Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

``தேர்தல் நேரத்தில் சோறு... பீரு.. 100 போதும் என நினைக்காதீர்கள்!" - விஜய பிரபாகரன் அட்வைஸ்

தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 வழங்க வேண்டும். தமிழகத்துக்கு வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். விளை நிலங்களை என்.எல்.சி அழிக்கக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தே.மு.தி.க சார்பில் அறிவிக்கப்பட்டது.

தேமுதிக ஆர்ப்பாட்டம்

அதன்படி சென்னை, ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார். பல்வேறு பகுதிகளில் சேர்த்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய விஜயபிரபாகரன், "தமிழகம் முழுவதும் கேப்டன் ஆணைக்கு இணங்க ஆளும் திமுக அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம்.

எத்தனையோ வாக்குறுதிகளை திமுக அரசு மக்களுக்காக கொடுத்திருந்தது. ஆனால் எதையாவது நிறைவேற்றி இருக்கிறார்களா?. மக்கள் சிந்திக்க வேண்டும். 2021-ம் ஆண்டில் வாக்கு சேகரிக்கும் பொழுது ரூ.1,000 அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவித்தார்கள். அன்று மட்டும் அனைத்து பெண்களின் வாக்கும் வேண்டும். ஆனால் இன்று தகுதி இருப்பவர்களுக்கு மட்டும் ரூ.1,000 வழங்கப்படும் என்றால் எந்தவிதத்தில் நியாயம்.

முதல்வர் ஸ்டாலின்

அனைவருக்கும் ரூ.1,000 கொடுப்போம் என பொய் சொன்னது மட்டும் இல்லாமல் மற்றொரு புறம் டாஸ்மாக் கடைகளை திறந்து வருகிறார்கள். ஆண்கள் சம்பாதிக்கும் பணத்தை கொண்டு டாஸ்மாக்கில் சென்று கொடுக்கிறார்கள். திமுக அரசு குடியை நிறுத்தியிருக்கிறதா?. என்எல்சி விவகாரத்தில் ஒன்று விவசாயிகளை பயிர் செய்ய விட்டிருக்க கூடாது. அல்லது அறுவடை முடிந்த பிறகு கொடுத்திருக்க வேண்டும். இன்று தேவை இல்லாத அரசியல் சர்ச்சையாகி யாருக்கும் பயன் இல்லாமல் இருக்கிறது. அடிப்படை அறிவு கூட இல்லாமல் அரசு செயல்படுகிறது.

மக்களை ஆளும் அரசுக்கு மட்டும் எந்த அனுபவத்தையும் பார்ப்பதில்லை. அவர்களிடம் கேள்வியும் கேட்பதில்லை. தேர்தல் நேரத்தில் சோறு.. பீரு.. 100 வந்தால் மட்டும் போதும் என நினைக்கிறீர்கள். ஒருநாள் சந்தோஷத்துக்கு அவர்களுடைய காலில் உங்களது 5 ஆண்டு வாழ்க்கையை சமர்ப்பணம் செய்கிறீர்கள். அவர்கள் ஏசி காரில் ஜாலியாக போகிறார்கள். எல்லாப் பக்கமும் சிலை திறந்து கொண்டிருக்கிறார்கள். போலி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

தேமுதிக ஆர்ப்பாட்டம்

அனைத்து மாவட்டங்களிலும் புகார் பெட்டி வைப்பதாக சொன்னார்கள். அதையும் செய்யவில்லை. புகார் பெட்டி வைத்தால் ஆளும் திமுக அரசு மீது மொத்த புகாரும் வந்து விழும் என்பதற்காகத் தான் வைக்கவில்லை. கர்நாடகாவில் திமுகவின் கூட்டணி அரசு தான் இருக்கிறது. அங்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து மட்டும் சொல்லிவிட்டு வந்திருக்கிறார். பத்திரிகையாளர்களையும் சந்திக்கவில்லை. போட்டோசூட் மட்டும் நடத்தியிருக்கிறார்கள். இதெற்கெல்லாம் எந்த பதிலும் இல்லை.

ஆனால் செந்தில் பாலாஜியை கைது செய்தால் மட்டும் மொத்த குடும்பமும் மருத்துவமனைக்கு ஓடும். ஓமத்தூரார் மருத்துவமனையில் இருந்தவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்றினார்கள். ஓமத்தூராரில் இருப்பது அரசு மருத்துவமனை தானே. சிகிச்சை சரியில்லை என செந்தில் பாலாஜியை மாற்றிய தேதியில் எத்தனை பொதுமக்கள் அங்கு இருந்திருப்பார்கள். அவர்களையும் காவேரிக்கு மாற்றியிருக்க வேண்டியது தானே. செந்தில்பாலாஜிக்கு மட்டும் உயிரு.. மத்தவங்களுக்கு வேறு ஏதோவா?. மக்கள் இதை உணர வேண்டும்" என்றார்.

செந்தில் பாலாஜி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், " செந்தி பாலாஜி மீது அமலாக்கத்துறை வேண்டும் என்று ரெய்டு செய்ய மாட்டார்கள். என்ன நடக்கிறது என மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அவருக்கு உடல்நிலை சரியில்லாத பொழுது மொத்த குடும்பமும் அங்கு செல்கிறது என்றால் சந்தேகம் வருகிறது. அவர் மாட்டினால் மொத்த திமுகவும் மிகப்பெரிய சர்ச்சைக்குள் மாட்டுவார்கள்" என்றார்.

நடிகர் ரஜினி குடிப்பழக்கம் இல்லாவிட்டால் இன்னும் மிகப்பெரிய உயர்த்தை தொட்டிருப்பேன் என கூறுகிறாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "பாதிக்கப்பட்டவர்கள் பேசுகிறார்கள். எனக்கு அந்த பழக்கம் இல்லை. அதுகுறித்து எனக்கு தெரியாது, தவறான விஷயம் தான்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/dmdk-protest-against-tamil-nadu-government

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக