்கள். அவர்களுக்கு யோகர்ட், தயிர் போன்றவற்றைப் பழக்கலாம். இந்த வயதில் உங்கள் குழந்தையின் எடைக்கேற்ப புரதச்சத்து கொடுக்கப்பட வேண்டும். அது மேற்குறிப்பிட்ட எல்லா உணவுகளிலிருந்தும் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ளவும். உங்கள் குழந்தையின் உயரம்,எடை, தினசரி நீங்கள் கொடுக்கும் உணவுகள் போன்றவற்றை வைத்துதான் சீஸ் அளவு முடிவு செய்யப்பட வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/kids/doctor-vikatan-a-child-who-refuses-to-drink-milk-is-it-right-to-give-chees

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக