Ad

புதன், 23 ஆகஸ்ட், 2023

சந்திரயான் - 3: விக்ரம் லேண்டரை அடுத்து பிரக்யான் ரோவர் நிலவில் இறங்கியது; இது என்ன செய்யும்?

இன்று 06:04 மணிக்கு நிலவைத் தொட்டது நம் உருவாக்கமான சந்திரயானின் விக்ரம் லேண்டர்.

இதன் மூலம் நிலவின் தென் துருவத்தைத் தொட்ட முதல் நாடு, நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கும் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது. இதை இந்தியா மட்டுமல்லாமல் உலகமே கொண்டாடி வருகிறது. உலகின் பல்வேறு தலைவர்கள் இந்தியாவிற்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து அடுத்தப் பெரும் சவாலாக இருந்தது பிரக்யான் ரோவர் நிலவில் இறங்குவதுதான்.

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய நான்கு மணி நேரம் கழித்து, அதன் ஒரு பக்கக் கதவு திறக்கும். அந்தக் கதவே சாய்மானப் பாதையாக மாறிவிடும். அதன் வழியே 'பிரக்யான்' என்று பெயரிடப்பட்ட இந்த ரோவர் வாகனம் வெளியில் வரும்.

ரோவர் 26 கிலோ எடையுள்ளது. ஒரு நொடிக்கு ஒரு சென்டிமீட்டர் தூரம் என்ற வேகத்தில் இது அங்கிருந்து நகர்ந்து செல்லும். இதில் பொருத்தப்பட்டுள்ள நேவிகேஷன் கேமராக்கள் பாதையை ஆராய்ந்து, அதன் பயணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும்.

இதன் ஆறு சக்கரங்களிலும் இந்திய தேசியக்கொடியும் இஸ்ரோவின் லோகோவும் பதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த ரோவர் பயணிக்கும் பாதை முழுக்க இந்திய மூவண்ணக் கொடியின் அச்சும், இஸ்ரோ லோகோவின் அச்சும் நிலவின் தரைப்பரப்பில் பதியும். நிலவை இந்தியா வசப்படுத்தியதற்கு அழியா சாட்சிகளாக அவை இருக்கும்.

விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகிய இரண்டிலும் ஐந்து ஆராய்ச்சிக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் ரோவர் வாகனம், தான் கண்டறியும் தகவல்களை லேண்டருக்கு மட்டுமே அனுப்ப முடியும். ஆனால், லேண்டர் நேரடியாக இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ள முடியும். ஏற்கெனவே அனுப்பிய சந்திரயான் - 2 தோல்வியில் முடிந்தாலும், அதன் ஒரு பகுதியான ஆர்பிட்டர் இன்னமும் வெற்றிகரமாக நிலவைச் சுற்றிவந்து ஆராய்ச்சிகள் செய்கிறது. அந்த ஆர்பிட்டரும் இப்போது லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டுள்ளது.

இந்திய தேசியக்கொடி பொறித்த பிரக்யான் ரோவரின் சக்கரங்கள்

இந்த லேண்டர், ரோவர் இரண்டுமே சூரியசக்தி மின்சாரத்தில் இயங்குகின்றன. நிலவின் தென்துருவத்துக்கு எப்போதும் சூரிய வெளிச்சம் போவதில்லை. அதனால் அந்தப் பகுதி நிரந்தரமாக இருட்டில் இருக்கும். இதைத் தாக்குப் பிடித்து, நிலவின் ஒரு நாள் காலம் - அதாவது பூமிக் கணக்கில் 14 நாள்கள் அங்கு ஆராய்ச்சி செய்வது இப்போது இலக்கு. அங்கு வெப்பநிலையும் -230 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருப்பதால், அந்த இடத்தில் எதுவுமே உறைந்து போகும் ஆபத்து உண்டு.

இந்தச் சவாலைத் தாக்குப் பிடித்து இன்னொரு நிலவு நாள் (14 நாள்கள்) வரையில் ரோவர் தன் ஆராய்ச்சியைச் செய்யவுள்ளது.


source https://www.vikatan.com/science/astronomy/chandrayaan-3-pragyaan-rover-lands-on-moon-after-vikram-lander

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக