Ad

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

I.N.D.I.A: `தொகுதி பங்கீடு, செப். 30-ல் இறுதி முடிவு!’ - மும்பை கூட்டமும் அரசியல் நகர்வுகளும்!

28 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது. இக்கூட்டத்திற்கு நேற்று பிற்பகல் வரை எதிர்க்கட்சி தலைவர்கள் வந்துகொண்டிருந்தனர். மாலையில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆரம்பக்கட்ட கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் இன்று(செப் 1) என்ன அம்சங்கள் குறித்து பேசலாம் என்பது குறித்தும், மத்திய அரசு திடீரென எந்த ஆலோசனையும் செய்யாமல் நாடாளுமன்றத்தின் அவசரக்கூட்டம் இம்மாதம் 5 நாட்கள் நடைபெறும் என்று அறிவித்து இருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி, சரத்பவார், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால், ஒமர் அப்துல்லா உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் இன்று நடைபெற இருக்கும் கூட்டத்தில் இந்தியா கூட்டணிக்கு அமைப்பாளர்/ ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பு குழுவை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தலைவர்கள் தெரிவித்தனர்.

நேற்றைய கூட்டத்தில், மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து வரும் 30-ம் தேதி இறுதி முடிவு எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதோடு கட்சிகளுக்கு இருக்கும் செல்வாக்கின் அடிப்படையில் தொகுதி பங்கீடு செய்வது என்று நேற்று முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இக்கூட்டம் குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறுகையில், ``இந்தியா கூட்டணிக்கு ஒரு அமைப்பாளர், ஒருங்கிணைப்பு குழு தேவை. இப்போது நடப்பது போல் ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கூடி பேசிக்கொண்டிருக்க முடியாது. ஒருங்கிணைப்பு குழு அடிக்கடி கூடி பேசினால் மிகவும் சிறப்பாக இருக்கும்” என்றார்.

இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்று கேட்டதற்கு, ``பிரதம வேட்பாளரை இப்போது அறிவிக்கவேண்டாம் என்று நினைக்கிறேன். தேர்தலுக்கு பிறகு முடிவு செய்துகொள்ளலாம்” என்றார். உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேயும் பிரதம வேட்பாளர் குறித்து பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

சிவசேனா(உத்தவ்) தலைவர்களில் ஒருவரான பிரியங்கா சதுர்வேதி அளித்த பேட்டியில், ``2024-ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலுக்கு பயனளிக்கும் வகையில் மும்பை கூட்டத்தில் யுக்தி வகுக்கப்படும். இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். இன்று புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது” என்றார்.

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் அளித்த பேட்டியில், ``நாட்டின் ஒற்றுமை, இறையாண்மையை வலுப்படுத்துவது அவசியம். வறுமை ஒழிப்பு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் நலன் பிரச்னைக்கு தீர்வு காண மோடி அரசு தவறிவிட்டது. எதிர்க்கட்சி தலைவர்களின் இந்தியா கூட்டணி கூட்டத்தில் குறைந்த பட்ச செயல் திட்டம் குறித்து விவாதிக்கப்படும். பா.ஜ.க-வுக்கு எதிராக பொது வேட்பாளரையும் நிறுத்துவோம்” என்றார்.

பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் அளித்த பேட்டியில், ``இந்தியா கூட்டணி நாட்டை பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் கூட்டாட்சி முறைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க.வெற்றி பெறாத மாநிலங்கள் துன்புறுத்தப்படுகின்றன. கூட்டணி என்பது எண்ணிக்கையை குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ அல்ல. நாட்டை பாதுகாக்க...” என்றார்.

சரத்பவார் மகள் சுப்ரியா சுலே, ``பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டத்திற்கு காரணமான நரேந்திர மோடி அரசின் கொள்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்வதில் இந்தியா கூட்டணி சவாலை எதிர் கொண்டுள்ளது” என்று தெரிவித்தார். இன்று பத்திரிகையாளர் சந்திப்பு, கூட்டணி தலைவர்கள் அறிமுக புகைப்படம் எடுத்தல், லோகோ வெளியிடுதல் போன்றவை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்றைய கூட்டத்தில் ஒருகிணைப்பாளர் அறிவிக்கப்படலாம் என்றும் அது பீகார் முதல்வர் நிதிஷ் குமாராக இருக்கலாம் என்றும் உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாக்கொண்டு இருக்கிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



source https://www.vikatan.com/government-and-politics/politics/seat-sharing-to-be-finalized-on-september-30-opposition-leaders-decide-in-mumbai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக