Ad

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

நள்ளிரவில் தீ விபத்து; வெளியேறிய புகை... தூங்கிக்கொண்டிருந்த 3 சிறுமிகள் உட்பட நால்வர் பலி!

சென்னை அருகிலுள்ள மணலி எம்.எம்.டி.ஏ பகுதியில் உடையார்- செல்வி தம்பதி வசித்துவருகிறார்கள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன. தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றும் உடையாருக்கு, சமீபத்தில் விபத்து ஏற்பட்டு காலில் அடிப்பட்டிருக்கிறது. இதனால், அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

உயிரிழந்த குழந்தைகள் - தீ விபத்து

உடையாரை உடனிருந்து கவனித்துக்கொள்வதற்காக செல்வியும் மருத்துவமனைக்குச் சென்றிருந்திருக்கிறார். இதனால், வீட்டிலிருக்கும் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள உடையாரின் தாயார் சந்தான லட்சுமி ஊரிலிருந்து இங்கே வந்திருந்தார். சம்பவம் நடந்த இரவு, அவர்களின் உறவுக்காரரின் குழந்தையும் அந்த வீட்டிலேயே தூங்கியிருக்கிறது. அந்தப் பகுதியில் கொசுத்தொல்லை அதிகம் என்பதால், வீட்டிலிருந்த கொசு விரட்டும் லிக்விட் இயந்திரத்தை ஆன் செய்துவிட்டுத் தூங்கியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், வீட்டிலிருந்து அதிக அளவு புகை வருவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறார்கள். யாரும் திறக்காத நிலையில், வீட்டு ஜன்னல் வழியாகப் பார்த்தபோது படுக்கையிலேயே யாரும் அசைவில்லாமல் படுத்திருந்திருக்கிறார்கள். உடனடியாக அருகிலிருந்தவர்கள் சம்பவம் குறித்து தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மூன்று குழந்தைகள் உட்பட நான்கு பேரும் படுக்கையிலேயே உயிரிழந்திருந்தனர். இது குறித்து அந்தப் பகுதி போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகள் சோதனை - தீ விபத்து

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், அவர்களின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்திருக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில் வீட்டிலிருந்த கொசு விரட்டும் லிக்விட் இயந்திரம் தீ பற்றியதா அல்லது அங்கிருந்த டவர் பேன் தீ பற்றியதா என்று தெரியவில்லை. தடயவியல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர். குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/crime/including-3-girls-4-dead-in-a-fire-accident-at-chennai-police-investigation-goes-on

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக