Ad

வெள்ளி, 21 ஜூலை, 2023

Asia Cup 2023: வசனங்களை அள்ளிவிட்டால் மட்டும் போதுமா ஜெய் ஷா? ஆசியக் கோப்பையும் சில கேள்விகளும்!

ஆசியக்கோப்பைத் தொடர் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 17 வரை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவிருக்கிறது. கடந்த காலத்தைப் பொறுத்தவரையில் பாகிஸ்தானில் போட்டிகள் நடந்தால் பங்கேற்கமாட்டோம் என்பது பி.சி.சி.ஐ-யின் நிலைப்பாடாக இருந்திருக்கிறது என்பது கிரிக்கெட்டை தொடர்ந்து கவனிப்பவர்கள் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் ஆசியக்கோப்பைக்கான அட்டவணை வெளியாகியிருக்கிறது. அந்த அட்டவணை பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அதைப் பற்றிய அலசல் இங்கே...
ஆசியக்கோப்பை

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம், ஆப்கானிஸ்தான் என 6 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்க இருக்கின்றன. இந்த ஆறு அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. க்ரூப் A வில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் என மூன்று அணிகளும் க்ரூப் B யில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் என மூன்று அணிகளும் இருக்கின்றன. க்ரூப் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் க்ரூப்பில் உள்ள மற்ற அணிகளுடன் ஒவ்வொரு முறை மோத வேண்டும். அதாவது, இந்திய அணி பாகிஸ்தானுடனும் நேபாளத்துடனும் க்ரூப் சுற்றில் மோதும். இந்த க்ரூப் பிரிவின் முடிவில் இரண்டு க்ரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இந்த சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியுமே மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் மோதும். இந்தச் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குச் செல்லும்.

க்ரூப் சுற்றில் மொத்தம் 6 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. 3 போட்டிகள் இலங்கையிலும் 3 போட்டிகள் பாகிஸ்தானிலும் நடைபெறுகின்றன. க்ரூப் சுற்றில் இந்திய அணி ஆடும் 2 போட்டிகளுமே இலங்கையில்தான் நடைபெறுகிறது. பாகிஸ்தானில் இந்திய அணி ஒரு போட்டியைக் கூட ஆடவில்லை. இந்திய அணியைத் தவிர்த்து மற்ற அணிகள் அனைத்தும் பாகிஸ்தானில் ஒரு போட்டியாவது விளையாடுகிறார்கள். சூப்பர் 4 சுற்றிலும் மொத்தம் 6 போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த 6 போட்டிகளில் 5 போட்டிகள் இலங்கையில் நடைபெறவிருக்கின்றன. ஒரே ஒரு போட்டி மட்டும் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இதேபோன்ற சமயங்களில் க்ரூப் சுற்றின் முடிவில் க்ரூப் A வில் முதல் இடம் பிடிக்கும் அணிக்கும் க்ரூப் B யில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கும் போட்டி நடக்கும்.

அதேமாதிரி க்ரூப் B யில் முதல் இடம்பிடிக்கும் அணிக்கும் க்ரூப் A யில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கும் போட்டி நடைபெறும். இதுதான் வழக்கமாக நடைபெறுவது. ஆனால், இந்த முறை போட்டி அட்டவணையே ஒரு மாதிரி வித்தியாசமாக இருக்கிறது. அதாவது, க்ரூப் சுற்றின் முடிவில் முடிவு என்னவாக இருந்தாலுமே பாகிஸ்தான் A1 இடத்திலேயே இருக்கும். இந்தியா A2 இடத்திலேயே இருக்கும். இப்படி ஒரு அட்டவணை வடிவமைப்பே புதிதாக இருக்கிறது. A1 அணிக்கும் B2 அணிக்கும் இடையேயான சூப்பர் 4 போட்டிதான் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. எனில், முடிவுகள் எப்படி அமைந்தாலுமே இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லப்போவதே இல்லை. அதற்கேற்ற வகையில்தான் விநோதமாக அட்டவணை மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

பிசிசிஐ இன்னமும் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவதைப் பற்றி ஒரு தெளிவான அறிக்கையை வெளியிடவே இல்லை. பாகிஸ்தான் தரப்பில் இதுகுறித்து கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கிறது.
பாபர் அசாம் - ரோஹித் சர்மா
Jay Shah

ஜெய்ஷா பிசிசிஐ-யின் செயலாளர் மட்டுமல்ல. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும் கூட!

"இந்த ஆசியக்கோப்பை ஒருங்கிணைப்பின் அடையாளம். பல வேற்றுமைகளைக் கொண்ட நாடுகளை ஒற்றுமையாக ஒன்றிணைத்திருக்கிறோம். இந்த கிரிக்கெட் திருவிழாவை அனைவரும் கைக்கோர்த்து கொண்டாடுவோம். நம்மையெல்லாம் இணைக்கும் இந்த கிரிக்கெட் எனும் தொடர்பை கொண்டாடுவோம்."

ஆசியக்கோப்பை அட்டவணையை வெளியிட்டுவிட்டு ஜெய் ஷா இப்படித்தான் ட்வீட் செய்திருந்தார்.

ஆனால், அவர் வெளியிட்டிருக்கும் அட்டவணையின்படியே இந்தியா பாகிஸ்தானுடன் கைகோக்கவில்லை. ஒருவேளை, பாகிஸ்தானுடன் கைகோக்கும் சூழல் ஏற்பட்டாலும் அதைச் செய்யுமா என எந்த உறுதியும் இல்லை. அப்படியிருக்க வெறும் வாய்ச்சொல்லாக மட்டும் வசனங்களை அள்ளி விடுவது ஏன் என்றும் புரியவில்லை.

"இந்தியாவுக்குச் சென்று கிரிக்கெட் ஆடுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், ஆசியக்கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர மறுத்து பொதுவான மைதானத்தில்தான் ஆடுவோம் எனக் கூறினால், நாங்களும் உலகக்கோப்பைக்காக இந்தியாவிற்கு வராமல் பொதுவான இடத்தில் போட்டியை நடத்தச் சொல்லி கேட்போம்." என சில நாள்களுக்கு முன்புதான் பாகிஸ்தானின் விளையாட்டுத் துறை அமைச்சர் ஏசான் பேசியிருந்தார். ஏற்கெனவே, இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்பது கிரிக்கெட் என்பதை கடந்து பெரும் அரசியலாக மாறி நிற்கிறது. இப்படியொரு சூழலில் தொடர்ச்சியாக பிரச்னையை நீட்டிக்கச் செய்யும் வகையிலான செயல்களில் இறங்குவதை இருதரப்பும் தவிர்க்க வேண்டும். பிசிசிஐ தரப்பிலும் ஒரு தெளிவான அறிக்கையை இதுசார்ந்து வெளியிட்டாக வேண்டும்.

என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.



source https://sports.vikatan.com/cricket/questions-on-asia-cup-schedule

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக