Ad

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

``என்னை பாஜக-வுடன் சேர்க்க முயற்சி; குடும்ப உறுப்பினரை சந்தித்தில் என்ன தவறு?” - சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவாரும் அவரின் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 8 பேரும் மகாராஷ்டிராவில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க கூட்டணி அரசில் கடந்த மாத தொடக்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். அஜித் பவார் பா.ஜ.க. பக்கம் சாய்ந்த விட்டபோதிலும் சரத் பவார் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரமாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால் அஜித் பவார் மூலம் சரத் பவாருக்கு பா.ஜ.க.நெருக்கடி கொடுத்து வருகிறது. சரத் பவாரை அஜித் பவார் புனேயில் உள்ள தொழிலதிபர் ஒருவர் இல்லத்தில் நேற்று முன் தினம் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள மகாராஷ்டிராவில் சரத் பவாரின் ஆதரவு அவசியம் என்று பா.ஜ.க.கருதுகிறது. இது குறித்து அஜித் பவார் சரத் பவாரிடம் எடுத்து கூறியதாக தெரிகிறது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவேண்டியதன் அவசியம் குறித்து அஜித் பவார் சரத் பவாரிடம் எடுத்துக்கூறினார். இதனால் சரத்பவார் பா.ஜ.க.கூட்டணியில் சேருவார் என்று செய்திகள் வெளியானது. இந்த சந்திப்பை தொடர்ந்து சரத் பவார் நேற்று சோலாப்பூர் சென்றார்.

அங்கு அவருக்கு கட்சி தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர். அங்குள்ள சங்கோலா என்ற இடத்தில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``சில நலன் விரும்பிகள் என்னை பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கொள்கை பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க வழிவகுக்காது. பா.ஜ.க.வின் கொள்கை எங்களோடு ஒத்துப்போகாது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவு பா.ஜ.க.வோடு சேர்ந்தாலும் எங்களது கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்காது. பா.ஜ.க அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. சாமானிய மக்கள் இதனை விரும்ப மாட்டார்கள். இதன் விளைவுகளை பின்னாள்களில் பார்ப்பார்கள்.

கட்சியின் தேசிய தலைவர் என்ற முறையில் நான் சொல்வது என்னவென்றால், தேசியவாத காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.வுடன் சேராது என்பதை தெளிவாக தெரிவித்துக்கொள்கிறேன். எங்களில் சிலர்(அஜித் பவார் தரப்பினர்) மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். எங்களது நிலைப்பாட்டில் எதாவது மாற்றம் ஏற்படுமா என்று சில நலன் விரும்பி எதிர்பார்க்கின்றனர். அதனால் அவர்கள் எங்களுடன் சுமூகமாக இருக்க முயற்சிக்கின்றனர்” என்றார்.

சரத் பவார் - அஜித் பவார்

அஜித் பவாரை புனேயில் ரகசியமாக சந்தித்து பேசியது குறித்து சரத் பவாரிடம் கேட்டதற்கு, ``ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அஜித் பவார் எனது சகோதரர் மகன். குடும்ப உறுப்பினர் என்ற முறையில் அவரை சந்தித்து பேசுவதில் என்ன தவறு இருக்கிறது. குடும்பத்தில் மூத்த உறுப்பினர் குடும்பத்தில் வேறு ஒருவரை சந்திப்பதாக இருந்தால் அதில் பிரச்னை இருக்கக்கூடாது. மக்கள் விரைவில் மகாவிகாஷ் அகாடியிடம் ஆட்சியை ஒப்படைப்பார்கள்.” என்றார்.

சோலாப்பூர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுடன் சரத்பவாரும் கலந்து கொண்டார்.

சரத் பவாரின் நெருங்கிய ஆதரவாளரான ஜெயந்த் பாட்டீல் இப்பிரச்னை குறித்து பேசுகையில், ``குடும்ப பிரச்னையை வீட்டில் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். கட்சி உடையக்கூடாது என்பதில் கட்சியின் தலைவர் உறுதியாக இருக்கிறார். எனவே கட்சி உடைவதை தவிர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். கட்சியில் பலரும் இதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

சஞ்சய் ராவத்

சிவசேனா(உத்தவ்) எம்.பி.சஞ்சய் ராவத்தும் சரத் பவார் அஜித் பவாருடன் பேசியதை நியாயப்படுத்தி இருக்கிறார். `அஜித் பவாரிடம் மீண்டும் மகாவிகாஷ் அகாடிக்கு வந்துவிடும்படி சரத் பவார் கேட்டிருக்கலாம்’ என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார். இதற்கிடையே சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 8 பேரும் எம்.பி.க்கள் 2 பேர் பா.ஜ.க.வில் சேர இருப்பதாக பிரதாப்ராவ் எம்.பி தெரிவித்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பெயரை குறிப்பிட மறுத்துவிட்டார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/whats-wrong-in-meeting-family-member-some-people-are-trying-to-ally-me-with-bjp-sharad-pawar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக