Ad

புதன், 16 ஆகஸ்ட், 2023

ஸ்ரீவில்லிபுத்தூர்: அதிமுக நிர்வாகி `சப்ளை’ ; திமுக நிர்வாகி `விற்பனை’ - குட்கா வழக்கில் இருவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதிகளில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பான் மசாலா பொருள்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனை அதிகாரிகள் கண்டும் காணாததுபோல விட்டுவிடுகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, குட்கா விற்பனையை தடுக்கும்பொருட்டு போலீஸார் ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, குட்கா பான் மசாலா பொருள்களை காரில் மறைத்து எடுத்துவந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் அ.தி.மு.க.நிர்வாகி, குட்காவை விற்பனைக்கு வாங்கிய தி.மு‌.க. நிர்வாகி என இருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலமுருகன்-ஆனந்த்

இதுகுறித்து போலீஸிடம் பேசினோம். போலீஸார், ஸ்ரீவில்லிப்புத்தூர் முருகன் கோயில் சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த கார் ஒன்றை தடுத்துநிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்களை காரில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்துகையில் அவர், ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டியை சேர்ந்த ஆனந்த்(வயது 37), என்பதும் ஸ்ரீவில்லிபுத்தூர் அ.தி.மு.க. இளைஞரணி நிர்வாகியாக உள்ளார் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், "தேவையின் அடிப்படையில் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை காரில் கொண்டுவந்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள கடைகளுக்கு சரக்கு சப்ளை செய்துவந்தது தெரியவந்தது.

தொடர்ந்து, ஆனந்துடன் தொடர்பில் இருப்பவர்கள், அவரிடம் ரெகுலராக குட்கா பான் மசாலா வாங்கும் நபர்கள் குறித்த விசாரணையில், ஸ்ரீவில்லிப்புத்தூர் செக்கடி தெருவை சேர்ந்த தி.மு.க.நகர பொருளாளரான பாலமுருகன்(48) என்பவர் ஆனந்திடம் இருந்து மொத்தமாக குட்கா வாங்கியிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஆனந்தின் வாக்குமூலத்தின்படி, பாலமுருகனின் வீட்டிற்கு சென்ற போலீஸார் அங்கு சோதனை நடத்தினர்.

கைது

இந்த சோதனையில் ஒரு பிளாஸ்டிக் பையில் குட்கா பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆனந்த், பாலமுருகன் இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள 42 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருள்களையும், கார் மற்றும் விற்பனை பணம் ரூ.3,120-ம் போலீஸார் பறிமுதல் செய்தனர்.



source https://www.vikatan.com/crime/srivilliputhur-dmk-admk-executives-are-arrested-in-gutka-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக