Ad

ஞாயிறு, 23 ஜூலை, 2023

தேசியக் கல்விக் கொள்கை: அமல்படுத்த தீவிரம் காட்டும் ஆர்.என் ரவி... மீண்டும் திமுக அரசு vs ஆளுநர்?!

நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில், கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதை, ஒரு சில மாநிலங்கள், ஏற்றுக் கொண்டபோதும், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனினும், ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதில், உறுதியாக உள்ளார்.

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து, தனியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர்களுடன் கடந்த 20-ம் தேதி ஆலோசனை நடத்தினார். சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், கவர்னரின் செயலர் ஆனந்த் ராஜ், விஷ்ணு பட்டேல் ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

தனியார் பல்கலைகழகங்களை சேர்ந்த, 20-க்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், அந்தந்த பல்கலைக்கழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தப்படுவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஆளுநரிடம் தெரிவித்தனர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தேசிய கல்விக்கொள்கையை ஆர்வத்துடன் செயல்படுத்தும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்தார். தேசிய கல்வி கொள்கை என்பது சுதந்திரத்திற்கு பின் உருவாக்கப்பட்ட கொள்கை என்பது மட்டுமல்லாமல் புரட்சிகரமான மாற்றத்திற்கான கொள்கை என ஆளுநர் ரவி கூறியுள்ளார். அதோடு தொழில்நுட்ப பாடப்புத்தகங்கள், பாடத்திட்டங்கள் ஆகியவற்றை தமிழில் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

மேலும், ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக குறிப்பிட்ட ஆளுநர், இதனை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்கள் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கவும், தொழிற்சாலைகளின் தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இதனையடுத்து தேசிய விடுதலைக்கு போராடிய வீரர்கள் பலர் அறியப்படாமல் இருப்பதாகவும், அவர்களை அடையாளம் கண்டு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தவும் துணைவேந்தர்களுக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து தேசிய கல்வி கொள்கையை ஆளும் தி.மு.க அரசு எதிர்த்து வரும் நிலையில், ஆளுநரின் இந்த நடவடிக்கையால் தமிழக அரசியல் சூழலில் மீண்டும் ஆளுநர் vs தி.மு.க அரசு என விவாத பொருளாக மாறியுள்ளது.

தமிழ் கா.அமுதரசன் - திமுக

இது தொடர்பாக நம்மிடம் பேசிய திமுக மாணவரணி மாநில துணைச் செயலாளர் தமிழ் கா.அமுதரசன், “தேசிய கல்வி கொள்கையை திமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அதனால் மாநில கல்விக்கென்று தனியாக ஒரு குழுவையும் அமைத்திருக்கிறது திமுக அரசு. இதெல்லாம் தெரிந்தும் ஆளுநர் தொடர்ந்து அடாவடித்தனமான அரசியலை முன்னெடுத்து வருகிறார். இதை அவர் செய்வதற்கான நோக்கம், ஒவ்வொரு முறையும் பாஜக-வுக்கு பின்னடைவு ஏற்படும் போதெல்லாம் அதை திசை திருப்புவதற்கே இவ்வாறு நடந்து கொள்கிறார். மணிப்பூர் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாக இருக்கிறது. நாடே கொந்தளித்திருக்கிறது. அதை திசை திருப்ப வட இந்தியாவில் ராமர் கோயில் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

இங்கு தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்சிட்டிவான விஷயத்தை தொட்டு பார்க்க வேண்டும் என்று பா.ஜ.க-வுக்கு அஜெண்டா கொடுத்திருக்கிறார்கள். அதன்படி அண்ணாமலை சரியாக வேலை செய்யவில்லை என்பதற்காக ஆர்.என்.ரவியை வைத்து செய்கிறார்கள். ஆளுநர் தன்னிச்சையாக துணை வேந்தர்கள் மாநாடு நடத்துவது , அங்கு கொள்கை சார்ந்து பேசுவதை எல்லாம் தவிர்க்க வேண்டுமென்று சொல்கிறோம். ஆனால், அவரின் தற்குறித்தனமான அரசியல் சாயம் வெளுத்துவிட்டது என்பது கூட தெரியாமல் தொடர்ந்து அதையே செய்து வருகிறார்.

அதேநேரத்தில், தமிழ்நாட்டில் அவர்களின் கொள்கை, சித்தாந்தம், மக்கள் விரோத சட்டங்களை அனுமதிக்கவே முடியாது. அதை ஏற்று கொள்ள கூடிய அரசாக தமிழ்நாட்டில் இருக்க கூடிய அரசு இல்லை. இதை பல முறை அரசே நிரூபித்துவிட்டது. பல முறை வெளிப்படையாக அறிவித்தும்விட்டது. இருந்தாலும், அரசியல் ஆதயத்துக்காக பா.ஜ.க-வை காப்பாற்றவே இதையெல்லாம் மீறி மீண்டும் மீண்டும் ஆளுநர் செய்து வருகிறார். இது ஒரு போதும் எடுபடாது” என்கிறார்.

“மாநில அரசே புதிய கல்வி கொள்கை திட்டத்திலிருந்து நிறைய விஷயங்களை பின்பற்றி வருகிறார்கள். இதுவரை எந்த அம்சத்தை எதிர்கிறோம் என்று தெளிவாகவும் இவர்கள் சொல்லவில்லை. அதேசமயத்தில் புதிய கல்வி கொள்கையில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் புறம்தள்ளவுமில்லை. இதற்கும் மணிப்பூருக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது” என்கிற கேள்வியினை முன் வைக்கிறார் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா. மேலும் தொடர்ந்தவர், “சில விஷயங்கள் மாநிலங்கள் மூலமாக நடைமுறைக்கு கொண்டு வருவது. சில விஷயங்கள் பல்கலைக்கழகங்கள் மூலம் நடைமுறைப்படுத்துவது.

எஸ்.ஜி.சூர்யா

சில விஷயங்களுக்கு மாநில அரசின் அனுமதி தேவை இருக்கும். சில விஷயங்களுக்கு தேவை இருக்காது. அவரவர் வரையறைக்குள் என்ன இருக்கிறதோ அதை பின்பற்றிதான் செய்து வருகிறார்கள். அதன்படிதான் ஆளுநரும் இப்போது செய்து வருகிறார். இதை வைத்து எப்படி பா.ஜ.க-வின் சித்தாந்தத்தை பரப்புகிறார் என்று சொல்ல முடியும். ஒரு லட்சம் பரிந்துரைகள் சேர்ந்ததுதான் புதிய கல்வி கொள்கை. அதில் எந்த விஷயத்தை எதிர்க்கிறார்கள் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். பொத்தம் பொதுவாக எதிர்க்கிறோம், எதிர்க்கிறோம் என்று பேசுவதில் புரோஜனம் இல்லை. இதை அரசியலுக்காக பேசும் பேச்சாகத்தான் பார்க்க முடியுமே தவிர கொள்கை சார்ந்தோ, உணர்வு சார்ந்த நடவடிக்கையாக இதை பார்க்கவே முடியாது” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/governor-ravi-is-serious-about-implementing-the-national-education-policy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக