Ad

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

அதிமுக மாநாடு நடக்கும் நாளில் நீட் போராட்டத்தை அறிவித்துள்ள திமுக - காரணம் பதற்றமா... பின்னணி என்ன?!

ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரையில் அ.தி.மு.க பொன்விழா மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அதேநாளில் அனைத்து மாவட்ட தலைநகரிலும் நீட் தேர்வு விவகாரம் மற்றும் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என தி.மு.க அறிவித்திருப்பதே தமிழக அரசியலின் ஹாட் டாப்பிக்.

எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராகத் தேர்வான பிறகு அ.தி.மு.க நடத்தும் முதல் மாநாடு இதுவே. மாநாடு குறித்தான அறிவிப்பைக் கடந்த ஏப்ரல் மாதமே வெளியிட்டு பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார் எடப்பாடி. மறுபக்கம் நீட் விலக்கு மசோதாவுக்கு விலக்கு அளிக்க முடியாதென ஆளுநர் பேசியதாலும், நீட் தேர்வில் தேர்ச்சியடைந்தும் மருத்துவ சீட் கிடைக்காத நிலையில் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் எனும் மாணவனும் அவரது தந்தையும் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

நீட் - ஆளுநர் ஆர்.என்.ரவி

இதனையடுத்து நீட் விலக்கில் மத்திய அரசும் ஆளுநரும் முட்டுக்கட்டை போடுவதாகக் கூறி ஆகஸ்ட் 20-ம் தேதி தி.மு.க சார்பில் மாவட்டம்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென ஆகஸ்ட் 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் மாநாடு நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள இடம் மதுரை விமான நிலையத்துக்கு அருகில் உள்ளது. மாநாட்டில் பங்கேற்கும் கட்சியினர் பட்டாசு வெடிப்பதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடும் என்பதால் மாநாடு நடத்திடத் தடை விதிக்க வேண்டுமென காரைக்குடியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழக்குத் தொடுத்திருக்கிறார். அதனை நீதிமன்றமும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிமுக மாநாடு

லட்சக் கணக்கில் தொண்டர்களைத் திரட்டி அ.தி.மு.க நடத்தும் மாநாட்டின் மீதான கவனத்தைத் திசைதிருப்பவே உண்ணாவிரத அஸ்திரத்தைக் கையிலெடுத்திருக்கிறது தி.மு.க என அதிமுக வட்டாரங்கள் விமர்சித்து வரும் நிலையில் அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் சசிரேகாவிடம் பேசினோம், ``அ.தி.மு.க.வின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெறும் எனப் பல மாதங்களுக்கு முன்பே நாங்கள் அறிவித்திவிட்டோம்.

தமிழ்நாடு முழுவதிலுமிருந்து அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் லட்சக் கணக்கில் பங்கேற்க ஆயத்தமாகி வருவதைக் கண்டு திமுக அஞ்சுகிறது என்பதற்கு இதைவிட நல்ல உதாரணம் இருக்க முடியாது. அதிமுக மாநாடு மக்கள் மத்தியில் கவனம்பெற்று பெற்று வெற்றியடைந்துவிடும் என்ற பதற்றமே காரணம். அதிலும் நீட் தேர்வு தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்களாம். ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டதே. இதுவரை தூங்கிக் கொண்டிருந்தார்களா.

சசிரேகா

இப்போதுதான் நீட் தேர்வு நடந்து வருகிறதெனத் தெரிய வந்ததா இவர்களுக்கு. ஆட்சிக்கு வருவதற்கு முன் எங்களுக்கு ரகசியம் தெரியும். நாங்கள் வந்தால் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைத்துவிடும் என ஏக வசனம் பேசிவிட்டு, இப்போது ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என மக்களை ஏமாற்றுகிறார்கள்” எனச் சாடிய அவர், ``மாநாட்டுக்குத் தடைகோரிய வழக்கு பொறுத்தவரை அது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தி.மு.க-வின் தூண்டுதல் காரணமாகப் போடப்பட்டுள்ள வழக்குதான். அதனை உறுதியாக நீதிமன்றம் தள்ளுபடி செய்யும். மக்கள் எழுச்சியுடன் அதிமுக பொன்விழா மாநாடு சிறப்பாக நடப்பதை யாராலும் தடுக்க இயலாது” என்றார்.

இதுகுறித்து விளக்கம் கேட்க தி.மு.க பிரமுகர் அமுதரசனிடம் பேசினோம்... ``நீட் தேர்வில் விலக்கு கேட்டும், ஆளுநரின் திமிர் பேச்சைக் கண்டித்தும் திமுக சார்பில் இளைஞரணி, மருத்துவரணி மற்றும் மாணவரணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறோம். குறிப்பாக மாணவரணியினர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் கல்லூரி செல்வோர், பணிக்குச் செல்வோருக்கு எந்த இடையூறும் வராமல் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தத் தி.மு.க திட்டமிட்டுள்ளதே தவிர வேறெந்த காரணமுமில்லை. அ.தி.மு.கவினர் தாங்கள் நடத்தும் மாநாடு தோல்வியடையப்போவதால் இப்போதே காரணம் தேட ஆரம்பித்துவிட்டனர்.

அமுதரசன்

சொல்லப்போனால் நீட் தேர்வை தமிழகத்துக்குள் அனுமதித்ததே அதிமுக தான். மாநில உரிமையை மோடியிடம் அடமானம் வைத்த அதிமுக உரிமைக்காகப் போராடிவரும் திமுக-வை விமர்சிக்க என்ன அருகதை இருக்கிறது. நீதிமன்ற வழக்கு விவகாரத்தில் திமுக-வைக் குறை சொல்கிறார்களே... நீதிமன்றத்தை திமுக ஒன்றும் நடத்தவில்லையே. யாரோ ஒரு தனிநபர் தொடர்ந்த வழக்கை திமுக தொடர்ந்தது எனச் சொல்வது அர்த்தமற்றது. திமுக-வை விமர்சித்தால்தான் நம்மைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என எதற்கெடுத்தாலும் திமுக-வை இழுக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/governance/reason-behind-dmk-has-announced-the-neet-protest-on-august-20-where-admk-conference-takes-places

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக