Ad

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

சந்திரயான் 3: `நிலவைக் கொண்டு வா!' - நிகழவிருக்கும் சாதனையும்; கிடைக்கவிருக்கும் பயன்களும்!

நிலவின் பரப்புக்கு 30 கி.மீ மேலே இருக்கும் சந்திரயான் - 3 விண்கலத்தின் லேண்டர், தன் பயணத்தின் க்ளைமேக்ஸை நெருங்குகிறது. நிலவைத் தொடுவதற்காக அது நொடிக்கு 1.68 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க இருக்கிறது.

நிலவை நெருங்கும்போது அதன் வேகம் பெருமளவு குறைக்கப்படும். நிலவின் ஈர்ப்பு விசை அதை இழுக்கும் என்பதால், வேகத்தைக் குறைத்தால்தான் அது மென்மையாக நிலவில் இறங்கி நிற்கும். இந்த 15 நிமிடப் பயணம் மிக முக்கியமானது, சிக்கலானதும் கூட!

''லேண்டரில் இருக்கும் பல கருவிகள் பழுதடைந்தாலும் அது பத்திரமாக தரையிறங்கும் அளவுக்கு இம்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் இன்ஜினே பழுதானாலும், அது பத்திரமாக இறங்கி நிற்கும்'' என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்.

ரஷ்யா அவசரமாக அனுப்பிய லூனா 25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கியிருக்கும் நிலையில், இன்று உலகின் கண்கள் இந்தியாவின் சந்திரயான் - 3 விண்கலத்தை உற்று நோக்குகின்றன. இந்தியா இந்த விஷயத்தில் அவசரப்படவில்லை. நிதானமாக, ஆனால் உறுதியாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்திருக்கிறது.

சந்திரயான் 3

ஜூலை 14-ம் தேதி ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து கிளம்பிய சந்திரயான் - 3 வெற்றிகரமாக ஒவ்வொரு கட்டத்தையும் கடந்தது. விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகப் பிரிந்து நிலவை நோக்கி பயணம் செய்தது. ஆகஸ்ட் 23-ம் தேதி அது நிலவைத் தொட்டதும், விண்வெளி வரலாற்றில் ஒரு புதிய சரித்திரத்தை இந்தியா எழுதும். அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை அடுத்து நிலவில் விண்கலத்தைத் தரையிறக்கும் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். அது மட்டுமில்லை, இதுவரை யாரும் ஆராய்ந்து பார்க்காத நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் முதல் நாடு என்ற பெருமையையும் இது பெறும்.

வழக்கமாக ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தினால், அதைக் குறிப்பிட்ட பாதையில் நிலைநிறுத்திய பிறகு இஸ்ரோவுக்கு அதிக வேலைகள் இருக்காது. ஆனால், சந்திரயான் - 3 திட்டம் அப்படி இல்லை. அது நிலவைத் தொட்டபிறகு எல்லோருக்கும் கடுமையான வேலைகள் வந்துவிடும்.

1750 கிலோ எடை கொண்ட விக்ரம் லேண்டர் தன் நான்கு கால்களையும் அழுத்தமாகப் பதித்து நிலவின் பரப்பில் இறங்கி நின்ற நிமிடத்திலிருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் பரபரப்பாகி விடுவார்கள்.

கிட்டத்தட்ட சந்திரயான் - 2 இறங்குவதாக இருந்த அதே இடத்தில்தான் இதுவும் இறங்குகிறது. ஏதேனும் ஆபத்துகள் இருந்தால் அவற்றைக் கண்டறிந்து தவிர்க்கும் தொழில்நுட்பம் இருப்பதாலும், அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாலும், சந்திரயான் -3 வெற்றிகரமாகத் தரையிறங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

விக்ரம் லேண்டர்

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய நான்கு மணி நேரம் கழித்து, அதன் ஒரு பக்கக் கதவு திறக்கும். அந்தக் கதவே சாய்மானப் பாதையாக மாறிவிடும். அதன் வழியே பிரக்யான் என்று பெயரிடப்பட்ட ரோவர் வாகனம் வெளியில் வரும். இந்த ரோவர் 26 கிலோ எடையுள்ளது. ஒரு நொடிக்கு ஒரு சென்டிமீட்டர் தூரம் என்ற வேகத்தில் இது அங்கிருந்து நகர்ந்து செல்லும். இதில் பொருத்தப்பட்டுள்ள நேவிகேஷன் கேமராக்கள் பாதையை ஆராய்ந்து, இதன் பயணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும்.

இந்த பிரக்யான் ரோவர் ஆறு சக்கரங்கள் கொண்டது. இதன் சக்கரங்களில் இந்திய தேசியக்கொடியும் இஸ்ரோவின் லோகோவும் பதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த ரோவர் பயணிக்கும் பாதை முழுக்க இந்திய மூவண்ணக் கொடியின் அச்சும், இஸ்ரோ லோகோவின் அச்சும் நிலவின் தரைப்பரப்பில் பதியும். நிலவை இந்தியா வசப்படுத்தியதற்கு அழியா சாட்சிகளாக அவை இருக்கும்.

விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகிய இரண்டிலும் ஐந்து ஆராய்ச்சிக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் ரோவர் வாகனம், தான் கண்டறியும் தகவல்களை லேண்டருக்கு மட்டுமே அனுப்ப முடியும். ஆனால், லேண்டர் நேரடியாக இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ள முடியும். ஏற்கெனவே அனுப்பிய சந்திரயான் - 2 தோல்வியில் முடிந்தாலும், அதன் ஒரு பகுதியான ஆர்பிட்டர் இன்னமும் வெற்றிகரமாக நிலவைச் சுற்றிவந்து ஆராய்ச்சிகள் செய்கிறது. அந்த ஆர்பிட்டரும் இப்போது லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டுள்ளது.

ரோவர் வாகனம் லேண்டரிலிருந்து விலகி எவ்வளவு தூரம் வரை செல்ல முடியும் என்று இப்போது எதையும் திட்டமிடவில்லை. நிலவின் தரைப்பகுதி எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே அதன் பயண தூரம் இருக்கும்.

வெளியான புகைப்படங்கள்

இந்த லேண்டர், ரோவர் இரண்டுமே சூரியசக்தி மின்சாரத்தில் இயங்குகின்றன. நிலவின் தென்துருவத்துக்கு எப்போதும் சூரிய வெளிச்சம் போவதில்லை. அதனால் அந்தப் பகுதி நிரந்தரமாக இருட்டில் இருக்கும். இதைத் தாக்குப் பிடித்து, நிலவின் ஒரு நாள் காலம் - அதாவது பூமிக் கணக்கில் 14 நாட்கள் அங்கு ஆராய்ச்சி செய்வது இப்போது இலக்கு. அங்கு வெப்பநிலையும் -230 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருப்பதால், அந்த இடத்தில் எதுவுமே உறைந்து போகும் ஆபத்து உண்டு. ''இந்த சவாலைத் தாக்குப் பிடித்து இன்னொரு நிலவு நாள் வரையில் அவை ஆராய்ச்சி செய்ய வாய்ப்புகள் உள்ளன'' என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்.

ஏற்கெனவே நிலவைச் சுற்றிவந்த சில விண்கலங்கள், நிலவின் தென் துருவத்தில் சுவாரசியமான பல விஷயங்கள் இருப்பதாகத் தகவல் தருகின்றன. நிலவின் பரப்பில் இருக்கும் வெப்பநிலை, அங்கு இதற்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கங்கள், நிலவில் உள்ள மண்ணின் தன்மை, பாறைகளின் இயல்பு, அவற்றின் வேதியியல் கூறுகள் போன்ற தகவல்களை லேண்டரும் ரோவரும் சேகரிக்கும்.

இதன் பயன்கள் என்ன?

நிலவை நெருங்க முடியும், அதில் நம்மால் ஒரு லேண்டரை பத்திரமாகத் தரையிறக்க முடியும் என்ற விஷயங்களே மகத்தான சாதனைகள்தான். அதைத் தாண்டி நிலவின் தென் துருவத்தில் உறைந்திருக்கும் பனியில் தண்ணீர் இருப்பதன் சாத்தியங்களை உறுதி செய்ய முடியும். அதிலிருந்து ஹைட்ரஜனைத் தனியாகப் பிரிக்க முடிந்தால், புதிய எரிபொருள் நமக்குக் கிடைக்கும். அடுத்து செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் முயற்சியை நாம் நிலவிலிருந்தே செய்யலாம். பூமியின் பரப்பிலிருந்து செய்யமுடியாத பல ஆராய்ச்சிகளையும் அங்கிருந்து செய்யமுடியும்.

சந்திரயான் - 3 நிலவை நம்மிடம் நெருக்கமாகக் கொண்டுவரட்டும்!



source https://www.vikatan.com/science/astronomy/chandrayaan-3-countdown-to-soft-landing-on-moons-south-pole-begins

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக