Ad

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

`டிஐஜி மனைவியின் சித்திரவதை’ - ரயிலில் தற்கொலைக்கு முயன்ற பெண் காவலர் - இரு கால்களையும் இழந்த சோகம்

ஒடிசாவைச் சேர்ந்த பெண் ஹோம் கார்ட், ரயிலில் விழுந்து தற்கொலைக்கு முயன்றதில் இரண்டு கால்கள் துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒடிசா மாநிலத்தின் வட மத்திய ரேஞ்ச் டிஐஜி பிரிஜேஷ் குமார் ராய் வீட்டில் ஹோம் கார்டாக பணியாற்றுபவர் சவுரித்ரி சாஹு. "மூத்த டிஐஜி அதிகாரியின் மனைவி, எனது வேலையைச் சரியாகச் செய்யத் தவறினால், திட்டி, அடித்தது அவமானப்படுத்தினார்.

காவல்துறை

இது தொடர்பாக ஆளுநர் கணேஷி லால், முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் பல அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்" எனக் குற்றம்சாட்டியிருக்கிறார். இந்த நிலையில், அவர் நேற்று ரயிலில் விழுந்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சவுரித்ரி சாஹு தனது இரண்டு கால்களையும் இழந்துவிட்டார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.

இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக பேசிய டி.ஐ.ஜி பிரிஜேஷ் குமார் ராய், "அங்குல் மாவட்டத்தைச் சேர்ந்த சவுரித்ரி சாஹு என்ற பெண் ஹோம் கார்டுக்கு அவரின் குடும்பப் பிரச்னைகளால் தொந்தரவு இருந்தது. அதனால் அவர் மனநிலை சரியில்லாமல் இருந்தார். அவரை எனது மனைவி துன்புறுத்தவில்லை" எனக் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய ஒடிசாவின் ஹோம் கார்டு டி.ஜி சுதன்ஷு சாரங்கி, "பாதிக்கப்பட்ட பெண் ஆகஸ்ட் 4-ம் தேதி, டிஐஜி வீட்டுத் துணிகளைத் துவைக்க முடியாததால் அவரை வீட்டை விட்டு வெளியே தள்ளி அடித்ததாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

காவல்துறை

ஆனால் இதுகுறித்து காவல்துறையில் எந்தப் புகாரையும் அளிக்கவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்படும். தற்போது சவுரித்ரி சாஹு கட்டாக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய மருத்துவச் செலவை அரசே ஏற்கும். பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் அவருடன் பேசுவோம். அதன்பின், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

சவுரித்ரி சாஹுவின் மகள் சுசிஸ்மிதா செய்தியாளர்களிடம், "எனது தாயின் தற்கொலை முயற்சிக்குக் காரணம் குடும்பப் பிரச்னையல்ல. அதிகாரியின் மனைவியால் தமக்கு அளிக்கப்பட்ட சித்திரவதையால் எனது தாய் மனமுடைந்து புலம்புவார். மன அழுத்தத்தைச் சமாளிக்க முடியாமல், தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு இவ்வாறு செய்திருக்கிறார்" எனத் தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/crime/woman-home-guard-lost-of-her-legs-train-in-her-attempt-to-die-by-suicide

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக