Ad

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

நெல்லை, சாந்தி நகர் மணிக்கூண்டு: 25 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லை; நிதி ஒதுக்கியும் பணி தொடங்காதது ஏன்?

நெல்லை, சாந்தி நகர் பகுதியில் இருக்கிறது மணிக்கூண்டு கடிகாரம். ஒரு காலத்தில் கோட்டூர் கிராமத்துக்கு நுழைவுவாயிலாகவும், அங்கு வசிப்பவர்கள், அரசு அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனம் அருகிலுள்ள அனைவருக்கும் சரியான நேரம் காட்டும் கடிகாரமாகவும், சாந்தி நகர் பேருந்துகளுக்கு முதன்மை அடையாளமாகவும் இருந்து வந்தது. ஆனால், இந்த மணிக்கூண்டு கடந்த 25 ஆண்டுக்கு மேலாக பராமரிக்கப்படவில்லை. மணிக்கூண்டிலுள்ள கடிகாரம் நேரம் காட்ட முடியாது பழுதடைந்த நிலையில், பல ஆண்டுகளாக காணப்படுகிறது. இன்றைக்கு பெரும்பாலானோர் கைகளில் வாட்ச்களும், செல்போன்களும் வந்துவிட்ட காலத்தில், மணிக்கூண்டின் அவசியம் இல்லைதான் என்றாலும், இது இந்தப் பகுதியின் அடையாளம் என்பதை மறுப்பதற்கு இல்லை.

மேலும், அந்த மணிக்கூண்டு கோபுரத்தைச் சுற்றிலும் ஏராளமான விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு மோசமான நிலையில் காணப்படுகிறது. மேலும் பராமரிப்பின்றி, சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருக்கிறது. எப்போதும் வேண்டுமானாலும் மணிக்கூண்டின் பகுதிகள் இடிந்து விழும் நிலையில், ஆபத்தை ஏற்படுத்துவதாகக் காணப்படுகிறது.

இது குறித்து குறிப்பிட்ட மணிக்கூண்டு இருக்கும் பகுதியின் வார்டு கவுன்சிலர் பால்ராஜ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாமன்ற கூட்டத்தில், பாளையங்கோட்டையின் நினைவுச் சின்னமாகிய சாந்திநகர் மணிக்கூண்டு பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும், அதைச் சீரமைத்து டிஜிட்டல் கிளாக் பொருத்தி நேரம் காட்டுவதற்குப் பயன்படும் வகையில் சீரமைத்துத் தருமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்.

இது குறித்து பால்ராஜிடம் கேட்டபோது, ``மாநகராட்சியில் மணிக்கூண்டைச் சீரமைப்பதற்காக ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டு, சீரமைக்கும் பணிக்குத் தயாராக இருக்கிறது. ஆனால், மணிக்கூண்டு அருகே ஏராளமான மின் இணைப்புகள் இருக்கின்றன. மணிக்கூண்டைச் சீரமைக்கும் பணி உயிர்ச் சேதமின்றி, பாதுகாப்பாக நடைபெற மின் இணைப்புகளை அகற்றக் கோரி மின்சார வாரியத்துக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். மின் இணைப்புகள் அகற்றிய பின்பு மணிக்கூண்டு சீரமைக்கும் பணி தொடங்கும்” என்று கூறினார்.



source https://www.vikatan.com/government-and-politics/governance/nellai-shanthi-nager-clock-tower-damage-and-work-not-started-till-now

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக