Ad

வெள்ளி, 14 ஜூலை, 2023

உச்சத்தில் பங்குச் சந்தை... கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது!

இந்தியப் பங்குச் சந்தை தற்போது உச்சத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் இறக்கம் காணத் தொடங்கிய சந்தை, இந்த ஆண்டு மார்ச் மாதம் உயரத் தொடங்கி, தொடர்ந்து அதிகரித்து, இப்போது உச்சத்தில் இருக்கிறது.

கடந்த 13-ம் தேதி அன்று சென்செக்ஸ் 65558 புள்ளிகளைத் தொட்டும், நிஃப்டி 19413 புள்ளிகளைத் தொட்டும் வர்த்தகம் ஆனது. அடுத்த சில வாரங்களில் சென்செக்ஸ் 70000 புள்ளிகளையும் நிஃப்டி 20000 புள்ளிகளையும் எட்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. முதலீட்டாளர்கள் அனைவரும் கொண்டாட்ட மனநிலையுடன் இருக்கும் இந்த நேரத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு சில முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

சந்தைப் புள்ளிகள் மிகவும் அதிகரித்துவிட்டது; எனவே, முதலீட்டை மொத்தமாகத் திரும்ப எடுத்துவிடலாம் என்கிற முடிவை முதலீட்டாளர்கள் இந்த சமயத்தில் எடுக்கக் கூடாது. ஏற்கெனவே செய்த முதலீடு நல்ல லாபத்தில் இருக்கும் இந்த நிலையில், மிக அவசியமாகப் பணம் தேவை என்றால் மட்டும் கொஞ்சம் பணத்தை எடுக்கலாம். அல்லது, லாபத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து தனியாக ஒதுக்கி வைக்கலாமே தவிர, முதலீடு செய்த பணம் மொத்தத்தையும் எடுக்கக் கூடாது.

சந்தை உச்சத்தில் இருக்கும்போதுதான் புதிய முதலீட்டாளர்கள் தங்களிடம் உள்ள மொத்தப் பணத்தையும் முதலீடு செய்வார்கள். இந்தத் தவற்றையும் புதிய முதலீட்டாளர்கள் செய்யக் கூடாது. இந்த சமயத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்போகிறவர்கள் மொத்தப் பணத்தையும் ஒரு தவணையில் முதலீடு செய்யாமல், சந்தையின் போக்கு எப்படிச் செல்கிறது என்பதைப் பார்த்து, பகுதி பகுதியாக முதலீடு செய்வதுதான் சரியான வழிமுறை. ஒருவேளை, நஷ்டம் வந்தாலும் குறைவான இழப்புகளுடன் தப்பிக்க ஏதுவாக இருக்கும்!

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தவர்கள்கூட தங்கள் முதலீடு அதிக லாபம் தந்திருப்பதைப் பார்த்து, மொத்த முதலீட்டையும் திரும்ப எடுத்து, இரண்டாவது வீடு வாங்குவது, இன்னும் சில பவுன் தங்கநகைகள் வாங்குவது என்கிற தவற்றைச் செய்யக் கூடாது. காரணம், நீண்ட கால அடிப்படையில் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அதிக லாபம் தந்துள்ளது என்பதே கடந்த கால வரலாறு. வசிக்க ஒரு வீடு, ஆசை அலங்காரத்துக்கு கொஞ்சம் தங்க நகைகள் என்கிற அளவுக்கு வைத்திருப்பதே சரியான முதலீட்டு அணுகுமுறையாக இருக்குமே தவிர, எல்லாப் பணத்தையும் ஒரே ஒரு முதலீட்டில் (மியூச்சுவல் ஃபண்ட் உட்பட) வைத்துக்கொள்வது சரியான அணுகுமுறை அல்ல. நம் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப பல முதலீடுகளில் முதலீட்டைப் பிரித்து முதலீடு செய்வதே சரி!

சந்தை இப்போது உச்சத்தில் இருக்கிறது. இனி அது இறங்கினாலும், மீண்டும் மேலே செல்லும். அப்போது இன்னும் கூடுதலான லாபத்தை நம்மால் அடைய முடியும். இந்த உண்மையைப் புரிந்துகொண்டு பங்குச் சந்தை முதலீட்டைத் தொடர்ந்து செய்வோம், கூடுதல் விழிப்புடன்!

- ஆசிரியர்



source https://www.vikatan.com/personal-finance/share-market/guidance-for-share-market-investment-3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக