Doctor Vikatan: என் வயது 40. நான் எப்போதும் களைப்பாக உணர்கிறேன். என் கூந்தலும் சருமம் பொலிவின்றி இருக்கின்றன. புரதச்சத்துக் குறைபாடு காரணமாக இருக்கலாம் என்கிறார் மருத்துவர். புரதச்சத்துக்கும் இந்தப் பிரச்னைகளுக்கும் தொடர்பு இருக்குமா? சைவ உணவுப்பழக்கமுள்ள நான் புரதச்சத்துக் குறைபாட்டிலிருந்து மீள முடியுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் மெடிசின் நிபுணர் ரம்யா
ஒருவருக்குப் புரதச்சத்துக் குறைபாடு இருக்கும்போது அவர்கள் மிகவும் களைப்பாக உணர்வார்கள். கூந்தல் மெலியும். நகங்கள் உடையும். எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த முடியாமல் போகும். சிறுநீரகங்கள், கல்லீரல் போன்றவற்றின் இயக்கமும் பாதிக்கப்படும். பெண்களைப் பொறுத்தவரை புரதச்சத்து என்பது அடிப்படையான, அத்தியாவசியமான தேவை. புரதச்சத்து என்பது அத்தியாவசியமான அமினோ அமிலங்களில் இருந்து பெறப்படுவது. அது உணவிலிருந்து மட்டும்தான் நமக்குக் கிடைக்கும்.
புரதச்சத்து குறைபாடு என்பது உடல் ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமன்றி, சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். புரதச்சத்து குறைவாக எடுக்கும் நாள்களில் உங்களுடைய சருமமும் கூந்தலும் பொலிவிழந்து காணப்படுதையும், புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது உங்கள் சருமமும் கூந்தலும் ஆரோக்கியமாக இருப்பதையும் உங்களாலேயே உணர முடியும். இந்த விஷயத்தில் உங்களுக்கு நட்ஸ் மிகப் பெரிய அளவில் உதவும். பாதாம், அக்ரூட் போன்ற நட்ஸை தினமும் சிறிதளவு சாப்பிடலாம்.
புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுக்கும்போது கார்போஹைட்ரேட் குறைவாக உண்போம். அதன் விளைவாக உடல் எடை குறையும். அரிசி, கோதுமை உணவுகளை எடுக்கும்போது அதிகப்படியான கார்போஹைட்ரேட்டானது கொழுப்பாக உடலில் போய் சேர்கிறது. அதனால் எடை அதிகரிக்கிறது.
அதுவே போதுமான புரோட்டீன் உள்ள உணவுகளைச் சாப்பிடும்போது கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளைக் குறைவாகச் சாப்பிடுவதால் தானாக உடல் எடை குறைகிறது. கொழுப்பும் சேராது. தசைகளின் அடர்த்தியும் சிறப்பாக இருக்கும்.
தாவர உணவுகளிலிருந்து பெறப்படும் புரதச்சத்தை எடுப்பவர்கள், அசைவ உணவுகளிலிருந்து கிடைக்கும் புரதச்சத்தை எடுப்பவர்களைவிடவும் நீண்ட ஆயுளோடு வாழ்வதாக சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன.
அசைவ உணவுகளான மீன், சிக்கன், முட்டை போன்றவற்றில் புரதச்சத்து அதிகம். சைவத்தில் நட்ஸ், சோயா, பருப்பு போன்றவற்றில் அதிகம். பச்சைப் பட்டாணி, அவகேடோ போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/doctor-vikatan-dull-hair-and-skin-is-it-due-to-protein-deficiency
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக