Ad

வெள்ளி, 28 ஜூலை, 2023

முதலீட்டில் மந்தை மனப்பான்மை கூடாது!

மனிதர்களிடம் இருக்கும் பல்வேறு மனச் சாய்வுகளில் (Bias) முக்கியமானதாக இருக்கிறது மந்தை மனப்பான்மை. ஃபாஸ்ட் புட் கடை வைத்து இரண்டு பேர் ஜெயித்துவிட்டால், உடனே 200 பேர் ஃபாஸ்ட் புட் கடைகளைத் திறந்துவிடுவார்கள். கார் வைத்துக்கொள்வதுதான் கெளரவம் என்று நினைத்து அக்கம்பக்கத்தில் கார் வாங்கினால், உடனே பலரும் கார்களை வாங்கத் தொடங்கிவிடுவார்கள்.

எல்லா விஷயங்களிலும் நிலவும் இந்த மந்தை மனப்பான்மை, முதலீட்டிலும் முக்கியமான பங்கு வகிக்கிறது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம், அண்மைக் காலங்களில் ஸ்மால்கேப் பங்குகளில் பெருமளவு பணம் முதலீடு செய்யப்பட்டு வருவதுதான்.

கடந்த ஜூனில் ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு வந்த முதலீடு ரூ.57,420 கோடி. இதில் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் மட்டும் ரூ.5,472 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, கடந்த மூன்று மாத காலத்தில் நிப்பான் ஸ்மால்கேப் ரூ.2,400 கோடி, குவான்ட் ஸ்மால்கேப் ரூ.1,360 கோடி, ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ரூ.1,300 கோடி, டாடா ஸ்மால்கேப் ரூ.1,100 கோடி என முதலீடு செய்திருக்கிறார்கள் முதலீட்டாளர்கள்.

கடந்த காலங்களில் ஸ்மால்கேப் வகை ஃபண்டுகள் மிக மிக அதிகமான லாபம் தந்ததே இந்த வகை ஃபண்டுகளை முதலீட்டாளர் தேடிச் செல்ல முக்கியமான காரணம். உதாரணமாக, நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் 23.95%, எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் 22.18%, குவான்ட் ஸ்மால்கேப் 21.26%, கோட்டக் ஸ்மால்கேப் 20.20% லாபம் தந்துள்ளன. 15% முதல் 20% வரை லாபம் தந்த ஸ்மால்கேப் ஃபண்டுகள் இன்னும் பல உள்ளன. அபரிமிதமான இந்த வருமானம் பலரையும் ஸ்மால்கேப் ஃபண்டுகள் பக்கம் சுண்டி இழுக்கிறது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்று வரும்போது கடந்த கால வருமானத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து முதலீடு செய்யக் கூடாது. பங்கு சார்ந்த எந்த வகை ஃபண்ட் திட்டமாக இருந்தாலும், அதில் உள்ள பங்குகள் எதிர்காலத்தில் எந்தளவுக்கு லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது என்பதை ஆராய்ந்து, அந்த வகை ஃபண்ட் திட்டத்தை முதலீட்டாளர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

மேலும், ஸ்மால்கேப் ஃபண்டுகள் குறுகிய காலத்தில் அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருக்கும் குணம் கொண்டவை. இந்த ரிஸ்க் நமக்கு ஏற்றதாக இருக்குமா என்பதைப் பார்த்துதான் அதில் முதலீடு செய்ய வேண்டும். தவிர, நம்மிடம் உள்ள மொத்தப் பணத்தையும் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யக் கூடாது. நம் போர்ட்ஃபோலியோவில் எவ்வளவு சதவிகிதம், ஸ்மால்கேப் ஃபண்டுகளில் இருக்கலாம் என்பதை முடிவு செய்து அதற்கேற்ப அதில் முதலீடு செய்ய வேண்டும்!

இந்த விஷயங்களை எல்லாம் கவனிக்காமல் ஸ்மால்கேப் ஃபண்டைத் தேர்வு செய்வது, நம் உடம்புக்கு ஒப்புக்கொள்ளாத உணவை சாப்பிட்டுவிட்டு அவஸ்தைப் படுவது மாதிரிதான்.

முதலீடு விஷயத்தில் மந்தை மனப்பான்மையைத் தவிர்த்து செயல்பட்டால், நாம் என்றும் வருத்தப்பட வேண்டிய அவசியம் இருக்காது!

- ஆசிரியர்



source https://www.vikatan.com/personal-finance/money/guidance-for-investment-strategy-2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக